தந்தை பெரியார் அவர்கள் “கடவுள் மறுப்பு வாசக”ங்களை திருவாரூர் மாவட்டம் விடயபுரத்தில் 58 ஆண்டுகளுக்கு முன் வழங்கிய நாள் இன்று (24.05.1967)

2 Min Read

1967 ஆம் ஆண்டில் இதே தேதியில்தான் (மே 24) கடவுள் மறுப்பு வாசகங்கள் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களால் உலகுக்குப் பிரகடனப்படுத்தப்பட்டதாகும்.

அன்றைய தஞ்சாவூர் மாவட்டம் (இப்பொழுது திருவாரூர் மாவட்டம்) திருமதிக் குன்னம் விடயபுரம் என்னும் குக்கிராமத்தில் உயர்திரு வி.அப்புசாமி (நாயுடு) அவர்களுக்குச் சொந்தமான பூங்குடில் பூங்காவில் சுயமரியாதை பகுத்தறிவுப் பிரச்சாரப் பள்ளி தொடக்க விழா நடைபெற்றது (24.5.1967).

திரு.வி. அப்புசாமி (நாயுடு) அவர்கள் வைதிகர். ஆனாலும், தந்தை பெரியார் அவர்களின்மீதும் ‘பக்தி’ கொண்டவர். தமது தோட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் தங்குவதற்கென்றே பூங்குடில் பூங்கா (ஆசிரமம்போல்) அமைக்கப்பட்டு இருந்தது. கோடை வெயிலின் தாக்குதலில் தந்தை பெரியார் சிரமப்படக்கூடாது என்கிற அளவுக்கு அந்த நிலழக்கிழாரின் நெஞ்சம் தந்தை பெரியார்மீது பற்றும், மதிப்பும் கொண்டது.

முகாம் நடந்த அத்தனை நாள்களும் (மே 24 முதல் 31 வரை) தந்தை பெரியார் தங்கி இருந்து பயிற்சிப்பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தினார்.

கடவுள் மறுப்பு, மத மறுப்பு, ஆத்மா மறுப்பு என்பதெல்லாம் தந்தை பெரியார் அவர்களிடம் நெடுங்காலமாகவே கொள்கையைச் சார்ந்தே இருந்து வந்தன என்றாலும், அந்தப் பயிற்சிப் பள்ளியில்தான் (24.5.1967) கடவுள் மறுப்பு வாசகங்களை முறைப்படுத்தி உலகுக்கே அறிவித்தார். அந்த வகையில் விடயபுரமும், இந்த நாளும் வரலாற்றுக் கல்வெட்டுகளாகும்.

இதுகுறித்து ‘விடுதலை’யில் (7.6.1967) தந்தை பெரியார் கையொப்பமிட்டு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

“கடவுள் மறுப்பு, என்பதை நமது இயக்க, கழக சம்பந்தமான எந்தக் கூட்ட நிகழ்ச்சிகளிலும்,

முதல் நிகழ்ச்சியாக “கடவுள் மறுப்பு’’ என்ற சொல்லைக் குறிப்பிட்டு, பிறகு மற்ற நிகழ்ச்சிகளைக் குறிப்பிடவேண்டும்.

பகுத்தறிவற்ற மூட நம்பிக்கை மக்கள் தங்கள் நிகழ்ச்சிகளில் முதலாவது நிகழ்ச்சியாக எப்படி “கடவுள் வணக்கம்’’ என்ற சொல்லைப் பயன்படுத்தி, அதை ஒரு நிகழ்ச்சியாக நடத்துகிறார்களோ, அதேபோல், நாம் கூட்டம் தொடங்கப்பட்டவுடன், முதல் நிகழ்ச்சியாக “கடவுள் மறுப்பு’’ என்று தலைவர் கூறவேண்டும்.

“கடவுள் இல்லை, கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை’’ என்று கூறவேண்டும். கூட்டத்தில் உள்ள மக்கள் உட்கார்ந்தபடியே அதுபோலவே பின் ஒலி கொடுத்துக் கூறவேண்டும்’’ என்று தந்தை பெரியார் குறிப்பிட்டுள்ளார். அதனைக் கழகம் பின்பற்றி வருகிறது.

இது ஒரு முக்கியமான வரலாற்றுக் குறிப்பாகும்.

தந்தை பெரியார் சிலை பீடங்களில் பெரும்பாலும் இந்தக் கடவுள் மறுப்பு வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த வாசகத்தை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

தலைமை நீதிபதி எம்.எம். இஸ்மாயில் அவர்கள் யாருக்குச் சிலை வைக்கப்படுகிறதோ அவரின் கருத்துகளை சிலைப்பீடத்தில் பொறிக்கப்படுவது சரியானதே என்று வழக்கைத் தள்ளுபடி செய்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *