“நீயெல்லாம் மனுசனே இல்ல தெரியுமா?” என்று கவுண்டமணி சொல்லும் நகைச்சுவைக் காட்சி ஒன்று உண்டு. அப்படி யாரையாவது நீ மனிதனே இல்லை என்று சொன்னாலோ, உன் உடம்பில் இரத்தம் தானே ஓடுகிறது என்று கேட்டாலும் கடுமையான கோபம் எல்லோருக்கும் தோன்றும்.
ஆனால், தான் மனிதப் பிறவியாக இருக்க வாய்ப் பில்லை என்றும், தன்னுடைய உடம்பில் ஓடுவது இரத்தமில்லை என்றும் ஒருவர் பெருமையாகப் பேசிக் கொண்டிருக்கிறார் என்றால் பேசுபவர் யாரென்பதை நீங்களே தெரிந்துகொள்ளலாம். அதாவது… இப்படி யெல்லாம் பேசுவதற்கென்று இந்தியாவில் லைசன்ஸ் பெற்றவர் ஒருவர் தான்! ஆம்… அவரே தான்!
பாதுகாப்பில் கோட்டை விட்டு, கோட்டைக்குள் ஓட்டை விட்டு, போர் நடத்துகிறோம், தாக்குதல் நடத்து கிறோம் என்று முன்கூட்டியே தகவலும் சொல்லித் தப்பவிட்டு, பின்னர் பெரியண்ணன் சொன்னதால் அந்தத் தாக்குதலையும் நிறுத்திவிட்டார்கள். என்ன தான் இவர்கள் மறுத்தாலும், அமெரிக்கா, அரபு நாடுகள், உலகத் தலைவர்கள் என்று எல்லோரிடமும் ‘நான் தான் போரை நிறுத்தச் சொன்னேன், வர்த்தகக் காரணங்களைச் சொல்லி நிறுத்தவைத்தேன்’ என்று மறக்காமல் சொல்லிக் கொண்டிருக்கிறார் டிரம்ப். ஒரு தடவை பெயருக்கு மறுத்துவிட்டு, தொடர்ந்து மறுக்காமல் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது மோடி அரசு.
ஆனால், உள்ளூரில் உதார் விடுவதற்கு மட்டும் அளவேயில்லை. ஆபரேசன் சிந்தூர் என்று பெயர் வைத்ததிலிருந்து, அந்தப் பெயரை உரிமை கொண் டாட நடக்கும் வர்த்தகப் போட்டி பெரிதாக இருக்கிறது.
ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரைத் திரைப்பட வர்த்தக சங்கத்தில் பதிவு செய்வதற்குப் போட்டி ஒரு புறம். நடிகர் ஜான் ஆபிரகாம், இயக்குநர் ஆதித்யா தர்ம் மஹாவீர் ஜெயின் ஸ்டுடியோ, அசோக் பண்டிக், மதூர் பண்டார்கர், ஜீ ஸ்டுடியோஸ், ஜேபி பிலிம்ஸ், பாம்பே ஷோ ஸ்டுடியோ, அல்மைட்டி மோசன் பிக்சர்ஸ் உள்ளிட்ட சுமார் 30 பேர் அலல்து நிறுவனங்கள் இந்தப் பெயர்களுக்குப் போட்டியிட்டிருக்கிறார்கள். ஒருவர் படத்தை அறிவித்தும் விட்டார். அவ்வளவும் அக்மார்க் தேசபக்தி. அக்மார்க் என்றதும், டிரேட் மார்க் ஞாபகம் வந்துவிட்டது.
ரிலையன்சின் ஜியோ ஸ்டுடியோஸ் இதற்கு முதலில் டிரேட் மார்க் – வணிக முத்திரை கோரி விண்ணப்பித்தது. பிறகு இதே போல், முகேஷ் சேத்ரம் அகர்வால், ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி கமல் சிங், வழக்குரைஞர் அலோக் குமார் கோத்தாரி, அல்மைட்டி மோசன் பிக்சரிஸின் பிராப்லீன் சந்தூ, டி.ஜெயராஜ், உத்தம் ஜாஜு இப்படி பலர் கிளாஸ் 41 டிரேட் மார்க் என்னும் பிரிவில் விண்ணப்பித்தனர். பின்னர் பெருந்தன்மையுடன் ரிலையன்ஸ் தன் விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டது.
ஏன், அந்தப் பெயருக்கு அவ்வளவு கிராக்கி? தேசபக்தி மட்டும் தான் என்று சொன்னால் நீங்கள் நம்பாமலா இருப்பீர்கள். நம்பித் தான் ஆக வேண்டும். இந்த தேச பக்தி இங்கு மட்டும் இல்லை. இந்தப் பெயருக்கு உரிமை கொண்டாடி அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் கூட டிரேட் மார்க் விண்ணப்பங்கள் அந்தந்த நாடுகளில் பெறப்பட்டுள்ளன. இது எல்லை தாண்டிய தேசபக்தியாவில்ல இருக்கு!
ஆளாளுக்கு இப்படிப் போட்டி போடுவதால் தான், என் உடலில் ரத்தமே ஓடல, ஓடுவதெல்லாம் சிந்தூர் தான் என்று தேசபக்தியின் சோல் டிரேடர் உரிமை கொண்டாடத் தொடங்கிவிட்டார். பின்னே, யார் யாரோ கலெக்சனுக்கு தேசபக்தியை யூஸ் பண்ண நினைச்சா, எலக்சனுக்கு யூஸ் பண்ணப்படாதா என்ன?
பெயரை வாங்குவதில் ஒரு தேச பக்தின்னா, பெயரை நீக்குவதில் இன்னொருவர் தேச பக்தி காட்டி இன்று தேசிய அளவில் பேசு பொருளாயிருக்கிறார். அவர் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு இனிப்புக்கடைக்காரர். மைசூர் பாக்கில் உள்ள பாக் என்பது பாகிஸ்தானைக் குறிப்பதைப் போலிருப்பதால் (என்ன ஒரு புத்திசாலித் தனம்!? என்று நீங்கள் வியப்பது புரிகிறது), அந்தப் ’பாக்’ என்ற சொல்லுக்குப் பதில் ‘ஸ்ரீ’ என்ற சொல்லைப் போட்டு, மைசூர் ஸ்ரீ என்றும், மோத்தி பாக்கை, ‘மோத்தி ஸ்ரீ’ என்றும் பெயர் மாற்றி யிருக்கிறார்களாம்.
இதே நிலைமையில் போனால், நிஜாம் பாக்கு – நிஜாம் ஸ்ரீ என்றும், கீழ்ப்பாக் – கீழ்ஸ்ரீ என்றும், மடிப்பாக்கம் – மடிஸ்ரீகம் என்றும், ‘பாக்காத என்னைப் பாக்காத’ பாடல் – ஸ்ரீக்காத என்னை ஸ்ரீக்காத என்றும் மாற்றப்பட வேண்டும் என்று சமூக ஊடகங்கள் எங்கும் ஏராளமான குரல்கள். தேசபக்தின்னா சும்மாவா?
கல்யாணம் என்பதே பிடிக்காத காரணத்தால், பம்மல் கல்யாண சம்பந்தம் என்ற தன் பெயரை, ‘பம்மல் உவ்வே சம்பந்தம்’ என்று மாற்றிச் சொல்லுவார் கமல்ஹாசன் ஒரு படத்தில்! அப்படித்தான் இந்த தேசபக்தி ‘மைசூர்ஸ்ரீ’யும்!
– குப்பைக் கோழியார்