இவ்வளவுப் பகிரங்கமாக கிறிஸ்தவ ஆலயங்களையும், முஸ்லிம்களுடைய மசூதிகளையும் இடித்துத் தள்ள வேண்டும் என்று துண்டறிக்கைகளை வெளியிட்டுள்ளது இந்து முன்னணி! ஒளிவு மறைவு இல்லாமல் இந்து முன்னணி – சோழவரம் ஒன்றிய திருவள்ளூர் மாவட்ட அருமந்தை கிளை என்று முகவரியோடு இப்படியொரு துண்டறிக்கையினை வெளியிட்டுள்ளனர்.
இது வெறும் துண்டறிக்கை அல்ல; மதக் கலவரங்களைத் தூண்டும் அறிக்கை.
இந்துக்களுக்கு மட்டுமே இந்தியா சொந்தமாம். மசூதிகள் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களில் தொழுகைகள் நடைபெறாமல் நிறுத்த இந்துக்கள் அணி திரள வேண்டுமாம்.
‘நடைபெறாமல் நிறுத்த’ என்பதன் பொருள் என்ன? வன்முறை ஆயுதம் என்ன? இடித்துத் தள்ள வேண்டும் என்பது என்ன? பச்சை வன்முறை வெறி யாட்டம் தானே!
மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் இப்படி யொரு துண்டறிக்கையினை வெளிப்படையாக இந்து முன்னணி வெளியிட்டுள்ளது.
இதன்மீது காவல்துறை எடுத்த நடவடிக்கை என்ன?
இந்தியாவிலேயே தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகக் காட்சி அளிக்கிறது.
காந்தியார் படுகொலை செய்யப்பட்டபோதுகூட தமிழ்நாடு அமைதிதான்! சங்பரிவார்களால் பாபர் மசூதி இடித்துத் தள்ளப்பட்ட போதும் தமிழ்நாட்டில் அமைதி அமைதிதான். காரணம் இது தந்தை பெரியாரின் திராவிட மண்.
கலவரத்தை உண்டாக்கி தான் தங்கள் கட்சியை அமைப்பார்கள் சங்பரிவார்கள்.
ஒரு தேர்தலுக்கு முன் உத்தரப்பிரதேசம் முசாபரில் என்ன நடந்தது? மதக் கலவரத்தைத் தூண்டி இந்து – முஸ்லிம் என்று இரு கூறுகளாக்கி (PolariSation) வாக்குகளைப் பெரும்பான்மை இந்து மக்களிடம் அறுவடை செய்வது என்பது அவர்களுக்குக் கை வந்த கலை!
தமிழ்நாடு அரசு குறிப்பாகக் காவல்துறை எச்சரிக்கை யாக இருக்க வேண்டும்.
தேர்தல் நெருங்க நெருங்க சங்பரிவார்களின் அத்துமீறல் அதிகமாகத்தான் இருக்கும் – முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.
இந்தியத் துணைக் கண்டத்திலேயே, தமிழ்நாட்டில்தான் அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள ‘மதச்சார்பின்மை’ என்பதைத் துல்லியமாக தூசுபடியாமல், துலாக்கோல் நிறுவையோடு சீர்மையாகப் பூத்துக் குலுங்குகிறது. மதச் சார்பின்மை எ்னனும் அழகின் சிரிப்பு இது!
இதனைச் சீர்குலைக்க ‘ஆயுதங்களை’த் தீட்டுகின்றனர்.
உஷார்! உஷார்!! நடவடிக்கை தேவை! தேவை!!
– கருஞ்சட்டை
குறிப்பு: துண்டறிக்கை அச்சிடப்பட்ட அச்சகத்தின் பெயர் இல்லை. இதுவும் சட்டப்படி குற்றமே – சகல கோணத் திலும் ஆராய்ந்து ‘மத’ வெறியானையின் கொம்பை முறித்து முடிவு காணப்பட வேண்டும்! வேண்டும்!!