“நாடாளுமன்றத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைக்கான நிலைக்குழுவைச் சேர்ந்த, 18 எம்.பி.,க்கள் சதீஷ் தவான் விண்வெளி மய்யத்திற்கு, நேற்று முன்தினம் வந்தனர். அவர்களுடன் அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் என மொத்தம், 118 பேர் தங்கி, நேற்று ராக்கெட் ஏவுதலைப் பார்த்தனர்.
கடந்த ஒரு வாரமாகவே, எம்.பி.,க்கள் தங்குவதற்கான வசதிகளைச் செய்து கொடுக்கும் பணியில், இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானிகள் உட்பட பலரும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அதனால், விஞ்ஞானிகள் தங்களின் பணிகளில் கவனம் செலுத்த முடியாமல், கடும் நெருக்கடியில் இருந்து வந்ததாக, சதீஷ் தவான் ஆய்வு மய்ய பணியாளர்கள் தெரிவித்தனர் என்று
– ‘தினமலர்’ (19.5.2025) இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.
அதாவது இந்தியா அனுப்பிய 101ஆவது செயற்கைக் கோள் தோல்வியில் முடிந்ததற்கு நாடாளுமன்றத் தொழில்நுட்பவியல் நிலைக்குழு உறுப்பினர்கள்தான் காரணம் என்று பெட்டிச்செய்தி போட்டுள்ளது.
அதை வேடிக்கை பார்க்கச்சென்ற உறுப்பினர்களுக்கு வசதிகள் செய்துகொடுக்க மூத்த அறிவியலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டதால் தோல்வியில் முடிந்தது என்று எழுதுகிறது.
அப்படி என்றால் ராக்கெட் ஏவுதல் பணிக்கு இடையூறாக இருந்த அந்த 18 எம்பிக்கள் யார் என்ற பட்டியலை தினமலர் வெளியிடவேண்டும் அல்லவா!
101 ராசியில்லாததா?
இந்திய செயற்கைகோள் தோல்வியில் முடிந்த பிறகு இது 101ஆவது செயற்கைக்கோள். 101 என்றாலே ராசியில்லாத எண்.
ஆகவே, இது தோல்வியில்தான் முடியும் என்று முன்கூட்டியே விஞ்ஞானிகளுக்குத் தெரியும் என்று சமூக வலைதளங்களில் எழுதி மூடநம்பிக்கையைப் பரப்புகின்றனரே! இதையும் தினமலர் எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
பணிகள் சரியாக நடைபெற்றுள்ளனவா என்று மீண்டும் பரிசோதிக்க வேண்டிய நேரத்தில் திருமலா திருப்பதிக்குப் பயணம் மேற்கொண்டு நேரத்தை வீணடிக்கும் மூடநம்பிக்கையைப் பற்றி எழுத வேண்டாமா?