2024-2025இல் 1.06 லட்சம் சிறிய ரக எரிவாயு உருளை இணைப்புகள் வழங்கி அகில இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம்

2 Min Read

சென்னை, மே 24– கடந்த 2024-2025ஆம் நிதியாண்டில் 1.06 லட்சம் சிறிய ரக எரிவாயு உருளை இணைப்புகளை வழங்கி, தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் தற்போது வீடுகளில் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு உருளைகளையும், வர்த்தகப் பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையுள்ள உருளைகளையும் விநியோகம் செய்து வருகிறது.

இந்நிலையில், பொதுமக்கள் வெளியூர் பயணம் செய்யும் போது எளிதாக கொண்டு செல்லும் வகையில், 10 மற்றும் 5 கிலோ எடை கொண்ட சிறிய வகை உருளைகளை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

அதிகரித்துள்ளது

இந்நிலையில், இந்த எரிவாயு உருளைகளின் விற்பனை அதிகரித்துள்ளது. இது குறித்து, இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் கூறியது:

“இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இண்டேன் சிலிண்டர்களை 1.34 கோடி வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், ‘எக்ஸ்ட்ரா லைட்’ என்ற பெயரில் அறிமுகப் படுத்தப்பட்ட சிறிய ரக எரிவாயு உருளைகளை பொதுமக்கள் அதிகளவில் வாங்கி பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர்.

இதன்படி, கடந்த 2024-2025ஆம் ஆண்டில் 1.06 லட்சம் சிறிய ரக எரிவாயு உருளை இணைப்புகள் வழங்கப்பட்டு, அகில இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. 60 ஆயிரம் இணைப்புகளை வழங்கி கருநாடகா 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த 1.06 லட்சம் இணைப்புகளில் 60 சதவீதம் பேர் புதிய வாடிக்கையாளர்கள் ஆவர்.

மேலும், இதுவரை 1.85 லட்சம் சிறிய ரக எரிவாயு உருளை இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சிறிய ரக உருளை இணைப்புகள் அதிகளவில் நகர்ப்புறங்களில் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை முதலிடம்

இதில், சென்னை முதலிடத்திலும், கோவை, திருச்சி மற்றும் மதுரை ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. இந்த சிறிய ரக எரிவாயு உருளை இணைப்பு பெற ரூ.3 ஆயிரம் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும். ஏற்கெனவே சிலிண்டர் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், இப்புதிய இணைப்பு பெற அவர்கள் ஏற்கெனவே செலுத்தியுள்ள வைப்புத் தொகை போக எஞ்சிய தொகையை செலுத்த வேண்டும். சிறிய ரக எரிவாயு உருளைகள் எடை குறைவாக உள்ளதால், கையாள்வதற்கு எளிதாக உள்ளது.

பாதுகாப்பானது

மேலும், தீ விபத்து ஏற்பட்டாலும் இந்த உருளை வெடித்து சிதறாது. அதனால், இது பாதுகாப்பானது. இந்த சிறிய ரக எரிவாயு உருளை இணைப்பு பெறுமாறு எந்த வாடிக்கையாளர்களையும் எங்களது விநியோகஸ்தர்கள் நிர்ப்பந்தம் செய்வது கிடையாது.

அதேசமயம், இந்த எரிவாயு உருளையின் சிறப்பம்சங்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு விளக்குமாறு அறிவுறுத்தி உள்ளோம். மேலும், இந்த இணைப்பு பெறும் வாடிக்கையாளர்கள் அரசு வழங்கும் மானியம் பெற தகுதி கிடையாது” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *