திரு.சக்கரைச் செட்டியார் அவர்கள் ஹிந்து வாயிருந்து கிறித்தவராக மதம் மாறியவர்; அவர் சென்னை திருவாளர்கள் ஓ.தணிகாசலம் செட்டியார், ஓ.கந்தசாமி செட்டியார் ஆகியவர்களுக்கு நெருங் கின உறவினராயிருந்தவர். பி.ஏ.,பி.எல்., பட்டம் பெற்ற வக்கீல். 1906இல் அதாவது ஏறக்குறைய 20 வருஷங் களுக்கு முன்னிருந்தே அரசியல் துறையில் இறங்கினவர். வங்காளப் பிரிவினையின் காரணமாக இந்தியாவெங்கும் ஏற்பட்ட “சுதேசி”க் கிளர்ச்சியின் போதே திரு.சக்கரைச் செட்டியாரும் திரு.சுரேந்திரநாத் ஆரியாவும் சென்னை மாகாணத்தில் – தமிழ்நாட்டில் – மேடை மீதேறி தைரியமாய்ப் பிரசங்கம் செய்த பார்ப்பனரல்லாத வீரர்கள். தேசத்தின் உழைப்பிற் காகவும், உழைத்ததின் பலனாகவும் தங்கள் தங்கள் வரும்படிகளை விட்டவர்கள். உண்மைத் தேசாபி மானம் என்பது இவ்விரு கனவான்களுக்கும் இல்லா திருந்து பார்ப்பனர்கள் போலும் மற்றும் இரண்டொரு பார்ப்பனரல்லா தாரைப் போலும் வயிற்றுப் பிழைப்பு தேசாபிமானிகளாயிருந்திருந்தால் திரு. சக்கரை செட்டியார் வயிற்றுப் பிழைப்பு தேசாபிமானத்தால் ஜட்ஜ் ஸ்தானம் பெற்ற பார்ப்பனர்களுக்கு முன்னா லேயே ஹைக்கோர்ட் ஜட்ஜாக இருப்பார், அது போலவே திரு.ஆரியாவும் மாதம் ஒன்றுக்கு ரூ.1000, 1500 சம்பாதிக்கும் உத்தியோகத்தில் இருப்பார். திரு.ஆரியா அவர்கள் தனது உத்தியோகத்தை விடுங்காலத்தில் மாதம் 700ரூபாய் சம்பளமும் 300 ரூபாய் படியும் வாங்கிக் கொண்டிருந்தவர். இருவரும் தேச நன்மையின் பொருட்டு இங்கிலாந்து முதலிய அய்ரோப்பிய நாட்டிற்குச் சென்று அரசியல் இயக்கங்களின் போக்கை அறிந்து வந்தவர்கள்.
இன்னும் திரு. ஆரியா அவர்கள் மாதம் ஒன்றுக்கு 150 ரூபாய் வாடகை பங்களாவில் குடி இருக்கிறார். அவரது பங்களாவிலுள்ள பூச்செடிகளுக்குத் தண்ணீர் வார்க்க 3, 4 ஆள்களை வைத்திருக்கிறார். அய்ரோப்பியர் முறையில் தனது வாழ்க்கையை நடத்துகிறார். அவரது மனைவியார் அய்ரோப்பாவில் வாசித்துக் கொண்டிருக்கிறார்.
ஜெயில் என்றால் பொது ஜனங்கள் பயந்து நடுங்கின காலத்தில் சுமார் 20 வருடம் கடுங் காவல் தண்டனை விதிக்கப்பட்டு, பிறகு பல காரணங்களால் அத் தண்டனைகள் குறைந்து அய்ந்து வருட காலத்திற்குக் குறையாமல் கடினக் கடுங் தண்டனை அடைந்தவர், ஜெயிலில் மாவு அரைத்தவர்; தோட்ட வேலை செய்தவர். திரு. சக்கரைச் செட்டியார் தண்டனை அடையவில்லையானாலும் ஏறக்குறைய திரு.ஆரியாவைப் போலவே சுகபோகத்திலிருந்தவர்.
இவ்வாறு பீடும் பெருமையோடிருந்த இவ்விருவர்கள் நிலைமையும் அய்யங்கார் ராஜீயத்தில் எப்படி மதிக்கப்படுகிறது என்பதை யோசித்துப் பாருங்கள். அப்பொழுதுதான், பார்ப்பனரல்லாத ராஜீயவாதிகள் பார்ப்பனரைக் கண்டால் ஏன் பயப்படுகிறார்கள்? ஏன் குட்டிக்கரணம் போடுகிறார்கள்? என்பது வெளியாகும். பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிரிடையாய் தீவிர தேசியவாதிகளான டாக்டர் நாயர், சர்.தியாகராயச் செட்டியார் ஆகியவர்களால் காணப்பெற்ற ஜஸ்டிஸ் கட்சியென்னும் பார்ப்பனரல்லாதாரியக்கத்தை ஒழிக்கப் பார்ப் பனர்களால் போடப்பட்ட வலையில் திருவாளர்கள் திரு.வி.கலியாண சுந்தர முதலியார், டாக்டர் வரதராஜூலு நாயுடு முதலியவர்கள் சிக்கினது போலவே நமது சர்க்கரைச் செட்டியாரும் அதில் அகப்பட்டுக் கொண்டதோடல்லாமல் ஜஸ்டிஸ் கட்சியைத் தூற்றும் வேலையை திரு.முதலியாரும், டாக்டர் நாயுடுகாரும் தமிழ்நாட்டோடு – தமிழ் மக்களிடத்தோடு நின்றார்கள். ஆனால் திரு.சக்கரைச் செட்டியாரோ இந்தப் பார்ப்பனர்களுக்காக இந்தியாவை விட்டு அய்ரோப்பியா தேசம் போய் லண்டன் பட்டணத்திலுள்ள ஆங்கிலேயே மக்கள் வரை சென்று பாடுபட்டவர்.
இப்படிப்பட்ட கனவான்களான திரு.சக்கரைச் செட்டியார், திரு.ஆரியா ஆகிய இருவர் களையும் ‘நன்றியறிதலுள்ள’ பார்ப்பனர்கள் என்ன செய்தார்கள் என்பது நமதருமைத் தமிழ் மக்கள் கொஞ்சம் அறிய வேண்டாமா?
திரு.ஆரியா அவர்களைக் காங்கிரசிலிருந்து தீர்மான மூலமாய் விரட்டுவதோடல்லாமல், காலிகளை விட்டு உதைக்கும்படியும் செய்தார்கள். திரு.சக்கரைச் செட்டியாரைப் பற்றியோ வென்றால் சென்னைக் கார்ப்பரேஷனில் பார்ப்பனர்கள் ஸ்தானம் பெறும் வரை திரு.செட்டியாரை சுயராஜ்யக் கட்சித் தலைவராய் வைத்து ஏழை ஓட்டர்களை ஏமாற்றிப் பார்ப்பனர் கார்ப்ப ரேஷனுக்கு வரும்படி செய்து, அவர்கள் உள்ளே வந்தவுடன் திரு.சக்கரையை சுயராஜ்யக் கட்சித் தலைவர் பட்டத்திலிருந்து தள்ளி அந்த ஸ்தானத்தை பாஷ்யம் அய்யங்கார் என்கிற ஒரு பார்ப்பனருக்குப் பட்டம் கட்டி, திரு.சர்க்கரைக்கு வாக்களித்திருந்த கார்ப்பரேஷன் தலைவர் பதவியையும் அவருக்குக் கொடுக்காமல் மோசம் செய்ததோடல்லாமல், அடியோடு ராஜீய வாழ்விலிருந்தே அவரை டிஸ்மிஸ் (நீக்கி) செய்துவிட்டார்கள். இதன் காரணம் என்ன? அடிக்கடி புது ஆட்களைச் சேர்த்தால்தான் இவர்கள் காலைக் கழுவிக்கொண்டே இருக்க சம்மதிப்பார்கள்.
பழைய ஆட்கள் கொஞ்ச நாள் போய்விட்டால் இவர்கள் யோக்கியதையை அறிந்து கொள்ளு கிறார்கள். ஆதலால் பழைய ஆட்களைக் கொஞ்சமும் வைத்திருக்க மாட்டார்கள். உதாரணமாக, இப்போது புதிதாய் வலை போட்டுப் பிடித்திருக்கும் ஆட்களின் பெயர்களைப் பார்த்தாலே தெரியவரும்.
இனி தமிழ்நாட்டுக்கு உண்மையான யோக்கியன், தேசபக்தன், சமுக பக்தன் யாரென்று நாம் அறிய வேண்டுமானால் இந்தப் பார்ப்பனர்களால் கண்டனத் தீர்மானம் பெற்றவர்களும், உதை பட்டவர்களும், பார்ப்பனக் காங்கிரசிலிருந்து டிஸ்மிஸ் (தள்ளுபடி) செய்யப்பட்ட பார்ப்பனரல்லா தார்களுமேயாவார்கள். மேற்படி குணங்களுக்கு எதிரிடையானவர்கள் யார் என்று கண்டுபிடிக்க வேண்டுமானால் நமது பார்ப்பனர்களால் பூஜிக்கப்பட்டவர் களேயாவார்கள். எது போலென்றால், ராஜீய காரணங்களுக்காக நமது சர்க்காரால் தண்டிக்கப்பட்டவன் தேசபக்தர்கள் என்று சொல்லு வதும் சர்க்காரால் பெரிய பட்டங்களும் பதவிகளும் அடைந்தவர்களை தேசத் துரோகி களென்று சொல்லுவது போலவேயாகும்.
அல்லாமலும் காட்டில் கிடைக்கும் கல்லை சாமியாக்குவதற்கு நமது பார்ப்பனர்களுக்கு சக்தியிருப்பது போலவே தெருவில் ஓட்டுப் பொறுக்கும் அன்னக்காவடிகளை தேசபக்தர்களாக்கு வதற்கும் நமது பார்ப்பனர்களுக்கு சக்தியிருக்கிறது. ஆதலால்தான் பழைய ‘தலைவர்கள்’ கழி படுவதற்கு முன்னாலேயே அந்தப் பட்டத்திற்கு ஆள்கள் விண்ணப்பம் போட்ட வண்ணமா யிருக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது நமது அய்யங்கார் கோஷ்டிக்கு இப்போது ஆனந்தத்தைத் தரத்தக்கதாயிருந்தாலும் இதன் பலன் கடைசியில் கல்கத்தா இந்து முஸ்லீம் ஒற்றுமையைப்போல் விளைந்துவிடுமோவென நம்மைக் கவலைப்படச் செய்கிறது. இயற்கை தேவியின் திருவிளையாடல்களை நாம் எப்படி அறிய முடியும்?
– குடிஅரசு – கட்டுரை – 04.07.1926