தமிழ்நாடு அரசு நிலைப்பாட்டுக்குச் சரியான வெற்றி இது!

viduthalai
5 Min Read
* எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களைக் கவிழ்த்ததுபோல்,
தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல்’ அரசை அசைத்துப் பார்க்க முடியாது!
* ‘டாஸ்மாக்’ தனிப்பட்ட நபரின் நடவடிக்கையை மய்யப்படுத்தி, அந்நிறுவனத்தில் உள்ள அதிகாரிகளையும், அந்த நிறுவனத்தையும் குற்றக்கூண்டில் நிறுத்துவதா?
அமலாக்கத் துறையை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த வழக்கில்
அமலாக்கத் துறையின் அடாவடித்தனத்தை அம்பலப்படுத்திவிட்டது உச்சநீதிமன்றம்!

‘டாஸ்மாக்கி’ல் தனிப்பட்ட ஒரு நபர் மீதான வழக்கினை அமலாக்கத் துறை வழக்காக மாற்றி, அந்நிறுவன அதிகாரிகளையும், அந்த நிறுவனத்தையும் குற்றவாளிகள்போல் சித்தரித்த போக்கை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த வழக்கில், அமலாக்கத் துறையின் அடாவடித்தனத்தை உச்சநீதிமன்றம் அம்பலப்படுத்தியதை விளக்கி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

நான்கு ஆண்டுகள் முடிந்து, அய்ந்தாவது ஆண்டில் வெற்றிகரமாக ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று பெருமிதத்துடன் அழைக்கப்படும் தி.மு.க. அரசு ஏறுநடை போட்டு, நாளும் மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தி, இந்தியாவின் ஜன நாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி ஆகிய அரசமைப்புச் சட்டத் தத்துவங்களுக்குக் காவல் அரணாகவே செயல்பட்டு வருகிறது.

இதை ஒன்றியத்தில் மைனாரிட்டியாக உள்ள பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். அரசால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

காரணம், திராவிடப் பண்பாடு, மொழி உரிமை, சமூக ஒருங்கிணைப்பு, மத மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்ட பண்பாடு ஆகியவற்றுக்கு கொள்கை, லட்சிய ரீதியாக ஆர்.எஸ்.எஸ். நேர் எதிரானது!

எனவே, தமிழ்நாட்டுத் ‘திராவிட மாடல்’ அரசும் ஒன்றியத்தில் ஆளும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சியும் – இரண்டும் எதிர்மறையான ஆட்சிகள்.

மற்ற மாநிலங்களில் ஆட்சிகளை உடைத்ததுபோல், ஒன்றிய ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. அரசு தமிழ்நாட்டில் செய்ய முடியாது!

தமிழ்நாட்டில் உள்ள ஆட்சியைத் தேர்தல்மூலம் கூட்டுச் சேர்ந்தோ அல்லது தனித்தோ, சில கட்சிகள் – ஊடகங்கள், பணத் திமிங்கலங்களான தொழிலதிபர்கள் கூ(ட்)டினாலும் தோற்கடிக்கவோ, கூட்டணியை உடைக்கவோ, நாக்கில் பதவித் தேனைத் தடவி கட்சிக்குள் கோஷ்டிகளை உருவாக்கி பிளவுபடுத்தியோ, மற்ற சில மாநிலங்களில் செய்ததுபோல, இங்கு ஆளும் கட்சியை உடைக்க முடியவில்லை.

எனவே, ஒரே வழி, தங்களிடம் ஆட்சி அதிகாரம்மூலம் சிக்கியுள்ள ‘திரிசூலங்களான’ – வருமான வரித் துறை – சி.பி.அய். – அமலாக்கத் துறையின் பாய்ச்சல்மூலம் ஊடகங்களின் உதவியோடு ஊதி ஊதி அவப்பெயர் உண்டாக்கி, துரும்பை மலையாக்கிக் காட்டி, தமிழ்நாட்டு மண்ணான பெரியார் மண்ணை மாற்றிவிட தலைகீழாக நின்று பார்க்கிறார்கள்!

‘எண்ணெய்ச் செலவே தவிர, பிள்ளை பிழைக்காது’ என்ற நிலையைக் கண்டு, அரசியல் கூலிப் பட்டாளங்களின் துணையோடு பெரியாரின் பிம்பத்தை உடைக்கவும், தி.மு.க. ஆட்சிமீது சேற்றை வாரி இறைப்பதையும் அன்றாடக் கடமையாக்கிக் கொண்டு சல்லடம் கட்டி ஆடுகிறார்கள்.

இதில் வருமான வரித்துறை, அமலாக்கத் துறை ரெய்டுகள் என்ற ‘‘அஸ்திரங்களை’’ அரசியல் ஆயுதங்களாக்கி வருகின்றது – ஒன்றிய ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. அரசு.

ஒன்றிய பி.ஜே.பி. அரசின்
ஆயுதங்கள்!

அண்மைக்காலமாக இந்திய ஒன்றிய அரசு எதிர்க்கட்சி ஆட்சிகளை, கட்சி மாறிகளைக் கொண்டு கவிழ்த்தல், சிறைச்சாலை, அமலாக்கத் துறை வழக்குகள்மூலம் மிரட்டல் போன்றவைமூலம் பற்பல மாநிலங்களில் ஆட்சிகளை தம்வசம் ஆக்கியுள்ளது.

மாநிலத்திற்குத் தரவேண்டிய நிதியை மறுப்பதும், ஆளுநர்களை எதிர்க்கட்சித் தலைவர்களாக்கும் புதிய முறை, ஏன் பாதுகாப்புத் தருவதைக்கூட அரசியல் உத்திக்கான ஆயுதம்போல் பயன்படுத்துதல் எல்லாவற்றையும், அலுப்பு சலிப்பின்றி நிறைவேற்றி அதிகார துஷ்பிரயோகம் நடைபெற்று வருவது உலகறிந்த ரகசியமாகி வருகிறது!

‘‘பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்

சால மிகுத்துப் பெயின்.’’ (குறள் 475)

மயில் இறகு போன்ற இலகுவானவைக்கூட அளவுக்கு மிஞ்சிய பாரமாக வண்டியில் ஏற்றினால், அச்சு முறிந்துவிடும் என்றார் வள்ளுவர்.

இந்த ஆயுதங்களோ, மயிலிறகுகள் அல்ல; குத்தீட்டிகள் – கொடுவாள்கள் – எத்தனைக் காலம் இந்த ஆயுதப் பிரவேசம்? ஒருபுறம் அவதூறு வெளிச்சம்; மறுபுறம் அச்சத்தின் அகோரம் நீடிக்கும் நிலை!

‘டாஸ்மாக்‘ ஊழலின் முகத்திரையைக் கிழித்த உச்சநீதிமன்றம்!

உச்சநீதிமன்றத்தில் 22.5.2025 அன்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி  பி.ஆர்.கவாய், ஏ.ஜி.மசிஹ் அமர்வின்முன், தமிழ்நாட்டில் ‘‘ஆயிரம் கோடி ரூபாய்’’ டாஸ்மாக் ஊழல் என்று ஒரு வெடியைக் கொளுத்திப் போட்டனர்.

முன்பு தி.மு.க. மீது 2ஜி வழக்கு என்ற ஒரு போலி வழக்கில் பூஜ்ஜியம், பூஜ்ஜியம், பூஜ்ஜியங்களாகப் போட்டு ‘ராஜ்ஜியம்’ செய்ய முனைந்தனர். இறுதி வெற்றிச் சிரிப்பு யாருக்குக் கிடைத்தது?

தனிப்பட்ட ஒரு நபர்மீதான வழக்கினை – அம லாக்கத் துறை வழக்காக மாற்றி, அதே வழக்கிற்கு பலம் ஊட்ட, அவர் பதவி வகித்த டாஸ்மாக் துறையில் ‘ஆயிரம் கோடி ரூபாய் ஊழல்’ என்று ரெய்டு; அமலாக்கத் துறை, டாஸ்மாக் அதிகாரிகளையும், அந்த நிறுவனத்தையும் படாதபாடுபடுத்தியதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தமிழ்நாடு அரசு போட்டது; உயர்நீதிமன்ற அமர்வு தந்த தீர்ப்பின் மேல்முறையீட்டை நேற்று (22.5.2025) உச்சநீதிமன்றத்தில் நடந்த விசார ணையில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு, அமலாக்கத் துறையின் அதீதமான நடவடிக்கை களுக்குத் தடையாணை வழங்கியதோடு, அந்தத் துறையின் அரசியல் அடாவடித்தனத்தையும் சுட்டிக்காட்டியுள்ளதோடு, கூட்டாட்சித் தத்துவத்திற்கும் இப்போக்கு எதிரானது என்று தெளிவுபடுத்தியுள்ளது புதியதோர் வெளிச்சத்தைப்பாய்ச்சி, தமிழ்நாட்டுத் ‘தேர்தல் பிரச்சார ஆயுதம்’ ஒன்றினை பிடுங்கி எறிந்தது போன்ற ஒரு திடீர்த் திருப்பத்தை பா.ஜ.க., ஆர்.எஸ்.எசுக்கு ஏற்படுத்திவிட்டது!

தி.மு.க. ஆட்சியின் நியாயமான சட்டப் போராட்ட வெற்றிகளில் இது அண்மைக்காலத்தின் நியாயமான முக்கிய வெற்றி என்று சொல்லலாம்!

ஒரு சரியான ஆப்பு வைத்த கேள்வியை, உச்சநீதி மன்றம் ஆணியடிப்பதுபோல் கேட்டுள்ளது.

தனி நபர் வழக்குக்காக, ஒரு நிறுவனத்தை, அதன் அதிகாரிகளையும், ஊழியர்களையும், அந்த அமைப்பையும் இப்படி அவதிக்குள்ளாக்கலாமா? என்று அற உணர்வோடு கேட்டுள்ளது!

திண்டுக்கல்லில் பல லட்சம் லஞ்சம் கேட்டு ஒரு பகுதியைப் பெற்ற அமலாக்க அதிகாரி, தமிழ்நாட்டு லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் சிக்கி, சிறைக்குப் போனதற்காக – விசாரணை என்ற பெயரில் அந்தத் துறை அதிகாரிகள் அத்தனைப் பேரையும் விசாரிக்கும் வேலையில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டால் பொறுப்பார்களா? ஏற்பார்களா? நியாயமாகுமா?

இது முழுக்க முழுக்க ஊழல் ஒழிப்பு அல்ல; தி.மு.க. ஆட்சி, மீண்டும் பதவிக்கு வரக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு உமிழும் எச்சில்கள் போன்றவை! எவ்வளவு எச்சில்களானாலும், ‘‘ஏரி’’யாகவோ, ‘‘கடலாக’’வோ ஆக்கி, வெற்றி பெற நினைத்தால், அதைவிட பைத்தியக்காரத்தனம் வேறு உண்டா?

ஊழல் ஒழிப்பு உத்தமர்களின் யோக்கியதை!

‘ஊழல் ஒழிப்பு உத்தமர்களே’, காவிகளே, அவர்களி டம் சரணடைந்து தமிழ்நாட்டை அடகு வைத்து அபயம் தேடும் அரசியல்வாதிகளே, குஜராத்தில் இரண்டு நாள்களுக்குமுன் (குஜராத் மாடல்) ABG Shipyard Ltd, 28 வங்கிகளில், 22,842 கோடி ரூபாய் மோசடி செய்த முதலாளி சிங்கப்பூருக்குத் தப்பி ஓடி, அங்கு குடியுரிமை பெற்று ‘வீர உலா’ வருவதற்கு என்ன பெயர்?

இது பனிப்பாறையின் ஒருமுனைதான்!

தி.மு.க. கூட்டணியினர் இவற்றை நாடெங்கும் அடைமழைப் பிரச்சாரமாகச் செய்யவேண்டும்.

ஏற்கெனவே தமிழ்நாட்டுப் பா.ஜ.க. தலைவர்மீது உள்ள 4 கோடி ரூபாய் தேர்தல் பண வழக்கு உள்பட பேசுபொருளாகாதா? எல்லாம் ‘பூமராங்’ ஆகத் திரும்புமே!

‘வைத்தியரே, முதலில் உம்மைக் குணப்படுத்திக் கொள்ளும்’ (Physician heal Thyself) என்ற பழமொழியே நமக்கு நினைவுக்கு வருகிறது.

கண்ணாடி வீட்டிலிருந்து கற்கோட்டையை நோக்கி கல்லெறிவதால், யாருக்கு நட்டம்?

யோசியுங்கள், அவசர அரசியல்வாதிகளே!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

 

சென்னை
23.5.2025   

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *