திருப்பூர், மே 24 ஆன்மிக பேச்சாளர் மகாவிஷ்ணு, தான் திருப்பூரை தலைமையகமாக கொண்டு நடத்தி வந்த பரம்பொருள் அறக்கட்டளையை மூடுவதாக அறிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி குளத்துப்பாளையத்தை தலைமையகமாகக் கொண்டு, பரம்பொருள் அறக்கட்டளையை நடத்தி வருபவர் ஆன்மிக பேச்சாளா் மகாவிஷ்ணு. பல்வேறு நாடுகளில் இவரது பரம்பொருள் அறக்கட்டளைக்கு கிளைகள் உள்ளன.
இவர் சென்னை அரசுப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் குறித்தும், முன்ஜென்மம் குறித்தும் பேசியது சா்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டார். மகாவிஷ்ணு பிணையில் வந்த நிலையில், தான் நடத்தி வந்த பரம்பொருள் அறக்கட்டளையை மூடுவதாகவும், இதனை அறிவிக்கும் போது நிம்மதியாக உணர்வதாகவும், தனக்கு எந்தவித வேதனையும் கொண்ட முடிவாக இது இல்லை எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் அறக்கட்டளைக்கு என யாரும் பணம் அனுப்ப வேண்டாம். இதுவரை பெற்ற நன்கொடைகள் மூலம் உணவுக் கொடை உள்ளிட்டவை வழங்கப்பட்டு கணக்குகள் முடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து எனது ஆன்மீகப் பணியை வேறு வகையில் தொடர உள்ளேன். இனி அறக்கட்டளை இயங்காது என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
புனே நகரத்தில் கடும் மழை
ஒரே மண்டபத்தில் நடைபெற்ற
இந்து – முஸ்லிம் திருமண நிகழ்ச்சிகள்
புனே, மே 24 மகாராட்டிர மாநிலம் புனே அருகே, திடீர் மழை காரணமாக ஒரே மண்டபத்தில், ஒரே நேரத்தில் இந்து, முஸ்லிம் திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மகாராட்டிர மாநிலம் புனே அருகேயுள்ளது வான்வொரி பகுதி. இங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் மஹின் மற்றும் மொசின் காஜி என்ற முஸ்லிம் இணையருக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி கடந்த 20.5.2025 அன்று மாலை நடைபெற்றது. இதன் அருகேயுள்ள திறந்தவெளி புல்வெளி மைதானத்தில் மாலை 7 மணியளவில் நரேந்திரா பாட்டீல், சன்ஸ்குரிதி பாட்டீல் என்ற இந்து ஜோடிக்கு திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அன்று மாலை தீடீரென கனமழை பெய்தது. மூகூர்த்த நேரம் நெருங்கியதால் திறந்தவெளி புல்வெளியில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் திருமண சடங்குகளை நடத்த முடியவில்லை. இதனால் நரேந்திரா மற்றும் சன்ஸ்குரிதி உறவினர்கள், அருகில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்திய முஸ்லிம் குடும்பத்தினரிடம் உதவி கோரினர். அவர்களும் மகிழ்ச்சியுடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்ற மண்டபத்தின் மேடையை பகிர்ந்து கொள்ள சம்மதித்தனர். இதையடுத்து அங்கு இந்து முறைப்படியான சடங்குகள் நடைபெற்று நரேந்திரா மற்றும் சன்ஸ்குரிதி இணையர்கள் தங்கள் திருமணத்தை முடித்தனர். இவர்களது திருமணம் முடிந்ததும், முஸ்லிம் மற்றும் இந்து இணையர்கள் ஒரே மேடையில் போட்டோவுக்கு நின்று போஸ் கொடுத்தனர். இவர்களது திருமணத்திற்கு வந்திருந்த இந்து, முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த விருந்தினர்களும் மகிழ்ச்சியுடன் திருமண விருந்தில் பங்கேற்று மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்தினர்.