பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகப் பணித் தோழர்களுக்கான ஒரு நாள் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் வீ. அன்புராஜ் வழிகாட்டுதலில் 18.05.2025 அன்று காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பெரியார் மருந்தியல் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இப்பயிற்சி முகாமினை துவக்கி வைத்து ‘சுயமரியாதை இயக்கமும் பெண்ணடிமை ஒழிப்பும்’ என்ற தலைப்பில் முதல் வகுப்பினை நிறைவு செய்தார். அதனைத் தொடர்ந்து தஞ்சை தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தை கலைக் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ந. எழிலரசன் ‘பண்பாட்டு படையெடுப்பு’ என்ற தலைப்பில் இரண்டாம் வகுப்பினையும் திராவிடர் கழக தகவல் தொழில்நுட்பக் குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம் ‘ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சாதனைகள்’ என்ற தலைப்பில் மூன்றாம் வகுப்பினையும் நிறைவு செய்தனர்.
மருத்துவமும் மூடநம்பிக்கையும்
மதிய உணவு இடைவெளிக்குப் பிறகு பெரியார் மருத்துவக் குழுமத்தின் இயக்குநர் மருத்துவர் இரா. கவுதமன் ‘மருத்துவமும் மூடநம்பிக்கையும்’ என்ற தலைப்பில் நான்காவது வகுப்பை நிறைவு செய்து கலந்து கொண்ட அனைத்து பணித் தோழர்களுக்கும் தந்தை பெரியார் எழுதிய பேய், பில்லி, சூனியம், ஆவி, ஜோதிட மோசடிகள் என்ற புத்தகத்தினை தமது சொந்த செலவில் வழங்கி சிறப்பித்தார். அய்ந்தாவது நிறைவு வகுப்பினை திருச்சி பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் மேனாள் முதல்வர் பேராசிரியர் ப. சுப்பிரமணியன் ‘ஆசிரியர்களும் அறிவியலும்’ என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் நூற்றுக்கு நூறு மதிப்பெண், நூறு சதவிகிதம் தேர்ச்சி மற்றும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த பெரியார் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பரிசுத்தொகை வழங்கி பாராட்டினார்.
தமிழர் தலைவரின் பதில்கள்
மேலும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் சிறப்பாக குறிப்பெடுத்த
வர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப் பட்டன. தொடர்ந்து பணித் தோழர்களின் கேள்விகளுக்கு ஆசிரியர் அவர்கள் பதிலளித்து நிறைவுரையாற்றினார்.
திருச்சி பெரியார் துவக்கப்பள்ளியின் தாளாளர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமை வகித்த இந்நிகழ்ச்சிக்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா .செந்தாமரை வரவேற்புரை யாற்றினார்.
பெரியார் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் தலைமை ஆசிரியர்கள் முன்னிலையில் நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் செண்பகவள்ளி நன்றி கூற பயிற்சிப் பட்டறை இனிதே நிறைவு பெற்றது. பணித் தோழர்கள் கருத்துப் படிவத்தில் நிகழ்ச்சி சிறப்பாக இருந்ததாகவும் அடிக்கடி இது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும் என்றும் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் இயக்க காப்பாளர் பா.ஆல்பர்ட் கலந்து கொண்டு சிறப்பித்தார். பணித் தோழர்களுக்கு தேநீர் மற்றும் மதிய உணவினை பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தின் ஒருங்கிணைப்பாளர் தங்காத்தாள் சிறப்பாக செய்து கொடுத்திருந்தார்.
இப்பயிற்சிப்பட்டறையில் 24 ஆண்கள் மற்றும் 112 பெண்கள் மொத்தம் 136 பணித் தோழர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பயிற்சிப் பட்டறை சிறப்பாக நடைபெற தக்க ஆலோசனைகளை வழங்கி, தக்க ஏற்பாடுகளையும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் ஒருங்கிணைப்பாளர் இரா . ஜெயக்குமார் சிறப்பாக செய்திருந்தார்.