பெரம்பூர், மே 23- சென்னை மடிப்பாக்கம் மகாலட்சுமி நகரில் அய்யங்கார் மடம் வேத பாடசாலை செயல்பட்டு வருகிறது. இங்கு தங்கி வேதம் படிக்கும் சிறுவர்கள் 7 பேர் திடீரென காணாமல் போனதாக வேத பாடசாலை நிர்வாகம் சார்பில் மடிப்பாக்கம் காவல்துறையில் புகார் செய்தனர். அதன்பேரில் அனைத்துக் காவல் நிலையங்களுக்கும், ரயில்வே காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு சிறுவர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் பெரம்பூர் ரயில்வே காவல்துறை உதவி ஆய்வாளர் ரேணுகா தலைமையிலான காவலர்கள் பெரம்பூர் ரயில் நிலைய நடைமேடையில் சந்தேகப்படும்படியாக நின்ற 7 சிறுவர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், மடிப்பாக்கத்தில் உள்ள வேத பாடசாலையில் தங்கி, வேதம் படிக்கும் சிறுவர்கள் என்பதும், அங்கிருந்து தப்பி வந்ததும் தெரிந்தது. 7 சிறுவர்களை யும் மீட்ட ரயில்வே காவல்துறையினர் பத்திரமாக அவர்களை மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் கவால்துறையினரிடம் ஒப்படைத்தனர்.