ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் இருந்து பல நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள புருதா என்ற பழங்குடியின கிராமத்தில், காட்டுப்பகுதியை ஒட்டி அல்பினா என்ற மூதாட்டி ஆதரவற்ற நிலையில் வாழ்ந்து வந்தார். சுமார் 18 ஆண்டுகளாக காடே கதி என்று வாழ்ந்து வந்த அவருக்கு, ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் உடனடி உத்தரவால் கிராமத்திற்குள் வீடு கிடைத்து, புதிய வாழ்க்கை தொடங்கியுள்ளது.
அல்பினாவின் கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததால், அவரை “சூனியக்காரி” என்று முத்திரை குத்தி கிராமத்தை விட்டு விலக்கி வைத்துள்ளனர். காட்டுக்குள் கிழங்குகள், புல்லரிசி, பழவகைகளை சேகரித்து உண்டு தனிமையில் வாழ்ந்து வந்தார்.
இந்த மூதாட்டியின் அவல நிலையை டைம்ஸ் நவ் ஆங்கில செய்தி நிறுவனத்தில் பணிபுரியும் சோகன் சிங் என்பவர் படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இந்தக் காட்சிகளைக் கண்ட ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
முதலமைச்சரின் மனிதாபிமான நடவடிக்கை
அல்பினாவுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட முதலமைச்சர், அவருக்கு குடும்ப அட்டை, முதியோர் ஓய்வூதியம் போன்றவற்றை வழங்கவும் அறிவுறுத்தினார்.
முதலமைச்சரின் உத்தரவைத் தொடர்ந்து, உடனடியாக களத்தில் இறங்கிய அதிகாரிகள், வனப்பகுதிக்குள் சென்று மூதாட்டி அல்பினாவை மீட்டு கிராமத்திற்கு அழைத்து வந்தனர். அவருக்கு உடனடியாக ஒரு தற்காலிக வீடு கட்டிக்கொடுக்கப்பட்டு, அன்றாடத் தேவைக்கான பொருட்களும் வழங்கப்பட்டன.
மேலும், உள்ளூர் காவல் நிலையத்தில், கிராமத்து மக்கள் அல்பினாவை எந்த வகையிலும் தொந்தரவு செய்யக் கூடாது என்றும், அப்படி செய்வோர் மீது முதியோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. உள்ளூர் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம், அல்பினாவின் உடல்நிலை குறித்து மாதம் ஒருமுறை முதலமைச்சருக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
சுமார் 18 ஆண்டுகளாக காட்டுக்குள் தனிமையில் வாழ்ந்து வந்த அல்பினாவுக்கு கிராமத்திற்குள் வாழ ஒரு வீடு கிடைத்துள்ளதுடன், அரசின் ஆதரவும் கிடைக்கப்பெற்றுள்ள இந்த நிகழ்வு, ஜார்க்கண்ட் மாநில அரசின் சமூக அக்கறையையும், மக்களின் நலனில் உள்ள ஈடுபாட்டையும் காட்டுகிறது.
இது தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மனிதாபிமான அணுகுமுறையை நினைவூட்டுகிறது என்று சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.