‘‘ஆச்சரியம், ஆனால் உண்மை!’’ என்று சொல்லும் அளவிற்கு நேற்றைய ‘தினமணி’ ஏட்டில் ‘‘மதிப்பெண் மட்டுமே அளவுகோலா?’’ என்ற தலைப்பில் முனைவர்
எஸ். பாலசுப்பிரமணியன் என்பவர் ஒரு சிறப்புக் கட்டுரையை எழுதியுள்ளார்.
அவர் என்ன கூறுகிறார்?
‘‘மதிப்பெண்களை இறுதி முடிவாக கருதாமல் அவை பல கருவிகளில் ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். நேர்காணல்கள் திட்ட அடிப்படையிலான மதிப்பீடுகள், திறன் சோதனைகள் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு கலப்பு முறையே இன்றைய தேவை. இதுவே உண்மையான திறமைகளை அடையாளம் காண உதவும்.
நமது நாட்டின் அசைக்க முடியாத பலம் இளைஞர் சக்தி தான். இந்த மாபெரும் ஆற்றலை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்றால் நம் இளைஞர்களின் உண்மையான திறனையும், தகுதியையும் நாம் சரியான முறையில் அடையாளம் காண வேண்டும்.
ஆனால் அந்த அடையாளம் காணும் முறை இன்று சரிதானா என்ற கேள்வி எழுகிறது. ஒரு மாணவரின் பல ஆண்டுகால கல்வி பயணத்தையும், அவர் செய்த கடின உழைப்பையும் அவர் பெற்ற மதிப்பெண் என்று வெறும் எண்ணாக சுருக்கி அதையே அவர்களின் முழுத் தகுதியாக கருதும் போக்கு நிலவுகிறது. இது பல நியாயமான கேள்விகளை எழுப்புகிறது.
அரசுப் பணி, தனியார் துறை வாய்ப்புகள், உயர்கல்விக்கான வழிகள் என எதுவாக இருந்தாலும் இன்று மதிப்பெண் மட்டுமே பிரதான வாயிலாக இருக்கிறது. இது உண்மையான தகுதியை மறைத்து, வெறும் எண்களின் மாயத் தோற்றத்தை உருவாக்குகிறது.
இந்த நிலை சரியா? இந்தக் கேள்விக்கு நாம் ஆழமாக சிந்தித்து விடை காண வேண்டிய தருணம் இது. வேலை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் பணியை எளிதாக்கிக் கொள்ளும் நோக்கில் லட்சக்கணக்கான விண்ணப்பங்களை வடிகட்டி மதிப்பெண்களை மட்டுமே முதன்மை அளவாகக் கொள்வது – ஒரு தவறான நடைமுறை இது.
திறமையான பல மாணவர்களைப் புறக்கணிக்க வழி வகுக்கும் இந்த முறையை முற்றிலுமாக மாற்ற வேண்டும். வெறும் மதிப்பெண்களுக்கு பதிலாக மாணவர்களின் உண்மையான திறமையையும், அறிவுத் திறனையும், நடைமுறை அனுபவத்தையும் கண்டறியும் புதிய முறைகளை நாம் உருவாக்க வேண்டும்’’ என்று ‘தினமணி’ ஏட்டில் வெளிவந்த சிறப்புக் கட்டுரையில் சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக இதனைத்தானே தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும் தொடர்ந்து வலியுறுத்தி சொல்லிக் கொண்டிருக்கிறோம். இட ஒதுக்கீடு கொண்டு வந்தால் தகுதி – திறமை போய்விடும் என்று சொல்வது இந்த மதிப்பெண் அடிப்படையில் தானே!
இதனைத்தான் தந்தை பெரியார் ‘‘தகுதி, திறமை மோசடி’’ என்று எல்லோருக்கும் புரியும்படி விளக்கிக் கூறி வந்திருக்கிறார். பச்சைத் தமிழர் காமராஜரும் தகுதி திறமையைப் பற்றி கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
‘‘தாழ்த்தப்பட்டவரை படிக்க வைத்தேன், மருத்துவர் ஆனார். அவர் ஊசி போட்டு எந்த பிள்ளை செத்தது சொல்! தாழ்த்தப்பட்டவரை பொறியாளர் ஆக்கினேன். அவர் கட்டிய எந்த பாலம் இடிந்தது சொல்’’ என்று பளிச்சென்று கேள்வி கேட்டது உண்டே – உச்ச நீதிமன்றத்தில் 19.8.2011 அன்று நீதிபதி வி.ஆர். ரவீந்திரன் அளித்த தீர்ப்பை கோடிட்டுக் காட்டுவது இந்த இடத்தில் பொருத்தமானதாகும்.
‘‘அம்பேத்கர் அவர்கள் கூட வெறும் 37 மதிப் பெண்களைத் தான் பெற்றிருந்தார். மதிப்பெண்களை வைத்து அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தால் இந்தியாவுக்கு ஒரு அரசமைப்புச் சட்டம் கிடைத்திருக்குமா?’’ என்ற கேள்விக்கு இதுவரை பதில் உண்டா?
தாழ்த்தப்பட்டோருக்கு 14 விழுக்காடு, மலை வாழ் மக்களுக்கு 10 விழுக்காடு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு 14 விழுக்காடு, பிற்படுத்தப்பட்டோருக்கு ஒன்பது விழுக்காடு, பெண்களுக்கு மூன்று விழுக்காடு என்று பீகார் முதலமைச்சர் லாலு பிரசாத் பிறப்பித்த ஆணையை எதிர்த்து உயர் ஜாதியினர் உச்ச நீதிமன்றம் சென்றனர். நீதிபதிகள் எஸ்.சி. அகர்வால், பி.பி. ஜீவன் ரெட்டி, எம்.கே. முகர்ஜி ஆகிய மூன்று நீதிபதிகளும் அளித்த தீர்ப்பு என்ன?
‘‘முதலில் தேவையான அளவுக்கு அறிவுத்திறன் இல்லாத எவரும் தேர்வில் தேர்ச்சி பெற்று விட முடியாது.
இரண்டாவதாக தேர்வுகளில் காட்டுகிற திறமையை வைத்து அவர் தொழிலிலும் திறமையாக செயல்படுவார் என்பதற்கு உத்தரவாதம் கூற முடியாது. சட்டப்படிப்பு ஆனாலும் சரி, மருத்துவப் படிப்பானாலும் சரி படிப்பில் மிக புத்திசாலித்தனமான மாணவர்கள் என்பதற்கான சான்றிதழ்களை வைத்திருப்பவர்கள் நடைமுறையாக தொழிலில் கெட்டிக்காரர்களாக இருந்து விடுவது இல்லை.
அதே நேரத்தில் தேர்வு சான்றிதழ்களில் குறைந்த புத்திசாலிகள் போல் தோன்றுபவர்கள் தொழிலில் மிகவும் திறமைசாலியாக வெற்றி பெறுகிறார்கள். எனவே நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று வரும் மருத்துவர்கள் எல்லோருமே தொழில் ரீதியாகவும் நல்ல மருத்துவராகத் தான் இருப்பார்கள் என்ற உறுதியான முடிவுக்கு வந்து விடுவது தவறு. அப்படி நடக்கலாம் நடக்காமலும் போகலாம்’’ என்று உச்சநீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு மிகச் சிறந்த முறையில் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
இந்த அடிப்படையில் பார்த்தால் தேர்வில் மதிப்பெண் வாங்குவது குறிப்பாக நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவது தான் தகுதித் திறமையின் அளவுகோல் என்பது உண்மைக்கு மாறானது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
ஒரு காலத்தில் இட ஒதுக்கீடு அளித்தால் தகுதி, திறமை கெட்டுப் போய்விடும் என்று சொன்ன பார்ப்பனர்கள் இப்பொழுது பொருளாதரத்தில் நலிவடைந்தவர்கள் என்ற பெயரால் 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொண்டிருக்கிறார்களே! இப்பொழுது மட்டும் தகுதி திறமை போய்விடாதா என்ற கேள்விக்கு பதில் உண்டா? தொடர்ந்து நாம் உறுதியாக, தெளிவாக சொல்லி வந்ததை – தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பதை – வேறு வழியின்றி ‘தினமணி’ ஒப்புக் கொண்டிருக்கிறது என்பது நினைவிருக்கட்டும்!