சென்னை, மே 22 தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை 61 நாட்களுக்கு மீ்ன்பிடி தடை காலம் அமல்படுத்தப்படுகிறது. இந்த நாட்களில் திருவள்ளூர் மாவட்ம் தொடங்கி கன்னியாகுமரி மாவட்டம் வரையிலான 14 கடலோர மாவட்டங்களில் மொத்தம் 15 ஆயிரம் விசைப்படகுகள், இழுவை படகுகள் கடலுக்கு செல்வது இல்லை.
ரூ.8ஆயிரம் நிவாரணம்
இதன் காரணமாக, மீன்பிடிப்பில் ஈடுபடும் பணியாளர்கள் மற்றும் முழுநேர மீன்பிடிப்பை சார்ந்து வாழும் மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுவதால் மீன்பிடி தடைக் கால நிவாரணம் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு முதல் இந்த நிவாரணத் தொகை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டின் 14 கடலோர மாவட்டங்களில் உள்ள 1.75 லட்சம் கடல் மீனவக் குடும்பங்களுக்கு, மீன்பிடி தடைக் கால நிவாரணமாக தலா ரூ.8 ஆயிரம் வழங்குவதற்காக, தமிழ்நாடு அரசு ரூ.140.07 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்நிலையில், சென்னை நந்தனத்தில் உள்ள மீன்வளம், மீனவர் நலத் துறை ஆணையரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மீன்வள துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்று, சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு ஆகிய 3 கடலோர மாவட்டங்களை சேர்ந்த தலா 10 பேருக்கு மீன்பிடி தடைக் கால நிவாரணத் தொகையை அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் வகையிலான ஆணைகளை வழங்கினார். மீன்வள துறை செயலர் ந.சுப்பையன், துறை ஆணையர் இரா.கஜலட்சுமி மற்றும் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.