குழந்தைத் திருமணத்தில் கலந்து கொள்பவர்களும் குற்றவாளியே! திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

viduthalai
2 Min Read

திருப்பூர், மே 22- பெண்ணுக்கு 18 வயதுக்கு முன்பும், ஆணுக்கு 21 வயதுக்கு முன்பும் நடத்தப்படும் திருமணம் குழந்தைத் திருமணம் ஆகும். குழந்தைத் திருமண தடை சட்டத்தின்படி, குழந்தைத் திருமணத்தை நடத்தியவர்கள், நடத்த தூண்டியவர்கள், குழந்தைத் திருமணங்களில் கலந்து கொள்பவர்கள் குற்றவாளி என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் எச்சரித் துள்ளார். குழந்தைத் திருமணம் செய்தால் 2 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப் படும் என்றும் அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில், “பெண்ணுக்கு 18 வயதுக்கு முன்பும், ஆணுக்கு 21 வயதுக்கு முன்பும் நடத்தப்படும் திருமணம் குழந்தைத் திருமணம் ஆகும். குழந்தைத் திருமண தடை சட்டத்தின்படி, குழந்தைத் திருமணத்தை நடத்தியவர்கள், நடத்த தூண்டியவர்கள், குழந்தைத் திருமணங்களில் கலந்து கொள்பவர்கள் குற்றவாளி ஆவார்கள். இந்த குற்றம் புரிந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் அல்லது 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

அனைத்து திருமண மண்டபங்கள் மற்றும் கோவில்களில் திருமணம் நடத்த முன்பதிவு செய்ய வருபவர்களிடம் மணமகன் மற்றும் மணமகள் ஆகியோரின் ஆதார் கார்டு மூலம் பிறந்த தேதி, நிரந்தர முகவரி ஆகியவற்றை உறுதி செய்த பின்னரே திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுக்கு குழந்தைத் திருமணத்தால் ஏற்படும் விளைவுகளை தங்கள் நிறுவன பணியாளர்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அறிவுரை வழங்க வேண்டும். குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவது தெரிந்தால் உடனடியாக புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்பவர்களின் பெயர்கள் ரகசியம் காக்கப்படும்.

புகார் தெரிவிக்க திருப்பூர் ஆட்சியர், மாவட்ட சமூக நல அலுவலர், அறை எண்.35, ஆட்சியர் அலுவலகம், திருப்பூர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், அறை எண். 705 ஆகியவற்றையும், சைல்டுலைன் 1098 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். பெண்கள் உதவி மய்யம் 181 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.

இதுதவிர ஊராட்சி தலைவர், சமூக நல விரிவாக்க அலுவலர்கள், ஊர்நல அலுவலர்கள், அங்கன் வாடி பணியாளர்கள், தலைமையாசிரியர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி ஆகியோரிடம் புகார் தெரிவிக்கலாம்.”

இவ்வாறு திருப்பூர் ஆட்சியர் கிறிஸ்துராஜ் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *