கி.வீரமணி
- இரண்டாவது எதிரி டைப் அடிக்கப்பட்டதொரு ஸ்டேட் மெண்டை தாக்கல் செய்திருக்கிறார். அவர் தாம் எவ்வித குற்றமும் செய்யவில்லை என்றும், தாம் “குடிஅரசு” பத்திரிகையின் பதிப்பாள ராகவும், பிரசுரதாரராகவும் இருந்தாலும் அந்தப் பத்திரிகையின் ஆசிரிய – நிர்வாக வேலைகள் முழுவதையும் முதலாவது எதிரியே பார்த்துவருவதாகவும் கூறுகிறார். வழக்கில் குறிப்பிடப்பட்ட வியாசம் ராஜநிந்தனையானதென்பதை அவர் மறுக்கிறார். மேற்படி வியாசம் சர்க்காரின் நிர்வாகமுறை முதலியவற்றை ஆட்சேபித்து அவற்றை நியாயமான வழிகளில் திருத்தும்படி, எவ்விதத்திலும் பகை, அல்லது இகழ்ச்சி அல்லது துவேஷத்தை தூண்டிவிடாமலும் அல்லது தூண்டிவிட முயற்சிக்காமலும், நல்லெண்ணத்துடனே எழுதப்பட்ட ஒரு விரிவுரையேயன்றி வேறல்ல என்று கூறுகிறார். சட்ட வரம்புக்குட்பட்ட முறைகளால் பாமர ஜனங்களுடையவும், தொழிலாளிகளுடையவும் உரிமைகளையும், முன்னேற்றத்தையும் அதிகப்படுத்துவதும், பாதுகாப்பதுமே “குடிஅரசு” பத்திரிகையின் கொள்கைகளாக எப்போதும் இருந்து வந்திருப்பதாக அவர் வற்புறுத்துகிறார். சட்டமறுப்பு இயக்கத்தைக் கண்டித்தும் சட்டத்தையும் சமாதானத்தையும் பாதுகாப்பதை ஆதரித்தும் அந்தப் பத்திரிகையில் வெளிவந்துள்ள சில கட்டுரைகளை அவர் எடுத்துக்காட்டுகிறார்.
இப்போது நடைபெற்றுவரும் காரியங்களின் நிலைமையை நியாயமான முறைகளால் அதாவது வருகிற எலக்ஷன்களில் ஜாக்கிரதையுடனும், கவலையுடனும் நடந்துகொள்வதாய் மாற்றுவ தென்பதே அந்த வியாசத்தின் முக்கிய நோக்கம் என்று அவர் உறுதி கூறுகிறார். அந்த வியாசம் பாமர ஜனங்களும் தொழிலாளிகளும் அனுபவித்து வரும் பலவித கஷ்டங்களை எடுத்துக்காட்டியிருப்பது அவசியந்தான் என்று அவர் வற்புறுத்துகிறார். மேற்படி வியாசத்தில் வற்புறுத்தி கூறியிருப்பது பகையை, அல்லது இகழ்ச்சியை உண்டாக்குவதற்காக அல்லவென்றும், ஆனால் பாமர மக்கள் தங்கள் நிலைமையை உணர்ந்து, சரியானபடி வோட் செய்வதால் தங்கள் குறைகளுக்கு பரிகாரம் தேடும்படி செய்வதற்காகவே அப்படி வற்புறுத்தி எழுதியிருப்பதாகவும் அவர் விவாதிப்பதாக அவரது (இரண்டாவது எதிரி) ஸ்டேட்மெண்டினால் எனக்குத் தெரிகிறது.
முடிவாக அவர் ஒரு மொழிபெயர்ப்பைத் தாக்கல் செய்து, அது சரியான மொழிபெயர்ப்பு என்றும், அதைத் தனது ஸ்டேட்மெண்டின் ஒரு பாகமாக ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் கேட்கிறார்.
- வழக்கின் இந்த விஷயத்iதைப்பற்றி கோயமுத்தூர் பப்ளிக் பிராசிக்கியூட்டரால், குற்றப்பத்திரிகை தயாரிப்பதற்கும், முதலாவது இரண்டாவது எதிரிகளின் இரண்டு வக்கீல்களால், அதற்கு மாறாகவும் எடுத்துக்கூறப்பட்ட நீண்ட நியாய வாதங்களைக் கேட்டேன்.
- மேற்படி வியாசத்தைப் பூராவும் படித்துப் பார்க்க வேண்டும் என்றும், அது கல்வி இலாகா நிர்வாகத்தைப்பற்றி நல்லெண்ணத்துடன் செய்யப்பெற்ற, அனுமதிக்கக்கூடிய மதிப்புரை என்றும், பத்திராசிரியர் களுக்கு விரிவான சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும் என்றும், இந்த நாட்டிலே கீழ்நாட்டுப் பேச்சு முறைகளுக்கும், டாம்பீகமான பாஷை நடைக்கும் கழிவு தள்ளியே கவனிக்க வேண்டும் என்றும், “குடிஅரசு” சட்டமறுப்பு இயக்கம் சம்பந்தமாக சர்க்கார் எடுத்துக் கொண்ட நடைமுறைகளை ஆதரித்து எழுதியிருப்பதாகவும் எதிரிகளின் வக்கீல் வற்புறுத்துகிறார்.
- அந்த வியாசத்தின் மொழிபெயர்ப்பை வாசித்துப் பார்த்ததின்மேல், மேற்படி வியாசத்தை முதல் எதிரி எழுதினதாலும், இரண்டாவது எதிரி அதை அச்சிட்டு பிரசுரித்ததாலும், பிரிட்டிஷ் இந்தியாவில் சட்டப்படி ஸ்தாபிக்கப்பட்ட கவர்ன்மெண்டான சென்னை கவர்ன்மெண்டார் மீது பட்சபாதம், ஏழைகளின் உரிமைகள் விஷயமாக எதிர்ப்பு – அசட்டை கொள்ளை, பொறுப்பு இல்லாமை, ஏமாற்றுதல், மோசடி, அயோக்கியத்தனம், கொடுங்கோன்மை, குரூரம், தந்திரம் முதலிய குற்றங்களைச் சுமத்தி, அதன்மூலமாக இந்தியன் பினல் கோர்ட் 124ஏ. செக்ஷன்படி தண்டிக்கப்படத்தக்க ஒரு குற்றத்தைச் செய்ததாக எதிரிகள் ஒவ்வொருவர்மீதும் தனிக் குற்றப் பத்திரிகைத் தயாரித்தேன்.
- எதிரிகள் ஒவ்வொருவரும், தாம் குற்றவாளி அல்ல என்று கூறுகிறார்கள், வாதிதரப்பு சாட்சிகளில் யாரையாவது மீண்டும் குறுக்குவிசாரணை செய்யவாவது, அல்லது எதிர்வாதத்துக்காக சாட்சிகளை விசாரிக்கவாவது இருவரும் விரும்பவில்லை.
- மேற்படி வியாசத்தை முதல் எதிரி எழுதுகிறார் என்பதும், இரண்டாவது எதிரி அதை அச்சிட்டு பிரசுரித்ததாகவும் நிரூபிக்கப் பட்டுவிட்டது.
- இரண்டாவது எதிரியின் வக்கீல், வாதிதரப்பு இரண்டாவது சாட்சியினால் செய்யப்பட்ட மேற்படி வியாசத்தின் மொழிபெயர்ப்பு சரியல்ல என்றும் கூறினார். அவருடைய வழக்காளி தமது ஸ்டேட் மெண்டுடன் அந்த வியாசத்தின் மொழிபெயர்ப்பு ஒன்றையும் தாக்கல் செய்திருக்கிறார்.
- மேற்படி வியாசம் 124 ஏ. செக்ஷன்படி குற்றமுள்ளதென்ற எனது அபிப்பிராயத்துக்கு ஆதாரமாகக் குற்றப் பத்திரிகையில்
ஹ. முதல் ஐ. முடிய சில வாக்கியத் தொடர்களைக் குறிப்பிட்டிருக்கிறேன். அவை எக்சிபிட் நு. என்ற (இங்கிலீஷ்) மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டவை.
- வாதிதரப்பு இரண்டாவது சாட்சியின் மொழிபெயர்ப்பு தவறானதென்றும், எதிரிகளுக்கு பாதகமானதென்றும் எதிரிகள் எடுத்துக் காட்டியிருக்கலாம். இரண்டுவிதமாக அப்படிச் செய்யலா மென்று எனக்குத் தோன்றுகிறது. முதலாவது ஒரு சரியான அகராதியை வைத்துக்கொண்டு மேற்படி தமிழ் வியாசத்தை வாக்கிய வாக்கியமாக எடுத்து வாதிதரப்பு இரண்டு சாட்சியை (கவர்ன்மெண்ட் தமிழ் மொழிபெயர்ப்பாளரை) குறுக்கு விசாரணை செய்வது, இரண்டாவது எதிர்தரப்பில் ஒரு தமிழ் அறிஞூரை ஆஜராக்கி அவருடைய பாஷை, அறிவு வாதிதரப்பு இரண்டாவது சாட்சியின் அறிவுக்குச் சமமானது, அல்லது அதிலும் சிறந்ததென்று நிரூபித்து அவர் (மேற்படி வியாசத்திலுள்ள) பல வாக்கியத் தொடர்புகளுக்குச் செய்கிற மொழிபெயர்ப்பைத் தாக்கல் செய்வது.
- இதில் முதலாவது முறை அனுசரிக்கப்படவில்லை. வாதிதரப்பு இரண்டாவது சாட்சியின் மறு விசாரணை முடிந்தவுடனே அவர் கோயமுத்தூரிலிருக்க வேண்டுமென்று எதிரி தரப்பு வக்கீல் விரும்புகிறார்களாவென்று கேட்டேன். அவர்கள் இல்லையென்று சொன்னார்கள். எனவே மேற்படி சாட்சி கோர்ட்டிலிருந்து போய்விட்டார். மேலே கூறியபடி எதிரிதரப்பில் சாட்சிகள் கொண்டுவரப்படவில்லை. வாதிதரப்பு இரண்டாவது சாட்சி, தான் சென்ற பதினேழு வருடகாலமாக கவர்ன்மெண்டாருக்குத் தமிழ் மொழிபெயர்ப்பாளராக இருந்து வருவதாகக் கூறுகிறார். எனவே அவர் சரியாக மொழிபெயர்ப்புச் செய்யத் திறமை உள்ளவர் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் என்றுதான் கருதுகிறேன். அவருடைய மொழிபெயர்ப்பு பாதகமானது என்றோ, அல்லது மிகைபடக் கூறியுள்ளது என்றோ கூறுவதானால், அந்த வாக்கியங்களைக் குறுக்கு விசாரணையில் வார்த்தை வார்த்தையாக அலசிக்காட்டி அதை நிரூபிக்க எதிரிகளுக்கு இடமிருந்தது. ஆனால் எதிரிகள் அப்படிச் செய்ய முயற்சிக்கவில்லை. நான் முதல் வியாசத்திலுள்ள வாக்கியங்களை எனது மாஜிஸ்ட்ரேட் கிளார்க்கின் உதவியைக் கொண்டும், ஒரு அகராதியின் உதவியைக்கொண்டும், ஆராய்ந்து பார்த்தேன். வாதிதரப்பு இரண்டாவது சாட்சியின் மொழிபெயர்ப்பு மிகைப்படக்கூறும் மொழிபெயர்ப்பல்ல என்பது எனது அபிப்பிராயமாகும்.
- அந்த வியாசம் கவர்ன்மெண்டின் மாற்றப்பட்ட இலாகாக்களில் ஒரு பகுதியின் நிர்வாகத்தை மாத்திரம் கண்டிக்கிறதென்று சொல்வதை ஒப்புக்கொள்ளக்கூடிய எதிர்வாதமாக நான் கருதுகிறேனில்லை, சென்னை அரசாங்கம் ஒரே ஸ்தாபனந்தான். அதில் ஒரு பாகத்தைக் கண்டிப்பது கவர்ன்மெண்டு முழுவதையும் கண்டிப்பதாகும் என்று நான் கருதுகிறேன். வரிகள் அதிகரித்துவிட்டதென்றும், அதனால் ஏற்பட்ட நன்மைகள் அந்த வரி அதிகரிப்பிற்குச் சமமாக இல்லையென்றோ, அல்லது அந்த நன்மைகள் சரியானபடி பகிர்ந்து கொடுக்கப்படவில்லையென்றோ, சொல்லுவதற்கும், வரிப் பணத்தைச் சரியானபடி செலவழிக்கும்படி செய்யத்தக்க ஆட்களைத் தேர்தலில் தேர்ந்தெடுத்து அனுப்புமாறு பொது ஜனங்களை வற்புறுத்துவதற்கும் ஒரு பத்திராசிரியருக்கு, அல்லது ஒரு பிரஜைக்கு உரிமை உண்டென்பதில் சந்தேகமில்லை. ஏழை ஜனங்கள் கவனிக்கப்படுகிற தில்லை அல்லது அவர்களின் உரிமைகள் விஷயமாக அவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள், வரிப்பணத்தால் ஏற்படுகிற நன்மைகளெல்லாம் பணக்கார வகுப்பாருக்கே கிடைக்கின்றன என்பதுதான் அந்த வியாசத்தின் உட்பொருளாகும். அப்படிப் பணக்காரருக்குத்தான் எல்லா நன்மைகளும் கிடைக்கிறது என்பதையும், தேர்தல்களில் சரியான முறையை அனுசரித்து அதைச் சரிப்படுத்த வேண்டுமென்பதையும் 124-ஏ. செக்ஷன்படி குற்றம் ஏற்படாமல் எழுதியிருக்கலாம். ஆனால் அந்த வியாசத்திலோ மோசடி, அயோக்கியத்தனம், பாமர ஜனங்கள் சுகவாழ்க்கையைப்பற்றி அசிரத்தை என்ற குற்றச் சாட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாகக் காணப்படுகின்றன.
- கீழ்நாட்டு பேச்சு வழக்கத்துக்கும், டாம்பீக பாஷை நடைக்கும் கழிவுதள்ள வேண்டும் என்கிற வாதத்துக்கு இடமேயில்லை என்று எண்ணுகிறேன். முதலாவது எதிரி சில வருடங்களாக தமிழிலேயே எழுதி வந்திருப்பதால் தமிழ் வார்த்தைகளின் அர்த்தத்தை நன்றாய் அறிந்த ஒரு ஆளாக இருக்கவேண்டும். நன்றாய் படித்த ஒருவர் அந்த வியாசத்தைப் படித்தால் அதை எழுதியவர் கல்வி முறையைக் குறித்து அதிருப்தி கொண்டிருப்பதாகத் தெரிந்துகொண்டு அவர் தமது கருத்துகளை அவ்வித பாஷை நடையில் வெளியிடுவதற்கு ஏன் இடங்கொடுக்கப்பட வேண்டும் என்று ஆச்சரியப்படலாம். குறைந்த படிப்புள்ள ஒருவர் அந்த வியாசத்தை வாசித்து அதே முடிவுக்கு வரலாம். ஆயினும் அந்த வியாசத்தில் உபயோகிக்கப்பட்ட வார்த்தைகளின் தெளிவான அர்த்தப்படியேதான் கவர்ன்மெண்டாரின் நடத்தையும், நோக்கங்களும் இருக்கின்றன என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்படக்கூடும். முதலாவது எதிரி அவர் எழுதியிருப்பதின் தெளிவான அர்த்தத்தை மறுக்க முடியாது என்று கருதுகிறேன். இரண்டாவது எதிரி தம் இஷ்டமாகவே அந்த வியாசத்தை அச்சிட்டு பிரசுரித்தவராக இருப்பதால், அதை முழு உத்திரவாதத்துடனே அச்சிட்டுப் பிரசுரித்ததாகவே தீர்மானிக்க வேண்டியிருக்கிறது. அந்த வியாசத்தை பிரிட்டிஷ் இந்தியாவில் சட்டபூர்வமாக ஸ்தாபிக்கப் பெற்றுள்ள சென்னை கவர்ன்மெண்டாருக்கு விரோதமாக இந்தியன் பீனல் கோடு 124-ஏ செக்ஷனில் விவரிக்கப்பட்டுள்ள உணர்ச்சி களையும், மனப்பான்மையும் தூண்டிவிடும் ஒரு முயற்சி என்று தீர்மானிக்க வேண்டியிருக்கிறது.
- ஆகையால் குற்றஞ்சாட்டப் பெற்றவர்கள் ஒவ்வொருவரும் அந்த செக்ஷன்படி தண்டிக்கப்படத்தக்க ஒரு குற்றத்தைச் செய்திருப்பதாக நான் தீர்மானிக்கிறேன்.
- நான் முதலாவது குற்றஞ்சாட்டப்பெற்றவரான தோழர் ஈ.வெ.இராமசாமி நாயக்கருக்கு ஆறுமாத வெறுங்காவலும் 300 ரூபாய் அபராதமும் தண்டனை விதிக்கிறேன். அபராதம் செலுத்தத் தவறினால் அவர் பின்னும் ஒரு மாதம் வெறுங்காவல் தண்டனை அனுபவிக்க வேண்டும். இரண்டாவது குற்றஞ்சாட்டப்பெற்றவரான மிஸஸ் எஸ்.ஆர்.கண்ணம்மாளுக்கு மூன்று மாத வெறுங்காவலும் 300 ரூபாய் அபராதமும் தண்டனை விதிக்கிறேன். அபராதம் செலுத்தத் தவறினால் அவர் பின்னும் ஒரு மாதம் வெறுங்காவல் தண்டனை அனுபவிக்க வேண்டும்.
பகிரங்கக் கோர்ட்டில், குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் முன்னிலையில் தீர்ப்புச் சொல்லப்பட்டது. குற்றஞ்சாட்டப் பட்டவர் அபராதத்தை உடனே செலுத்தத் தயாராக இல்லை.
(ஒப்பம்) ஜி.டபிள்யூ. வெல்ஸ்,
டிஸ்டிரிக்ட் மாஜிஸ்டிரேட், 24.1.1934
– ‘புரட்சி’, 04.02.1934
– தொடரும்