இந்நாள் – அந்நாள்

viduthalai
3 Min Read

ராஜாராம் மோகன்ராய் பிறந்த நாள் இன்று (22.05.1772)

சதி ஒழிப்பில் ஒரு மறுமலர்ச்சி

இந்திய சமூக சீர்திருத்தவாதிகளில்  வங்கத்தைச் சேர்ந்த ராஜா ராம் மோகன் ராய். “இந்திய மறுமலர்ச்சியின் தந்தை” என்று போற்றப்படுகிறார்.

ஸநாதனத்தின் பழைமைவாத மூடநம்பிக்கைகளில் மூழ்கியிருந்த இந்திய சமூகத்தை தட்டி எழுப்பி, நவீன சிந்தனைகளின் வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததில் முக்கியப் பங்காற்றினார். அவரது சீர்திருத்தப் பணிகளில் தலையாயது, “சதி” எனப்படும் உடன்கட்டை ஏறும் கொடூரப் பழக்கத்தை ஒழித்ததாகும்.

சதி – ஒரு சமூகக் கொடுமை

சதி என்பது, கணவன் இறந்தவுடன், மனைவி தானாகவோ அல்லது கட்டாயத்தின் பேரிலோ தனது கணவனின் சிதையில் உயிரோடு எரிக்கப்படும் ஒரு கொடூரமான நிகழ்வு. இது இந்து மதத்தின் பெயரால் நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்தது. இந்தப் பழக்கம் பல பெண்களுக்கு அவர்களின் உயிரைக் காவு வாங்கியதுடன், சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட மிக மோசமான அநீதிகளில் ஒன்றாகத் திகழ்ந்தது. பல சமயங்களில், வலுக்கட்டாயமாகப் பெண்கள் சிதையில் தள்ளப்பட்டனர். தப்பித்து ஓட முயன்றால், அவர்களை மீண்டும் சிதைக்குள் தள்ளி மரணத்தை உறுதி செய்த கொடூரங்களும் நிகழ்ந்தன.

ராஜா ராம் மோகன் ராய், தனது இளமைக் காலத்திலேயே இந்த சதிப் பழக்கத்தின் கோர முகத்தை நேரடியாகக் கண்டார். அவரது அண்ணன் ஜக்மோகன் மறைந்தபோது, அவரது 15 வயதேயான அண்ணி அல்கமஞ்சரிய தன்னை விட்டுவிடுங்கள் என்று அழுது கெஞ்சியபோதும், அவரை பெரிய மரத்தில் கட்டி அந்தக்கட்டையை அப்படிய எரிந்து கொண்டு  இருக்கும் சிதையில் தூக்கிப் போட்ட கொடூர நிகழ்வு அவரது மனதில் ஆழமான வடுக்களை ஏற்படுத்தியது. இந்தப் பயங்கரமான நிகழ்வு, சதிப் பழக்கத்தை ஒழிக்க வேண்டும் என்ற உறுதியை அவருக்குள் விதைத்தது.

அவர் வெறும் வாய்மொழி சீர்திருத்தவாதியாக இருக்கவில்லை. தனது அறிவு மற்றும் பகுத்தறிவு வாதத்தின் மூலம் சதிப் பழக்கத்தை எதிர்த்து தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் சமஸ்கிருதம், வங்காளம், ஆங்கிலம், பாரசீகம், அரபு போன்ற பல மொழிகளில் புலமை பெற்றவர். இந்த அறிவைப் பயன்படுத்தி, மத நூல்களில் சதிக்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்பதை மக்களுக்கு விளக்கினார். அவர் வேதங்கள், உபநிடதங்கள் போன்ற இந்து மத நூல்களை ஆராய்ந்து, சதிப் பழக்கம் மதத்திற்கு எதிரானது என்பதை வலியுறுத்தினார்.

போராட்டமும் வெற்றியும்

ராஜா ராம் மோகன் ராய் சதிக்கு எதிராக மக்களைத் திரட்டினார். பொதுக் கூட்டங்களை நடத்தினார், பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதினார். அவரது அயராத போராட்டமும், மக்கள் மத்தியில் சதிக்கு எதிராக ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது. பழைமைவாத சக்திகள் அவரது எதிர்ப்பிற்கு உட்பட்டாலும், அவர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.

அவரது இந்த நீண்ட போராட்டத்திற்கு 1829 ஆம் ஆண்டு பெரும் பலன் கிடைத்தது. அன்றைய வங்காள கவர்னர் ஜெனரலாக இருந்த வில்லியம் பென்டிங் பிரபு, ராஜா ராம் மோகன் ராயின் கருத்துக்களையும், போராட்டங்களையும் ஏற்றுக்கொண்டு, சதிப் பழக்கத்தைத் தடை செய்யும் சட்டத்தை (வங்காள சதி ஒழுங்குமுறை) இயற்றினார். ஆரம்பத்தில் இச்சட்டத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பினாலும், 1832 இல் பிரிவி கவுன்சிலில் இச்சட்டம் உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், இந்தியாவில் சதிப் பழக்கம் சட்டவிரோதமாக்கப்பட்டது.

ராஜா ராம் மோகன் ராயின்
தொலைநோக்கு பார்வை

சதி ஒழிப்பு என்பது ராஜா ராம் மோகன் ராயின் சமூக சீர்திருத்தப் பணிகளில் ஒரு முக்கிய மைல்கல். அவர்   சதி ஒழிப்போடு நின்றுவிடவில்லை. பெண் கல்வி, விதவை மறுமணம், பெண் சொத்துரிமை, பலதார மணம் ஒழிப்பு போன்ற பல விஷயங்களுக்காகவும் பாடுபட்டார்.  ராஜா ராம் மோகன் ராயின் சதி ஒழிப்புப் பணி, இந்திய சமூகத்திற்கு அவர் அளித்த ஒரு மகத்தான கொடையாகும். இது ஒரு சமூகக் கொடுமையை முடிவுக்குக் கொண்டு வந்ததுடன், இந்தியாவில் பெண்களின் உரிமைகளுக்கான ஒரு புதிய சகாப்தத்தையும் தொடங்கி வைத்தது.

அவர் ஒரு சமூக சீர்திருத்தவாதி மட்டுமல்ல, நவீன இந்தியாவின் சிற்பிகளில் ஒருவராகவும் போற்றப் படுகிறார்.

தென்னாட்டுப் பார்ப்பனர்கள் தாங்களே வகுப்புத் துவேஷிகளாக இருந்து கொண்டு மற்றவர்களை வகுப்புத் துவேஷிகள், வகுப்பு துவேஷிகள் என்கிறார்கள் என்று கூறியவரும் இதே ராஜாராம் மோகன்ராய்தான்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *