ஹலோ பண்பலைக்குத் தமிழர் தலைவர் ஆசிரியரின் பேட்டி

viduthalai
9 Min Read

சென்னை, மே 24  ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சி,
ஆர்.எஸ்.எஸ். ஆட்சி ஏற்பட்டதுமுதல் மதவெறிப்படி நடந்து வருகிறார்கள். தத்துவங்கள் என்று சொல்வது Philosophy. அதை Religion  (மதம்) என்று ஆக்கினார்கள். மதம் வேறு; தத்துவம் வேறு. அதேபோல, வரலாறு வேறு; புராணங்கள் வேறு. வரலாறு என்பது நடந்தவை, உண்மையானவை; புராணங்கள் என்றால், புரட்டு, கற்பனை.இவர்கள் புராணங்களை வரலாறாக்க முனைகிறார்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.

Contents
‘‘ஹலோ பண்பலைக்குத்’’ தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி!ஒரு பக்கத்தில் பிரச்சாரம் நடக்கவேண்டும்; இன்னொரு பக்கத்தில் சட்டம் வரவேண்டும்!சமத்துவ உணர்வின் அடையாளங்கள்!காந்தியாருக்கும், பெரியாருக்கும் கருத்து வேறுபாடு ஏன்?பொதுக் கிணறு, பொதுக் குளம்தான் இருக்கவேண்டும்!இனக்கலவரமே இல்லாத சிங்கப்பூர்!ஜாதிப் பிரச்சினை வராது – தாழ்வு மனப்பான்மையும் வராது!பாடப் புத்தகத்தில் இஸ்லாமிய மன்னர்களுடைய பெயர்களையும், வரலாறுகளையும் நீக்கிவிட்டு…ஒன்றியத்தில் ஆர்.எஸ்.எஸினுடைய ஆட்சி நடக்கிறது!வரலாறு வேறு; புராணங்கள் வேறு!  புராணங்கள் என்றால், புரட்டு, கற்பனை!ஜோதிடத் தொழிலையே விட்டுவிடுகிறேன் என்றார் ஒரு ஜோதிடர்!கம்பர் விழாவில், ‘ஜெய் சிறீராம்’ சொல்லக்கூடாதா?கம்பனைவிட புளுகுவதில் கெட்டிக்காரர்!அரசமைப்புச் சட்டத்திற்கு மாறான விரோத மனப்பான்மை!பக்தியின் பெயரால் மூடநம்பிக்கையைப் பரப்புகிறார்கள்!மனிதநேயம் உள்ள எவரும் தீவிரவாதத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்!மனிதநேயம்தான் ஓங்கவேண்டும்!தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டால், அதனைத் திருத்திக் கொள்ளவேண்டும்!

‘‘ஹலோ பண்பலைக்குத்’’
தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி!

கடந்த 30.4.2025 அன்று ஹலோ பண்பலைக்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  பேட்டியளித்தார்.

22.5.2025 அன்று ‘விடுதலை’யில் வெளிவந்த பேட்டியின் தொடர்ச்சி வருமாறு:

‘‘ஒரே ஜாதி’’ என்று சொல்லுங்களேன், உங்களை நாங்கள் வரவேற்கிறோம்!

தமிழர் தலைவர்: ஜாதியை ஒழிக்கவேண்டும் என்பது தான் எங்களுடைய திட்டம்.

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு, ஒரே மதம், ஒரே மொழி என்று சொல்பவர்களிடம் ஒரு கேள்வியை நாங்கள் கேட்டோம்.

எல்லாம் ஒரே, ஒரே என்று சொல்கிறீர்களே, ‘‘ஒரே ஜாதி’’ என்று சொல்லுங்களேன், உங்களை நாங்கள் வரவேற்கிறோம்; உங்களுக்கு மாலை போட்டு வரவேற்கிறோம் என்றோம்.

பிரதமர் இதைச் சொல்லட்டும்; ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சொல்லட்டும்.

ஜாதி வேற்றுமை கூடாது; தீண்டாமை கூடாது என்ற அளவில்தான் நிறுத்திக் கொள்கிறார்களே தவிர, ‘ஜாதி ஒழியவேண்டும்’ என்று சொல்லமாட்டார்கள்.

அம்பேத்கர்தான் சொன்னார், ‘‘ஜாதி அழியவேண்டும்’’ என்று!

ஜாதி ஒழியவேண்டும் என்பதற்காகப் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அப்படியிருந்தாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆணவக் கொலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதற்கு மாற்றாக, பெருமளவில் ஜாதி மறுப்புத் திருமணங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஒரு பக்கத்தில் பிரச்சாரம் நடக்கவேண்டும்; இன்னொரு பக்கத்தில் சட்டம் வரவேண்டும்!

ஆகவேதான், ஜாதி ஒழியவேண்டும் என்பதற்கான பிரச்சாரங்களை நாங்கள் செய்துகொண்டிருக்கின்றோம். ஒரு பக்கத்தில் பிரச்சாரம் நடக்கவேண்டும்; இன்னொரு பக்கத்தில் சட்டம் வரவேண்டும்.

இந்த இரண்டும் இணைந்தால்தான், வெற்றி பெற முடியும்.

வெறும் பிரச்சாரம் செய்தால் மட்டும் முடியாது; வெறும் சட்டம் இயற்றினால் மட்டும் முடியாது.

சமத்துவ உணர்வின் அடையாளங்கள்!

இரண்டும், ‘‘ஆர்மோனியஸ் பிளண்ட்’’  (Harmonious Blend)  என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள் – ‘‘இணக்க மான கலவை’’ இருந்தால்தான் வரும். இப்போது அது வந்திருக்கிறது; மக்களும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள்.

இனிமேல் யாரையும் அதுபோன்று அடை யாளப்படுத்திக் காட்ட முடியாது.

கலைஞரால் உருவாக்கப்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரங்கள், சமத்துவ உணர்வின் அடையாளங்கள்.  நீண்ட நாள்களுக்கு முன்பு ஒரு செய்தி –  பெரியார் அவர்கள், நீண்ட காலத்திற்கு முன்பு மிக முக்கியமான ஒரு விஷயத்தைச் சொன்னார்.

தனியே அவர்களைப் பிரித்தார்கள். அதற்கு என்ன அடையாளம் என்றால், தனிக் கிணறு, தனிக் குளம் என்று தனியே வைத்திருந்தார்கள்.

காந்தியாருக்கும், பெரியாருக்கும்
கருத்து வேறுபாடு ஏன்?

இதில்தான் காந்தியாருக்கும், பெரியாருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு!

காந்தியார் ‘‘அவர்களுக்கென்று தனிக் கிணறு வெட்டிக் கொடுங்கள்; அவர்களுடைய தாகம் தீரும்’’ என்றார்.

ஆனால், தந்தை பெரியார், ‘‘அந்த மக்கள் இறந்துபோனாலும் சரி, அவர்கள் பேதப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டு வாழக்கூடாது’’ என்றார்.

‘‘அவர்களுக்குத் தனிக் கிணறு வைத்தீர்கள் என்றால், நிரந்தரமாக அந்தக் கிணறு அவர்களுடைய கிணறு என்று ஆக்கி ஒதுக்கிவிடுவார்கள்.

பொதுக் கிணறு, பொதுக் குளம்தான் இருக்கவேண்டும்!

ஆகவே, தனிக்கிணறு, தனிக் குளம் இருக்கக்கூடாது; பொதுக் கிணறு, பொதுக் குளம்தான் இருக்கவேண்டும். அதில் எல்லோரும் தண்ணீர் எடுக்கவேண்டும்’’ என்று தந்தை பெரியார் சொன்னார்.

அரசாங்கம் சார்பில் அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும்போதுகூட, தனிப்பகுதியில் வீடு கட்டிக் கொடுக்கக் கூடாது.

எத்தனை மாடி வீடு கட்டி, அவர்களுக்கு ஏர்கண்டிஷன் போட்டுக் கொடுத்தாலும், அது அவர்களுக்குரிய தனி இடம் என்று இருக்கக்கூடாது.

தேவைப்படும்போது அவர்களுக்குரிய அடையா ளத்தைக் காட்டுவார்கள்.  தனியாக  இருக்கக்கூடாது.

உதாரணமாக, மூன்று சமுதாயத்தினர் வாழக்கூடிய சிங்கப்பூரை எடுத்துக்கொண்டால், லீ குவான் யூ அவர்கள், அதில் மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்.

இனக்கலவரமே இல்லாத சிங்கப்பூர்!

சீனர்கள், மலாய்க்காரர்கள், இந்தியர்கள் என்ற பெய ரால் தமிழர்கள். அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம், மிகச் சிறப்பானதாகும். எல்லோருக்கும் வீடு கட்டிக் கொடுக்கிறது சிங்கப்பூர் அரசாங்கம்!

அந்த வீடுகளை எப்படிக் கொடுப்பார்கள் என்றால், ஒரு பிளாக்கில் ஒரு மலாய்க்காரர்; அதற்கடுத்து ஒரு சீனர்; அதற்கடுத்து ஒரு தமிழர்.

இவர்கள் வீட்டுத் திருவிழாவிற்கு, அவர்கள் சாப்பாடு அனுப்புவார்கள். ஒரு வீட்டில், இன்னொரு வீட்டுக் குழந்தையை விட்டுவிட்டு, வெளியில் செல்வார்கள். இப்படி இருந்தால், இனக்கலவரமே வராது.

ஜாதிப் பிரச்சினை வராது –
தாழ்வு மனப்பான்மையும் வராது!

அதுபோன்று, நம்மூரிலும் செய்யவேண்டும். எல்லோ ரும் கலந்து கலந்து வீடுகளைக் கொடுக்கவேண்டும். அப்படி இருந்தால், ஜாதிப் பிரச்சினை வராது. தாழ்வு மனப்பான்மையும் வராது.

ஆனால், இன்றைக்கு கோவிலுக்குள் இதுவரை யில்தான் போகவேண்டும்; அங்கே போகக்கூடாது என்று பிரித்துப் பிரித்து வைத்திருக்கிறார்கள் பாருங்கள், அது இன்னமும் ஜாதி இருக்கிறது.

இவையெல்லாம் ஒழிந்தால்தான், அந் நிலை வர முடியும். சட்டம் போட்டார்கள் என்றால், பெருமளவிற்கு அதில் வெற்றி பெற முடியும்.

‘காலனி’ என்ற சொல்லை ஒழித்தல் என்பது  முதற்கட்டம். எப்படி பொது சுடுகாடு முக்கியமோ, அதுபோன்று இதுவும் முக்கியம்.

பாடப் புத்தகத்தில் இஸ்லாமிய மன்னர்களுடைய பெயர்களையும், வரலாறுகளையும் நீக்கிவிட்டு…

நெறியாளர்: என்.சி.இஆர்.டி. ஏழாம் வகுப்புப் புத்த கத்தில், அக்பர் மாதிரியான இஸ்லாமிய மன்னர்களுடைய பெயர்களையும், வரலாறுகளையும் நீக்கிவிட்டு, இந்திய மன்னர்களுடைய பெயர்களைச் சேர்த்திருக்கிறார்களே, அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

ஒன்றியத்தில் ஆர்.எஸ்.எஸினுடைய ஆட்சி நடக்கிறது!

தமிழர் தலைவர்: ஆர்.எஸ்.எஸினுடைய ஆட்சி நடக்கிறது; ஆர்.எஸ்.எஸினுடைய கொள்கை அதுதான்.

ஆர்.எஸ்.எஸ். கொள்கை என்ன என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டுமானால், கோல்வால்கர் எழுதிய ‘‘பஞ்ச் ஆஃப் தாட்ஸ்’’ என்ற நூலைப் படித்தால் தெரிந்து கொள்ளலாம்.

அதில் முதல் எதிரி யார்? என்பதை வெளிப்படை யாகவே குறிப்பிடுகிறார்.

முஸ்லிம்கள்

இரண்டாவது எதிரி – கிறிஸ்தவர்கள்

மூன்றாவது எதிரி – கம்யூனிஸ்டுகள், நாத்திகர்கள்.

1, 2, 3 என்று பதிவு செய்திருக்கிறார்.

இதைக் கருத்தில் கொண்டுதான், வரலாற்றை மாற்றுகிறார்கள். இது தவறான ஒன்றாகும்.

ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சி, ஆர்.எஸ்.எஸ். ஆட்சி என்றைக்கு ஏற்பட்டதோ, அன்றிலிருந்து மதவெறிப்படி நடந்து வருகிறார்கள். தத்துவங்கள் என்று சொல்வது Philosophy. அதை Religion  (மதம்) என்று ஆக்கினார்கள்.

மதம் வேறு; தத்துவம் வேறு.

வரலாறு வேறு; புராணங்கள் வேறு!  புராணங்கள் என்றால், புரட்டு, கற்பனை!

ஆனால், அவர்கள் என்ன செய்தார்கள், மதத்தைத் தத்துவமாக்குகிறார்கள்.

அதேபோல, வரலாறு வேறு; புராணங்கள் வேறு.

வரலாறு என்பது நடந்தவை, உண்மையானவை; புராணங்கள் என்றால், புரட்டு, கற்பனை.

இவர்கள் புராணங்களை வரலாறாக்க முனைகிறார்கள்.

அதேபோன்று சயின்ஸ், சூடோ சயின்ஸ் (Pseudoscience)

வானசாஸ்திரம் (astronomy) என்பது சயின்ஸ், அறிவியல். ஆனால், ஜோதிடம் (astrology) என்பது அறிவியல் அல்ல.

தினப்பலன், வாரப் பலன் வெளியிடுகின்ற நாளிதழ்களை எடுத்துப் பாருங்கள். நான்கு பத்திரிகை களை எடுத்து ஒன்றாகப் பார்த்தீர்களென்றால், தெளிவாக விளங்கும் உங்களுக்கு.

ஒரு பத்திரிகையில் இன்று லாபம் என்றும், இன்னொரு பத்திரிகையில் இன்று இழப்பு என்றும், மற்றொரு பத்திரிகையில் மகிழ்ச்சி என்றும் வேறு வேறு மாதிரிதான் சொல்லியிருப்பார்கள்.

இரண்டும், இரண்டும் யார் கூட்டினாலும் நான்குதான் வரும்.

ஜோதிடத் தொழிலையே விட்டுவிடுகிறேன் என்றார் ஒரு ஜோதிடர்!

ஒரு பிரபல ஜோதிடர் நம்மூரில் இருக்கிறார். அவர் ஒரு பிரபல நடிகரைப் பார்த்து, இவர் கட்டாயம் அரசிய லுக்கு வருவார்; அப்படி வரவில்லையென்றால், நான் ஜோதிடத் தொழிலையே விட்டுவிடுகிறேன் என்றார்.

ஆனால், அப்படி நடந்ததா?

அந்த ஜோதிடரும் இருக்கிறார்; அந்த நடிகரும்தான் இருக்கிறார்; இரண்டு பேர் தொழிலும் நடைபெறுகிறது.

கம்பர் விழாவில், ‘ஜெய் சிறீராம்’ சொல்லக்கூடாதா?

நெறியாளர்: கம்பர் விழாவில், ஆளுநர் ஆர்.என்.இரவி ‘‘ஜெய் சிறீராம்’’ என்று சொல்லியிருக்கிறார்; மாணவர்களையும் திரும்பச் சொல்லச் சொல்லியிருக்கிறார். அந்தக் கம்ப இராமாயணத்தைப்பற்றிய விழாவில், ‘‘ஜெய் சிறீராம்’’ என்று சொன்னது குறித்து நீங்கள் உள்பட, நிறைய பேர் கண்டித்திருந்தீர்கள். கம்பர் விழா வில், ‘ஜெய் சிறீராம்’ சொல்லக்கூடாதா?

கம்பனைவிட புளுகுவதில் கெட்டிக்காரர்!

தமிழர் தலைவர்: இராமனுக்கும், கம்பருக்கும் என்ன சம்பந்தம்?

கம்பன்தான், இதுவரையில் புளுகுவதில் கெட்டிக்காரன் என்று நினைத்திருந்தோம். அவனையே தோற்கடித்துவிட்டார் இவர்.

இந்த அரசு, மதச்சார்பற்ற அரசு. மதுரைக்குப் பக்கத்தில் திருப்பரங்குன்றத்தில் ஒரு பெரிய போராட்டம் வெடிக்கின்ற அளவிற்கு, மதக்கலவரத்தைத் தூண்டிப் பார்த்தார்கள்; அது நடைபெறாமல், தடுப்பதற்கு நீதி மன்றம் வரை சென்று அடக்கினார்கள்.

அந்தப் பகுதியில் உள்ள ஒரு கல்லூரிக்குச் சென்ற ஆளுநர், ‘‘ஜெய் சிறீராம்’’ என்று நான் சொல்கிறேன், நீங்களும் சொல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறார். யாரோ ஒரு நான்கு பேர் திரும்பச் சொல்லியிருக்கின்றனர்.

இன்னொரு முஸ்லிம் பேராசிரியர் பேசும்போது, ‘‘அல்லா ஹூ அக்பர்’’ சொல்லுங்கள் என்று சொல்ல, பகுத்தறிவுவாதியான நான் அங்கே சென்று, ‘‘கடவுள் இல்லை என்று நான் சொல்கிறேன், நீங்கள் எல்லோரும் திரும்பச் சொல்லுங்கள்’’ என்று கேட்க,

இன்னொருவர் அங்கே வந்து, ‘‘பரம மண்டலத்தில் இருக்கும் பரம பிதாவை, ஜெபியுங்கள்; அவர் ஆசீர்வ திப்பார்’’ என்று சொன்னார் என்றால், அது நன்றாக இருக்குமா?

மதக்கலவரம் அங்கே வருமா, வராதா?

அரசமைப்புச் சட்டத்திற்கு மாறான விரோத மனப்பான்மை!

ஆகவேதான், ஓர் ஆளுநர், அமைதியை உண்டாக்க வேண்டிய பொறுப்பில் உள்ள மக்களின் வரிப்பணத்தை சம்பளமாகப் பெறும் ஒருவர், இதுபோன்று செய்யலாமா? என்று கண்டித்தோம்.

இது அரசமைப்புச் சட்டத்திற்கு மாறான, விரோதமான மனப்பான்மையாகும்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கூடங்களில், ஒரு மதம் சார்ந்த வழிபாடுதானே நடக்கிறது?

நெறியாளர்: ஆளுநர் கல்லூரிக்குச் சென்று இது போன்று பேசினார் என்று நீங்கள் கண்டிக்கிறீர்கள். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கூடங்களில், இன்னமும் ஒரு மதம் சார்ந்த வழிபாடுதானே நடக்கிறது?

பக்தியின் பெயரால் மூடநம்பிக்கையைப் பரப்புகிறார்கள்!

தமிழர் தலைவர்: முழுக்க முழுக்க அப்பள்ளிகள் ஒன்றிய அரசினுடைய ஊதுகுழலாக இருக்கின்றன. அதனால்தான், கும்பமேளாவை ஒரு பாடத் திட்டமாக வைத்திருக்கிறார்கள்.

கும்பமேளாவினால் எத்தனை பேர் இறந்து போனார்கள்; அந்தத் தண்ணீர் எவ்வளவு அசுத்தமாக இருக்கிறது என்பதை விஞ்ஞான பூர்வமாக நிரூபித்தி ருக்கிறார்கள்.

அப்படி இருந்தும், கும்பமேளாவைப் பாடத்திலே வைத்திருக்கிறார்கள்.

பக்தியின் பெயரால் மூடநம்பிக்கைகளில் நம்பிக்கை உண்டாக்குவதற்காக இதுபோன்று செய்கிறார்கள்.

நெறியாளர்: காஷ்மீரில், பஹல்காமில் தீவிர வாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டு 26 பேர் இறந்திருக்கிறார்களா?

மனிதநேயம் உள்ள எவரும் தீவிரவாதத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்!

தமிழர் தலைவர்: எந்த ரூபத்திலும், எந்த மதமானாலும், எந்த இடமானாலும் தீவிரவாதத்தை மனிதநேயம் உள்ள எவரும் ஏற்றுக்கொள்ள முடியாது.

எப்படி மதவெறி மிகவும் ஆபத்தானதோ, அதைவிட ஆபத்தானது தீவிரவாதம்.

அது, இந்த மதமா? அந்த மதமா? எந்த மதம் என்பது முக்கியமல்ல. மனிதநேயத்தைக் காப்பாற்றவேண்டும்.

மதவெறி என்பதுதான் இதற்கு அடிப்படை. அது எந்த மத வெறியாக  இருந்தாலும்,  கண்டனத்திற்குரியது. முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டியது.

மனிதநேயம்தான் ஓங்கவேண்டும்!

நெறியாளர்: இப்பிரச்சினையில் ஒன்றிய அரசாங்கத்தி னுடைய செயல்பாடு எப்படி இருக்கிறது?

தமிழர் தலைவர்:  எல்லாக்  கட்சியினரும் ஒத்துழைப்புத் தருகிறோம் என்று உறுதிப்படுத்தியுள்ளார்கள். எல்லோரும் ஒன்றாக இருக்கின்றோம் என்பதை நாடா ளுமன்றத்தின்மூலமாக வலியுறுத்தவேண்டும்.

அதேநேரத்தில், ஒன்றைத் தெளிவுபடுத்தவேண்டும்.

அந்தத் தீவிரவாதிகள் மட்டும்தான் எதிரிகளே தவிர, மக்கள் எதிரிகள் அல்ல.

‘தினத்தந்தி’யில் தலையங்கம் வெளியிட்டிருந்தார்கள்.

தீவிரவாதத் தாக்குதலுக்கு உட்பட்டவரை, இஸ்லாமிய சகோதரரான குதிரை வீரர் ஒருவர் காப்பாற்றுவதற்காக தூக்கிக் கொண்டு போனார். அவரும் மாண்டார் என்று செய்தி.

அவர் எந்த மதம்?

ஆகவே, மதம் மனிதனுக்குப் பிடிக்கக் கூடாது. அது யானைக்குப் பிடித்தாலே ஆபத்து.

அந்த மக்களை நீங்கள் வெறுப்படையச் செய்யக் கூடாது; அவர்களை எதிரிகளாகக் கொள்ளக்கூடாது. காஷ்மீர் மக்கள் பாதுகாக்கப்படவேண்டும். அவர்கள் இந்த மதமா? அந்த மதமா? என்று பார்க்கக்கூடாது.

தீவிரவாதிகளைத் தனிமைப்படுத்தவேண்டும். அதேநேரத்தில், அத்துணைக் கட்சிகளுடைய ஆதரவைப் பெற வேண்டும் என்றால், இராணுவ விமா னங்களை வாங்குவது முக்கியமல்ல; மக்களுடைய நம்பிக்கையைப் பெறவேண்டும்.

தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டால், அதனைத் திருத்திக் கொள்ளவேண்டும்!

அதற்கு நாடாளுமன்றம் கூடி எடுக்கின்ற முடிவுகள் முக்கியமானவை. ஒத்துழைப்பதற்கு எதிர்க்கட்சிகள் எல்லாம் தயாராக இருக்கின்ற நேரத்தில், அவர்களை இணைத்துக் கொண்டு, நல்ல அளவிற்குக் காரண காரியங்களை ஆராய்ந்து முடிவுகள் எடுக்கப்படவேண்டும். தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டால், அதனைத் திருத்திக் கொள்ளவேண்டும்.

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேட்டியில் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *