திருச்சி பஞ்சப்பூரில் தந்தை பெரியார் பெயரில் அங்காடி!
பெரியார், அண்ணா, கலைஞர் சிலைகள் திறப்பு!
நேரில் கண்டோம், மகிழ்ந்தோம்!
திருச்சி அருகே பஞ்சப்பூர் பகுதியில் தந்தை பெரியார் பெயரில் அங்காடிக்கு அடிக்கல் நாட்டி, அதில் பெரியார், அண்ணா, கலைஞர் சிலைகளையும் நிறுவி, உலகத்தரம் வாய்ந்த அங்காடியாக உருவாக்கியிருப்பதற்கு முதலமைச்சரையும், அமைச்சர் நேருவையும் பாராட்டி, வாழ்த்தி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தந்தை பெரியார் அவர்கள், தமிழ்நாட்டின் நடுநாயக நகரான திருச்சி யில் இயக்கத்திற்கென்று ஒரு தனி இடத்தை 1950 இல் வாங்கி, அதையே தனது தலைமையகம்போல் வைத்து, பிரச்சாரத்திற்கு அங்கிருந்தே சென்று திரும்பும் முறையைத் தனது பொது வாழ்க்கை முறையாக ஆக்கிக் கொண்டார்!
அதுமட்டுமல்லாமல், தந்தை பெரியார் அவர்கள், தாம் தொடங்கிய ஆரம்பக் கல்விப் பள்ளி, உயர்நிலைப்பள்ளி ஆசிரியப் பயிற்சிப் பள்ளிகள் முதலியன மட்டுமல்லாது, தமிழ்நாடு அரசே கல்லூ ரியை நடத்திட அய்ந்தரை லட்சம் ரூபாய் நன்கொடையை 1966 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பக்தவத்சலம் முதலமைச்சராக இருந்தபோது அவரிடம் அளித்து, திருச்சியில் கல்லூரியை தொடங்கிடக் காரணமானார் தந்தை பெரியார்!
தந்தை பெரியாரின் விருப்ப நகரம் திருச்சி!
பல்லாயிரக்கணக்கில் கல்வி மறுக்கப்பட்ட சமூக மாணவர்கள் அக்கல்லூரியில் படித்துப் பட்டதாரிகளாகி, பார் போற்றும் நாடாளுமன்றவாதிகளாகவும், மேலாண்மையாளர்களாகவும், பல்வேறு உயர் பொறுப்பாளர்களாகவும் வந்துள்ள னர்.
அத்திருச்சிதான் தந்தை பெரியாருக்கு அவர் வாழ்ந்த காலத்திலேயே கட்சி சார்பற்ற நகர மக்கள் குழு சார்பாக முழு உருவச் சிலை அமைத்துப் பெருமை பெற்றது! (17.9.1967)
ஈரோடு நகர் மன்றத் தலைவர் பொறுப்பு என்பது அவரது அரசியல் தொடக்கமானாலும்கூட, திருச்சியையே அவர் மிகவும் பெரிதும் தனது விருப்ப உரிமை நகராக ஆக்கிக் கொண்டார்.
எந்தக் கட்சி அரசாக இருந்தாலும், திருச்சியில் முக்கிய அதிகாரிகள் நிய மனம், திருச்சி நகரின் வளர்ச்சியில் தனிக் கவனமும், அக்கறையும் தந்தை பெரியா ருக்கு உண்டு.
‘‘திருச்சியில் பெரியார் – மணியம்மை குழந்தைகள் நல விடுதி’’ – முதலமைச்சர் அண்ணா அடிக்கல் நாட்டினார்!
அந்நாளில், திருச்சி மாவட்ட மருத்துவ மனையில் குழந்தைகள் நலப் பிரிவு இல்லை என்பதால், அந்நாள் மருத்துவ இயக்குநர் (DMS) திருமதி மரைக்காயர் வழியாக அய்யாவிடம் நன்கொடை தேவை பற்றி, என்மூலம் தமிழ்நாடு அரசு, வேண்டுகோள் விடுத்ததை ஏற்று, ஒரு லட்சம் ரூபாய் பெரியார் அறக்கட்டளை மூலம் அளித்தார் தந்தை பெரியார். அப்போது அறிஞர் அண்ணா முதலமைச்சர்; எஸ்.ஜே.சாதிக்பாட்சா மருத்துவத் துறை அமைச்சர்.
அதற்கான அடிக்கல் நாட்டு விழா, மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு நடைபெற்ற ஒரு நாள் மாலையில் நடைபெற்றது. அந்நிகழ்வில், தமது அமைச்சரவையின் ஒன்பது அமைச்சர்களும் கட்டாயம் கலந்துகொள்ள முதலமைச்சர் அண்ணா தாக்கீது விடுத்து, மிக அருமையானப் பொழிவினைத் தந்து ‘‘பெரியார் – மணியம்மை குழந்தைகள் நல விடுதி’’ அமைக்கக் காரணமானார்.
இப்படிப் பல.
ஆற்றல்மிக்க அமைச்சர் கே.என்.நேரு
அந்தத் திருச்சி, மாநகரமாகிய பின் தி.மு.க.வின் ஆற்றல்மிகு முதல மைச்சர்கள் வரிசையில், அறிஞர் அண்ணா, கலைஞர், இன்றைய முதல மைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டா லின் அவர்களது ‘திராவிட மாடல்’ ஆட்சி யில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் அபாரமாக நடைபெற்று வருகின்றன. ஆற்றல்மிகு முதலமைச்சரது குறிப்பறிந்து செயல்படும் வகையில், முதலமைச்சரின் வழிகாட்டுதல்படி, நெரிசல் மிக்க நகரான திருச்சிக்குப் பல்வேறு அதிசயத்தக்கத் திட்டங்களை நகராட்சித் துறை, குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள், அடுக்கடுக்காகத் திட்டங்க ளைக் கொண்டு வந்து, கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு பலரையும் அரவணைத்து, திருச்சி மாநகரில் பிரமிக்கத்தக்க பல வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்தி வருகிறார்.
நேரில் கண்டோம், மகிழ்ந்தோம் – முதலமைச்சரையும், அமைச்சர் நேருவையும் பாராட்டுகிறோம்!
அண்மையில், பஞ்சப்பூரில் உலகத் தரம் வாய்ந்த (காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள நெருக்கடியைத் தீர்க்க) ‘‘பஞ்சப்பூர் பெரியார் காய்கறி அங்காடி’’ என்று பெயர் சூட்டப்பட்டு, அதில் வணிக வளாகம், லாரி ஓட்டுநர்கள் தங்கி ஓய்வெடுத்து பயணத்தைத் தொடருவதற்கு கனரக சரக்கு வாகன முனையம், (மேலை நாடுகளுக்கு இணையாக பல்வேறு வசதிகள் கொண்டது) நமது முதல மைச்சர் நிதி ஒதுக்கியதன்மூலம் அமைக்கப்பட்டுள்ள, அதிசயிக்கத்தக்க சாதனையைக் கண்டேன்; கண்டறியாத தைக் கண்டேன் மகிழ்ச்சி! முதலமைச்ச ரையும், அமைச்சரையும், திருச்சி மேயரையும், அவருடைய குழுவினரையும், அதிகாரிகளையும் எப்படிப் பாராட்டுவது – இன்ப அதிர்ச்சிக்கு ஆளானேன்!
மூன்று தலைவர்கள் – தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் என கம்பீரமாகக் காட்சியளிக்கும் சிலைகள் எவரையும் வியக்க வைக்கவே செய்கின்றன!
பயணிகள் வசதிக்கென பலப்பல புதுமைத் திட்டங்கள். நிதி நெருக்கடியிலும் – மாநகரத்தின் பெருவளர்ச்சியை உலகத்திற்குப் பறைசாற்றும் வகையில், மக்கள் நலம் சார்ந்த திட்டங்கள் அமைந்துள்ளதைக் கண்டு பரவசம் அடைந்தோம்.
எளிய மக்கள் உள்பட பலரும் வருகை தந்து பார்த்து மகிழ்ந்தனர்.
பாராட்டத்தக்க சாதனைகளின் உச்சம் – முதலமைச்சர் அவர்களையும், துறை அமைச்சர் அவர்களையும் மக்கள், கட்சி வேறுபாடுகளைத் தாண்டி, பாராட்டுகின்றனர். பலர், ‘‘நேரில் சென்று, நீங்கள் பார்த்து வாருங்கள்’’ என்றனர்.
கண்டோம், மகிழ்ந்தோம் – முதல மைச்சரையும், அமைச்சர் கே.என்.நேரு அவர்களையும் பாராட்டுகிறோம்!
அதுபோல, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி அவர்களின் சீரிய முயற்சியால், ஏற்படுத்தப்பட்டுள்ள மாதிரி பள்ளிக்கூடம் திருச்சி மாநகர் கல்வி அணிகலனாகக் காட்சி அளிப்பதைப் பலரும் போற்றினர்.
சாதனை ஆட்சிக்குப் பெயர்தான்
‘‘திராவிட மாடல்’’ ஆட்சி!
‘‘திராவிட மாடல்’’ ஆட்சி!
சாதனை ஆட்சிக்குப் பெயர்தான் ‘திராவிட மாடல்’ ஆட்சி; சரித்திரம் படைப்பதுதான் சமூகநீதிக்கான, அனை வருக்கும் அனைத்தும் அளிக்கும் ஒப்பற்ற மக்கள் ஆட்சி!
தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய தலைவர்களின் சிலை உயர் சரித்திரச் சின்னங்களாக என்றென்றும் விளங்கும் என்பது உறுதி – நமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
23.5.2025