தமிழ்நாட்டில் மட்டும் 69% இடஒதுக்கீடு பாதுகாப்பு வந்தது எப்படி?
– மணியோசை –
இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 50% என்ற அளவைத் தாண்டி தமிழ்நாட்டில் மட்டுமே 69% இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. அதுவும் அரசமைப்புச் சட்டத்தின் 9ஆம் அட்ட வணையில் பாதுகாக்கப்பட்டுள்ளது. சட்டரீதியாக இந்த வரலாற்றின் சுருக்கத்தை மும்பை உயாநீதிமன்ற பிரபல வழக்குரைஞர் அபினவ் சந்திரசூட் எழுதியுள்ள”These Seats Are Reserved: Caste, Quotas and the Constitution of India” என்ற நூலில் இடம் பெறும் குறிப்பின் தமிழாக்கம் கீழே தரப்படுகிறது. இடஒதுக்கீட்டை உறுதி செய்யவும் பாதுகாக்கவும் திராவிடர் கழகம் ஆற்றிய இடையறாத பணிகளின் விளைச்சல் அல்லவா இது?
தளர்த்தப்பட்ட ‘50 சதவிகிதம்’
இட ஒதுக்கீடு உச்சவரம்பு
(ஒன்பதாவது அட்டவணை)
இந்திரா சஹாணி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபின் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1994ஆம் ஆண்டில் நாடாளுமன்றம், அரசமைப்புச் சட்டத் தில் திருத்தம் செய்து, 50 சதவிகிதத்திற்கு மேலும் இட ஒதுக்கீடு செயல்படுத்திக்கொள்ள தமிழ்நாடு மாநிலத் திற்கு அனுமதி வழங்கிற்று. தமிழ்நாட்டிற்கு அதுவரை 69 சதவிகித இடஒதுக்கீடு கீழ்கண்டபடி வழங்கப் பட்டிருந்தது:
இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமே 50 சதவிகித இடங்கள் வேலை வாய்ப்புகளிலும் கல்வியிலும் ஒதுக்கப் பட்டிருந்தன. தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 18 சதவிகித இடஒதுக்கீடும் பழங்குடியினருக்கு 1 சதவிகித இடஒதுக்கீடும் இருந்தது.
உச்சநீதிமன்ற முடிவின்படி 50 சதவிகித விதியைத் தளர்த்தி தமிழ்நாடு அதற்கென சட்டம் இயற்றி உறுதி செய்தது. பின்னர், அரசமைப்புச் சட்டத்தில் 76ஆவது திருத்தம் செய்து நாடாளுமன்றம் அந்தச் சட்டத்தை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 9ஆவது அட்டவணை யில் சேர்த்துவிட்டது. இதை விமர்சித்து –
“அரசியல் சந்தர்ப்பவாதத்திற்காக சிறிதும் வெட்கப் படாமல் எதையும் செய்யும் அரசு’’ என்று ஒன்றிய அரசைச் சாடினார் பிரபல வழக்குரைஞர் நானி பல்கிவாலா! அவரு டைய இந்த காட்டமான விமர்சனம் ‘டைம்ஸ் ஆஃப் இண் டியா’ நாளிதழில் பிரசுரிக்கப் பட்டிருந்தது.
அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணை யில் ஒரு சட்டம் இணைக்கப்பட்டுவிட்டால் அது அநேகமாக விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதாகவே ஆகிவிடும். குறிப்பிட்ட சில காரணங்களால் மட்டுமே அது எதிர்ப்புக்கு ஆளாக முடியும். அதாவது, அரச மைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானத்தை அந்தச் சட்டம் மீறிவிட்டதாக இருந்தால், எதிர்க்க வாய்ப்புள்ளது.
மேற்கண்ட சட்டத்திருத்த மசோதா பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேறிற்று. அவையின் உறுப்பினர் எவருமே எதிர்க்கவில்லை. ஆதரவு 348; எதிர்ப்பு பூஜ்யம் என்ற நிலையில் மசோதா நிறைவேறியது – நாடாளு மன்றத்தின் மக்களவையில்,
அந்தக் காலக்கட்டத்தில் மத்தியில் மைனாரிட்டி அர சாகவே இருந்தது பிரதமர் நரசிம்மராவின் தலைமையில் இயங்கிவந்த ஒன்றிய அரசு என்பது இங்கே குறிப்பிடத் தக்க ஒரு விஷயமாகும்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு ஏகமனதான ஒப்புதலைச் சார்ந்தே இருந்தது. நாடாளு மன்றத்தின் மூலம் எளிதில் ஒப்புதல் பெறக்கூடிய நிலை இருந்தது. அய்ம்பது சதவிகிதம் என்னும் உச்சவரம்பு பற்றிய கருத்தியல் சார்ந்த கேள்விகள் எதுவும் நாடாளு மன்றத்தில் அன்று எழவே இல்லை!
அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவில், இடஒதுக்கீடுகள் எல்லோருக்கும் சமவாய்ப்புகள் என்ற கொள்கைக்கு விதிவிலக்கு போன்றதே என்று ஒருமுறை அம்பேத்கர் வலியுறுத்தியிருந்தார். அதைச் சார்ந்த விவாதங்கள் கூட மக்களவையில் அப்போது நடக்க வில்லை.
அரசியல் சார்ந்த இன்னபிற இடஒதுக்கீடுகள் போலவே, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள்தொகை எண்ணிக் கைக்கு ஏற்ப அவர்களுக்கு அரசுப்பணிகளிலும் கல்வி நிலையங்களிலும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலி யுறுத்தினர்!
ஆனால், அந்தச் சட்டத் திருத்த மசோதா நிறைவேறிய பிறகு உச்சநீதிமன்றம் எதிர்க்கட்சி போல் உருமாறி, தமிழ்நாடு அய்ம்பது சதவிகிதத்திற்கு மேல் இடஒதுக்கீடு கள் செய்து கொள்வதற்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப் பித்தது. பொதுப் பிரிவினருக்கு தற்காலிகமாக இடங்களை அதிகரித்துக் கொள்ளுமாறும் தமிழ்நாடு அரசுக்கு அவ்வப் போது உத்தரவிடப்பட்டது.
ஆதாரம்: These seats are RESERVED – Caste, Quotas and the Constitution of India – Abhinav Chandrachand, Pages: 93-94