சென்னை, மே 22 அனாதை பிணங்களை அடையாளம் காண இறந்து போனவர்களின் கைரேகையை ஆதார் தரவுடன் ஒப்பிட்டு பார்ப்பது சாத்தியமில்லை என உயர்நீதிமன்றத் தில் ஆதார் அமைப்பு தெரிவித்து உள் ளது.
அனாதை பிணங்கள்
அனாதை பிணங்களை அடையாளம் காண்பது காவல்துறையினருக்கு சவாலாக உள்ளது. இறந்து போன நபர் ஆதார் அட்டை வைத்திருக்கும் பட்சத்தில் அவரது மாதிரி கைரேகைகளை ஆதார் தரவுகளுடன் ஒப்பிட்டு பார்த்தால் இறந்து போன நபர் யார்? என் பதை கண்டறிந்து விட முடியும் என காவல்துறையினர் கருதுகின்றனர்.
அந்த அடிப்படையில் இறந்து போன நபரின் மாதிரி கைரேகையை அமைப்பு தங்களிடம் உள்ள ஆதார் பதிவுகளுடன் ஒப்பிட்டு அந்த நபரின் முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட விவ ரங்களை வழங்க உத்தரவிடக் கோரி திண்டிவனம் துணை காவல்துறை கண்காணிப்பாளர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பாக ஆதார் அமைப்பு பதிலளிக்க உத்தரவிட்டது. அதன்படி, ஆதார் அமைப்பின் துணை இயக்குநர் பிரியா சிறீகுமார் பதில் மனு தாக்கல் செய்தார்.
யாருக்கும் வழங்கப்படாது
அதில், ‘தனிநபர் ஒருவரின் ஆதார் தொடர்பான தகவல்களை அளிப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. அரசின் மானியம் பயனாளிகளுக்கு முறையாக சென்றடைகிறதா?, சம்பந்தப்பட்ட பயனாளி அரசின் மானியத்தைபெறதகுதி உள்ளவரா? என்பது போன்றவற்றை உறுதி செய்வதற்காக சம்பந்தப்பட்ட நபரின் ஆதார் தரவுகள் பயன்படுத்தப்படுகிறது.
மற்றபடி எக்காரணத்தை கொண்டும் தனி நபரின் ஆதார் தரவுகள் யாருக்கும் வழங்கப்படாது. நீதிமன்றம் உத்தரவிட்டாலும் கூட அந்த நபரின் கருத்தை கேட்ட பின்னரே விவரங்கள் பகிரப்படும்.
சாத்தியமில்லை
இறந்து போனவர்களின் கைரேகை மாதிரிகளை ஆதார் தரவுடன் ஒப்பிட்டு பார்ப்பது சாத்தியமில்லை. காகிதம் அல்லது பிற பொருட்களில் சேகரிக்கப்பட்ட கைரேகையை ஆதார் தரவு தளத்துடன் பொருத்தி பார்ப்பதில் தொழில்நுட்ப சிக்கல்கள் உள்ளன.
எனவே, ஒருவரின் மாதிரி கைரேகையை பயன்படுத்தி அவரைப் பற்றிய தரவை எடுப்பது சாத்தியமற்றது என கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு மீண்டும் ஜூன் 12-ந்தேதிக்கு விசாரணைக்கு வருகிறது.