துணைவேந்தர்களை நியமிக்கும் வழக்கில் உயர்நீதிமன்றம் மாநில அரசுக்கு எதிராக அவசர அவசரமாக வழக்கினை நடத்தி, தடையாணை வழங்கலாமா?
உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும்போது,
‘‘கெட்ட நோக்கத்தோடு’’ இப்படி நடந்துகொள்வது ஏன்?
துணைவேந்தர்களை நியமனம் செய்யும் அதிகாரம் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற அமர்வு அவசர அவசரமாக தமிழ்நாடு அரசுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு தடையாணை வழங்கியிருப்பது கண்டனத்திற்குரியது என்று செய்தியாளர்களுக்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேட்டியளித்துள்ளார்.
துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கும் சட்டத்திற்கு உயர்நீதிமன்றம் நேற்று (21.5.2025) இடைக்காலத் தடை விதித்துள்ளது. மைக்கை மியூட் செய்துவிட்டு, தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது – சட்ட விரோதமானது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இன்று (22.5.2025) செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதில் கூறினார்.
அவ்விவரம் வருமாறு:
செய்தியாளர்கள்: நேற்று (21.5.2025) சென்னை உயர்நீதிமன்றத்தில், துணைவேந்தர்கள் நியமன சட்டத்திற்குத் தடையாணையை ஓர் அமர்வு வழங்கியுள்ளதே, அதுபற்றி உங்கள் கருத்து?
தமிழர் தலைவர்: ஏற்கெனவே நான் அறிக்கையில் எழுதியிருக்கின்றேன் (16.5.2025); இது திட்டமிட்ட ஏற்பாடு. அரசமைப்புச் சட்டத்திற்கும், நடைமுறைக்கும் விரோதமாக இரண்டு பேர் அமர்வு திட்டமிட்டு, உச்சநீதிமன்றத்தைவிட, உயர்நீதிமன்றம் உயர்ந்ததைப்போல, தவறான, சட்டவிரோதமான ஒரு தடையாணை கொடுக்கப்பட்டு இருக்கிறது.
அவசர அவசரமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய வழக்கல்ல!
இந்த வழக்கு அவசரமாக எடுத்துக்கொண்டு, விசாரிக்கப்பட வேண்டிய வழக்கும் அல்ல.
அந்த வழக்கை, குறிப்பிட்ட இரண்டு நீதிபதிகள் கொண்ட (ஜி.ஆர்.சுவாமிநாதன், லட்சுமி நாராயணன்) விடுமுறைக் கால அமர்வுதான் விசாரித்து, கடைசி நாளில், அதற்குத் தடை வழங்கவேண்டும் என்கிற ஏற்பாட்டை செய்திருக்கிறார்கள்.
விசாரணையின்போது மாலை 6 மணிக்குமேல், ஒலிபெருக்கியை நிறுத்திவிட்டு, நாங்கள் எப்படி வேண்டுமானாலும் செய்வோம் என்பதுபோல் அவர்கள் சட்டத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள்.
முழுமையாக அந்த நீதிபதியின் போக்கு என்பது கெட்ட எண்ணத்தோடு, Malafide Action என்று நாங்கள் குற்றம் சுமத்துகிறோம்.
அதற்குரிய நடவடிக்கைகள் உரிய நேரத்தில் செய்யப்படும். உச்சநீதிமன்றத்திலும் தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று நம்புகி றோம்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இருக்கும் நிலையில்,
உயர்நீதிமன்றம் தலையிடலாமா?
ஓர் அரசாங்கத்திற்கு, ஒரு வாரத்திற்குள்ளாக பதில் சொல்லவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். மிக முக்கியமான பிரச்சினையில், உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்த ஒரு வழக்கில், அது சம்பந்தமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்ற நிலையில், அதை வழக்குரைஞர்கள் சுட்டிக்காட்டியபோதும், அதைப்பற்றி கவலைப்படாமல், நாங்கள் எங்கள் இஷ்டத்திற்கு ‘‘தானடித்த மூப்பாக நடப்போம்’’ என்பதுபோல சட்டத்தை வளைத்திருக்கிறார்கள்.
இப்படி அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுப்பது எவ்வகை யில் நியாயம்? அதுவும் விடுமுறை காலத்தில், தமது அமர்வின் காலக்கெடு முடிவதற்குள் இந்த இடைக்கால தடை ஆணை வழங்குவதின் உள்நோக்கம் என்ன?
தமிழ்நாடு அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் நோக்கம்!
எனவே, அவர்கள் சட்ட விரோதமாகக் கொடுத்தி ருக்கின்ற தடையாணை மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருக்கின்ற காரணத்தினால், மேலே அதனுள் புக விரும்பவில்லை.
ஆனால், இது முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசுக்கு ஒரு சங்கடத்தை உருவாக்கவேண்டும் என்கிற ஒரு கெட்ட எண்ணத்தோடு, Malafide Intentionஎன்பதோடு இது நடத்தப்பட்டு இருப்பது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்!
– இவ்வாறு செய்தியாளர்களிடம் கூறினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.