8.79 லட்சம் வேலைவாய்ப்புகள் 3,390 தொழில் நிறுவனங்கள் தமிழ்நாடு அரசு வெளியிட்ட தகவல்

Viduthalai
2 Min Read

சென்னை, மே 24– சிறீபெரும் புதூர் புத்தாக்க மய்யத்தில் (FORT) சிப்காட் நிறுவனம் அதன் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்துடன் (Tamil Nadu State Council For Higher Education-TANSCHE) இணைந்து திறன் மேம்பாட்டிற்கான ஆற்றலை கண்டறியும் கூட்டம் கே.செந்தில் ராஜ், மேலாண்மை இயக்குநர், சிப்காட், தலைமையில், எம்.பி.விஜயகுமார், (ஓய்வு), துணைத்தலைவர், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், சிப்காட் மேலாண்மை இயக்குநர் கே.செந்தில் ராஜ், தலைமையுரையில் பேசுகையில், சிப்காட் நிறுவனம் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கிய பங்காற்றி வருகிறது.

சுயந்தேறல் மாடுல்கள்

இதுவரை 24 மாவட்டங்களில் 50 தொழிற் பூங்காக்களை 48,926.48 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கி 3,390 தொழில் நிறுவனங்களின் மூலம் 1.99 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்து 8.79 இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளது. உயர்கல்விக்கும், தொழில் நிறுவனங்களில் திறன்மிகு வேலைகளின் ஆற்றலுக்குமான இடைவெளியை குறிப்பாக நிலை 2 மற்றும் நிலை 3 நகரங்களில் பயின்றுவரும் மாணவர்களிடத்தில் சீர்செய்வதே இந்த முன்னெடுப்பின் நோக்கமாகும்.

ஆர்வமுள்ள மாணவர்கள் பயிலும்போதே கண்டறியப்பட்டு தொழில் நிறுவனங்களின் உதவியுடன் Learning Management System (LMS) மூலம் குறிப்பிட்ட தொழில் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும். தொழில் நிறுவனங்களில் இருந்து வளர்ந்து வரும் பணிகளின் தன்மை, திறன்மிகு பணிக்கான ஆற்றல் பெறப்பட்டு முற்போக்கான, சுயந்தேறல் மாடுல்கள் (Self-paced Modules) மூலம் பாடத்திட்டம் வடிவமைக்கப்படும்.

திறன் மேம்பாட்டு மாதிரி

மாணவர்கள் முதலாம் ஆண்டு இறுதியில் விருப்பமான பிரிவினை தேர்ந்தெடுத்து அதில் நிலையான மதிப்பீட்டினை பெறலாம். இந்த முன்னெடுப்பின் மூலம் மாணவர்கள் இணைப்பு பயிற்சி (Internship) திறன் ஆற்றல் மற்றும் பணியிடு திறன் குழுமத்தில் (Empanelled Talent Pool) பங்குபெறும் வாய்ப்பினை பெறுவர். தொழில் நிறுவனங்கள் பணியாளர்கள் சேர்ப்பிற்கு பின் பயிற்சியில் செலவிடும் தொகையினை குறைப்பதற்கும், திறன்மிகு பணியாளர்களை ஆரம்ப நாட்களிலேயே பெருவதற்கும் ஏதுவாக அமையும். கல்வி துறையும், தொழில் துறையும் இணைந்து உருவாக்கும் திறன் மேம்பாட்டு மாதிரி (Talent Development Model) தனித்துவம் வாய்ந்தது.

தொழிற் பூங்காக்களில்…

இந்த முன்னெடுப்பு நடவடிக் கையின் குறிக்கோள், தொழில் நிறுவனங்களுக்கு கிடைக்கும் பயன்கள், திட்டத்தினை செயலாக்கும் முறை பற்றி தொழில் நிறுவனங்கள் மற்றும் அதன் குழுமங்களுடன் கலந்தாலோசிக்கப் பட்டது என்பது சிறப்புக்குரிய ஒன்றாகும். மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள 5 சிப்காட் தொழிற் பூங்காக்களில் இருந்து சுமார் 100 நிறுவனங்கள் கலந்துகொண்டு திறன்மிகு தொழிலுக்கான பயிற்சியினை வடிவமைப்பதற்கு ஏதுவாக பணிகளின் தன்மை, திறன்மிகு பணிக்கான ஆற்றல் மற்றும் மதிப்பீடு குறித்து பங்கேற்பாளர்களின் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

எனவே, தமிழ்நாடு தொழில் துறையில், இந்த முன்னெடுப்பின் மூலம் திறன்மிகு வேலைக்கான பணியாளர்களை கண்டறிவதில் இலட்சியமாக தன்னிறைவு பெரும் என பேசினார். இந்நிகழ்ச்சியில், சிப்காட் பொது மேலாளர் சந்திரமோகன், கண்காணிப்பு பொறியாளர் தேவஇரக்கம், சிப்காட் அலுவலக தொழிற்நுட்ப பணியாளர்கள் மற்றும் சிறீபெரும்புதூர் புத்தாக்க மையத்தின் போர்ட் நிறுவனத்தை சார்ந்த அனைத்து பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *