‘தமிழ் மொழியைக் காட்டுமிராண்டி மொழி’ என்று பெரியார் ஏன் சொன்னார்?
‘‘என் பார்வையில், மொழி என்பது ஒரு போர்க்
கருவியாக இருக்கவேண்டும்!’’ – பெரியார்’’
ரபேல் விமானங்கள், நவீன ஆயுதங்கள் தேவைப்படும் இக் காலகட்டத்தில் ‘வேல், வில், அம்பு’ வைத்துப் போர் புரிய முடியுமா?
சென்னை, மே 21 ‘‘என் பார்வையில், மொழி என்பது ஒரு போர்க் கருவியாக இருக்கவேண்டும்’’ என்றார் பெரியார். பண்பாட்டுப் படையெடுப்பு நடக்கின்ற நேரத்தில், மொழியை வைத்துத்தான் நாம் போராடவேண்டி இருக்கும். அந்த மொழிப் போராட்டமென்பதும் பண்பாட்டுப் பாதுகாப்புக்குரியதாக அமையவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.
‘‘ஹலோ பண்பலைக்குத்’’
தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி!
தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி!
கடந்த 30.4.2025 அன்று ஹலோ பண்பலைக்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பேட்டியளித்தார்.
அவரது பேட்டியின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
நெறியாளர்: பெரியார் எந்தச் சூழ்நிலையில், தமிழ் மொழியைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார்?
தமிழர் தலைவர்: ‘‘நீ உருப்படுவியா?’’ என்று மக னைப் பார்த்து அப்பா கேட்பார். ‘‘நீ உருப்படவே மாட்டாய்; அதனால், நீ வீட்டை விட்டுப் போ’’ என்று கோபமாகக்கூட அப்பா கத்துவார்.
அதனால் அப்பா, மகனை வீட்டை விட்டு வெளி யேற்றுகிறார் என்று அர்த்தமல்ல.
அதுபோன்றுதான் தந்தை பெரியாரும்!
அறிவியல் காலத்திற்கேற்ப
மொழி வளர்ச்சியடைவேண்டும்!
மொழி வளர்ச்சியடைவேண்டும்!
எதிலும் வளர்ச்சிப் பற்றைத்தான் விரும்புவார் அவர். தமிழ் என்ற மொழியை வைத்துக்கொண்டு பழம்பெருமையைப் பேசிக் கொண்டிருக்கக் கூடாது. இது அறிவியல் காலம். அதற்கேற்றாற்போல் மொழி வளர்ச்சியடையவேண்டும்.
‘‘காட்டுமிராண்டிக் காலத்து மொழி’’ என்றுதான் பெரியார் சொன்னார்.
இப்படி அவர் சொன்னதை வைத்துதான், புரியாத வர்கள் ஏதோ பெரிதாக விளையாடுகிறார்கள்.
நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன், அதற்குப் பதில் சொல்லுங்கள்.
‘‘கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி’’ என்று தமிழ்மொழியைச் சொல்கிறார்கள். இதைச் சொல்லாதவர்கள் உண்டா?
தமிழ் மொழிக்குப் பெருமை என்று, இதைத்தான் சொல்கிறார்கள். இதற்கு என்ன அர்த்தம்?
‘‘கல் தோன்றி, மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி’’ என்றால், அது எந்தக் காலம்?
ஆதிகாலம்தானே!
பொதுமக்களுக்கு விளங்கும்படியாக பெரியார் சொன்னார்!
பச்சையாக, பொதுமக்களுக்கு விளங்கும்படியாக காட்டுமிராண்டிக் காலம் என்று சொல்கிறார் பெரியார்.
ஆகவே, காட்டுமிராண்டிக்காலத்துத் தமிழ் என்றால், பழைமையான தமிழ் என்று அர்த்தம். அது வரலாற்றுப் பெருமைக்கு வேண்டுமானால் பயன்படும்.
பழைய கட்டடம் என்பதுதான் பெரியார் சொன்ன உதாரணம். அப்படியென்றால், பழைய கட்டடத்தை நெருங்குவதற்குப் பயப்படுவார்கள் அல்லவா!
பழைய கட்டடத்தையெல்லாம் இப்போது புதுப்பிக்கிறார்கள். பழைய கட்டடத்திற்கு (Heritage Building) எல்லாம் ஒரு பெயர் வைத்திருக்கிறோம். அதைப் பாதுகாக்கவேண்டும் என்றும் சொல்கிறோம். அதைப் பாதுகாப்பது மட்டும் போதாது. அதனை சீரமைப்பதும் மிகவும் முக்கியமாகும்.
அதுபோன்று, தமிழ் மொழி வளர்ச்சியடைவேண்டும் என்று தந்தை பெரியார் நினைத்தார்.
மொழி என்பது ஒரு போர்க் கருவியாக இருக்கவேண்டும்!
‘‘என் பார்வையில், மொழி என்பது ஒரு போர்க் கருவியாக இருக்கவேண்டும்’’ என்றார் பெரியார்.
பண்பாட்டுப் படையெடுப்பு நடக்கின்ற நேரத்தில், மொழியை வைத்துத்தான் நாம் போராடவேண்டி இருக்கும். அந்த மொழிப் போராட்டமென்பதும் பண்பாட்டுப் பாதுகாப்புக்குரியதாக அது அமைய வேண்டும்.
இப்போது ஏன் ரபேல் விமானங்களை வாங்குகி றார்கள்? இவர்கள் என்னதான் இராமனைக் கொண்டா டினாலும், இராமனுடைய ஆயுதம் வில். அதனையே பாகிஸ்தான்மீது ஏவலாம் என்று சொல்வார்களா? சொல்லவே மாட்டார்கள்.
கொச்சைப்படுத்துகிறோம் என்று அர்த்தமாகுமா?
பழங்கருவிகளான வேல், வில், அம்பு எல்லாவற்றை யும் எங்கள் ஆதிகாலத்து மனிதர்கள் பயன்படுத்திப் போர் செய்தார்கள் என்று வரலாற்றுப் பெருமையாகச் சொல்லலாம். அப்படி சொல்வதனால், அதைக் கொச்சைப்படுத்துகிறோம் என்று அர்த்தமாகுமா?
முதலில் கண்டுபிடித்தது வேல்தான். அதற்குப் பிறகுதான் வில் கண்டுபிடிக்கப்பட்டது. தூரத்தில் ஏதாவது மிருகம் வந்தால், அதை நோக்கி எறியப்பட்டது தான் வேல் என்ற ஆயுதம்.
இரா.பி.சேதுப்பிள்ளை
இரா.பி.சேதுப்பிள்ளை, ஓர் அருமையான புத்த கத்தை எழுதியிருக்கிறார் ‘‘வேலும் – வில்லும்’’ என்ற தலைப்பில்.
இரும்புக் கம்பியை எடுத்து பழுக்க நெருப்பில் காய்ச்சி வார்க்கப்பட்டதுதான் வேல். மிருகங்களை நோக்கி எறியப் பயன்பட்டது.
ஆனால், வில் என்பதைக் குறி வைத்துத் தூக்கி எறிய முடியாது. பகுத்தறிவின் காரணமாக, யோசித்தன் விளைவாக, வில்லை வைத்து எறிவதற்காக ஒரு நாண் கண்டுபிடித்தான். ‘அதுதான் புராண காலத்து ஆயுதம். இந்தக் காலத்திலேயும் அதையே பயன்படுத்தவேண்டும். நம் கடவுள்களும் அதையே பயன்படுத்தினார்கள். ஆகவே, அதனையே நாம் இன்றைக்கும் பயன்படுத்த வேண்டும்’ என்று சொன்னால், யாரும் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
இன்றைக்கு அறிவியலின் கண்டுபிடிப்பான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தேவைப்படுகிறது.
எதிரி என்ன ஆயுதம் எடுக்கிறான் என்பதைப் பார்த்து, நாம் என்ன ஆயுதம் எடுக்கவேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டி இருக்கிறது.
ஆகவே, மொழி என்பது ஒரு போர்க் கருவியாக இருக்கவேண்டும். மொழி என்பது அவ்வப்போது புதுப்பிக்கப்படவேண்டும். சாணைத் தீட்டப்பட வேண்டும் என்பதற்காகப் பெரியார், ‘‘தமிழ் மொழி இன்ன மும் காட்டுமிராண்டி மொழியாகவே இருக்கக்கூடாது; வளர்ச்சி அடையவேண்டும்’’ என்று சொன்னார்.
தமிழ் வரலாற்றில் மொழி அறிஞர்கள் நிறைய இருக்கிறார்கள். பெரியார் செய்த அளவிற்கு, வேறு யாரும் தொண்டு செய்யவில்லை. உதாரணம், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்.
ஆங்கிலம் 26 எழுத்துகள்தான்;
தமிழ் எழுத்துகள் 247
தமிழ் எழுத்துகள் 247
கணினியில், ஆங்கில எழுத்துகள் வந்தாகிவிட்டது. ஆனால், தமிழ் எழுத்துகள் வர முடியவில்லை. நாம் கஷ்டப்பட்டு, தட்டச்சில் தமிழ் எழுத்துகளைப் பயன்படுவதைக் கண்டுபிடித்தோம். ஆனாலும், தவறு வராமல் இருக்கவே முடியாது. காரணம் என்ன வென்றால், ஆங்கிலம் 26 எழுத்துகள்தான்.ஆனால், தமிழ் எழுத்துகள் 247.
தந்தை பெரியார் அவர்கள், மொழியறிஞர் அல்ல; பகுத்தறிவுவாதி. எனவே, பயன் கருதி எதையும் செய்யவேண்டும் என்று நினைப்பவர். மக்களுக்கு மொழி பயன்படவேண்டும். பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்தால், அவர்களுடைய மனதில் எளிதில் பதியவேண்டும் என்று நினைத்தார்.
இன்றைக்குக் கணினியில் தட்டச்சு தமிழ் எழுத்துகள் மிகவும் எளிமையாக்கப்பட்டு விட்டன.
ஆங்கிலத்தில் பதில் அளிக்கவேண்டுமானாலும், தமிழ் மொழியில் பதிலளிக்கவேண்டுமானாலும், மிக வும் எளிமையாக கைத்தொலைப்பேசியில் பதிவிடு கிறார்கள்.
எழுத்துகளும் எளிமையாக்கப்பட்டு இருக்கின்றன!
‘நன்றி’ என்பதற்கு, மூன்று எழுத்துகள்தான். ஆனால், ஒரு ‘கும்பிடு’ குறியீட்டைப் போட்டு விடுகிறார்கள். நன்றி என்பதை இப்படி மிக எளிமையாக தட்டச்சு செய்துவிடுகிறார்கள். எழுத்துகளும் எளிமை யாக்கப்பட்டு இருக்கின்றன.
அவை யாருடைய எழுத்துகள்?
பெரியாருடைய எழுத்துகள்.
பெரியார் நூற்றாண்டில்,
பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம்!
பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம்!
பெரியாருடைய எழுத்துச் சீர்திருத்தத்தை நடை முறைக்குக் கொண்டுவந்த பெருமை தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆருக்கு உரியதாகும். பெரியாருடைய நூற்றாண்டில் அதனை செய்தார்.
சிங்கப்பூர் உள்பட உலகத்தில் உள்ள தமிழர் வாழும் அத்துணை நாடுகளிலும் அது நடைமுறைக்கு வந்திருக்கிறது.
தமிழ் மொழி எழுத்துச் சீர்திருத்திற்குத் தந்தை பெரியார் அளவிற்குச் செய்தவர்கள் வேறு யாராவது தமிழ்நாட்டில் இருக்கிறார்களா?
எத்தனையோ தமிழறிஞர்கள் இருக்கிறார்கள்; எத்தனையோ இலக்கியவாதிகள் இருக்கிறார்கள். அவர்கள் பதவுரை, பொழிப்புரை போன்றவற்றையெல்லாம் எழுதியிருக்கிறார்கள். ஆனால், மொழி வளர்ச்சிக்கு அவர்களுடைய பங்கு என்ன?
தவத்திரு குன்றக்குடி அடிகளார் போன்றவர்கள், பெரியாருக்குத் தலைசிறந்த மாணாக்கர்கள் போல, சீடர்களைப்போல தோழமை உணர்வோடு இருந்தனர்.
நெறியாளர்: இப்படி பல விஷயங்களைச் செய்த பெரியார், பெண்களுடைய முன்னேற்றத்திற்காக அடிப்படையில் பல காரியங்களைச் செய்த பெரியார், ஒரு கட்டத்தில், ‘‘உனக்கு காம இச்சை ஏற்பட்டால்’’…
நாங்கள் பைத்தியக்காரர்களுக்குப்
பதில் சொல்வதில்லை!
பதில் சொல்வதில்லை!
தமிழர் தலைவர்: முதலில் நீங்கள் கேட்கின்ற கேள்வியே தவறு. பெரியார் சொன்னதாக, இதைச் சொன்ன ஆசாமி இருக்கிறாரே, அதை அவர் நிரூபித்து இருக்கிறாரா? ஓடி ஒளிந்து கொண்டார். ஆகவே, அதைப்பற்றி பேசாதீர்கள். அதுபோன்று பெரியார் பேசவே யில்லை. அவ்வாறு அவர் பேசினார் என்பதற்கான ஆதாரங்களைக் காட்டுங்கள் என்றுதான் கேட்கிறோம், இதுவரையில் ஆதாரத்தைக் காட்டவில்லை. போகிற போக்கில் சொல்லிவிட்டு, எங்கேயோ அவர் ஓடிப் போய்விட்டார்.
நாங்கள் பைத்தியக்காரர்களுக்குப் பதில் சொல்வ தில்லை.
பெரியார், தமிழர்கள் என முன்னிறுத்தாமல், திராவிடர்கள் என்று ஏன் முன்னிறுத்தினார்?
நெறியாளர்: பெரியார், திராவிடம், திராவிடர்கள் என்பதைப் பல பின்னணிக் காரணங்களோடு சொல்லி யிருக்கிறார். ஆனால், இன்றைக்குப் பெரியாரைப்பற்றி விமர்சிக்கின்றவர்கள், பெரியார், தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்பதினால்தான், தமிழர்கள் என முன்னிறுத்தாமல், திராவிடர்கள் என்று முன்னிறுத்தினார் என்று சொல்கிறார்களே?
மனுநீதியிலேயே
திராவிடம் என்ற சொல் இருக்கிறது!
திராவிடம் என்ற சொல் இருக்கிறது!
தமிழர் தலைவர்: இது தவறானது. பாரதிதாசனுக்குத் தாய்மொழி எது?
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாளை உலகம் முழுவதும் கொண்டாடும்படி தமிழ்நாடு அரசு சார்பாக அறிக்கை விடப்பட்டு இருக்கிறது.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், ஆந்திராவில் இருந்து வந்தவரா?
கலைஞர் என்ன தெலங்கானாவில் இருந்து வந்தவரா?
மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை தெலுங்கு நாட்டிலிருந்து வந்தவரா?
மொழி வாழ்த்துப் பாடுகிறோமே, அப்போது எல்லோரும் எழுந்து நிற்கின்றோமே, அந்தப் பாடலை எழுதியவர் யார்?
பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரம். அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்?
நாஞ்சில் நாட்டைச் சேர்ந்தவர்.
அவர் ஏன் “திராவிடம்’’ என்று சொன்னார்?
அவர் மட்டுமா, திராவிடம் என்று சொன்னார்? மனுநீதியிலேயே திராவிடம் என்ற சொல் இருக்கிறது.
மனுநீதி 10 ஆவது அத்தியாயத்தில் இருக்கிறது.
‘திராவிடம் என்பதை வெள்ளைக்காரர்கள்தான் கொண்டு வந்தார்கள்; கால்டுவெல்தான் அதனைச் செய்தார்; இங்கே இருப்பவர்கள் அதனைப் பின்பற்றினார்கள்’ என்று திட்டமிட்ட பொய்ப் பிரச்சா ரத்தைச் செய்தனர். பதவி உயரத்தில் உட்கார்ந்து கொண்டு, மக்களின் வரிப் பணத்தை சம்பளமாக வாங்கு கிறாரே ஆளுநர், அவர் உள்பட, ஆர்.எஸ்.எஸ். உள்பட, இதுபோன்ற தவறான பிரச்சாரத்தைச் செய்கின்றனர்.
பெரியார் சொல்லாததையெல்லாம் சொன்னதாகச் சொல்கிறார்கள்!
பெரியாருடைய பிம்பத்தை உடைக்கவேண்டும் என்பதற்காக, பெரியார் சொல்லாததையெல்லாம் சொன்னதாகச் சொல்கிறார்கள். அல்லது சொன்னதைத் திரிபுவாதம் செய்கிறார்கள்; ஒட்டுகிறார்கள், வெட்டு கிறார்கள்.
ஆனால், ஒருபோதும் அவர்களால் அசைத்துப் பார்க்க முடியாது.
பெரியார் உடலால் மறைந்து அரை நூற்றாண்டு தாண்டியாகிவிட்டது. இன்னமும் பெரியார்தான் பேசப்படுகின்ற பொருளாக இருக்கிறார்!
புத்தகக் காட்சிகளில் பெரியார்பற்றிய புத்த கங்கள்தான் மிக அதிகமாக விற்பனையாகின்றன.
அதைக் கண்டு பொறுக்க முடியாதவர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? பெரியார் குறித்து பல்வேறு அவதூறுகளைப் பரப்புகின்றனர்.
நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின்போது, பிரதமர் மோடி அவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து முக்கி முக்கிப் பார்த்தார் – ரோட் ஷோ என்றெல்லாம் மோடி வித்தைகளைச் செய்து பார்த்தார்; ஆனால், தமிழ்நாட்டில் ஓர் இடத்தைக்கூட அந்தக் கூட்டணியால் பெற முடியவில்லை. கடந்த தேர்தல்களைவிட, அதிக தோல்வியைத்தான் அவர்கள் சந்தித்தார்கள்.
பெரியார் என்ற தத்துவம்தான்!
‘‘நாடாளுமன்றத் தேர்தலில், 40-க்கு 40 இடங்களிலும் வெற்றி பெறுவோம்’’ என்று சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்.
அவர் சொன்னதுபோலவே, எப்படி வெற்றி பெற்றார் – காரணம், பெரியார் என்ற தத்துவம்தான்.
இது கொள்கைக் கூட்டணியாகும். அந்தக் கொள்கைதான் அடித்தளம் இந்தக் கூட்டணிக்கு.
நூறாண்டு காலத்திற்கு மேலான இந்தக் கொள்கை அடித்தளத்திற்கு நீதிக்கட்சி காலத்திலிருந்து வரலாறு உண்டு. ஆகவே, வடநாட்டில் மதக்கலவரங்களை உருவாக்கலாம். அதுபோன்று இங்கே மதக் கல வரங்களை உருவாக்க முடியுமா?
அதற்கு அண்மையில் நடைபெற்ற நிகழ்வை – சிறிய உதாரணத்தைச் சொல்கிறேன்.
மதக்கலவரத்தை உருவாக்கலாம் என்று முயற்சித்தார்கள்!
திருப்பரங்குன்றத்தில் மதக்கலவரத்தை உரு வாக்கலாம் என்று முயற்சித்தார்கள். ஆனால், அங்கே இருக்கின்ற மக்கள்,
‘‘நாங்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம். இங்கே வந்து எந்தவிதமான கலவரத்தையும் உருவாக்காதீர்கள். வெளியாட்களுக்கு இங்கே வேலையில்லை. இங்கே இருப்பவர்கள் எல்லோரும் அண்ணன் – தம்பிகளாக வாழுகிறோம்’’ என்று சொன்னார்கள்.
இதுதான் தமிழ்நாடு!
பாபர் மசூதி இடிக்கப்பட்ட காலகட்டத்தில்கூட, நம்முடைய காவல்துறையினரை, மற்ற மாநிலங்களுக்குப் பாதுகாப்புப் பணிக்கு அனுப்பினார்கள்.
‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேட்டின் கட்டுரை!
அப்போது ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேட்டில் ஒரு கட்டுரை வெளிவந்தது.
அதில், ‘‘இது ஒன்றும் வெறும் சட்டம் – ஒழுங்கு பிரச்சினையல்ல; பெரியாரால் பக்குவப்படுத்தப்பட்ட மண் தமிழ்நாடு’’ என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்கள்.
இந்த மண்ணில், ‘‘மதவெறி மாய்ப்போம்; மனித நேயம் காப்போம்!’’ என்பதுதான் அவருடைய கொள்கை. அது இன்றுவரையில், “திராவிட மாடல்’’ ஆட்சியின் முதற்கொள்கையாக இருக்கிறது.
ஆகவே, எந்த இடத்திலும் கலவரம் கிடையாது. காந்தியார் அவர்கள் கொல்லப்பட்ட காலகட்டத்தில்கூட, தமிழ்நாட்டில் கலவரத்தை உண்டாக்கவேண்டும் என்று நினைத்து, ‘காந்தியாரைச் சுட்டவன் முஸ்லிம்’ என்று தவறாகச் சொல்லி, கலவரத்திற்கு வித்திடலாம் என்று நினைத்தார்கள்.
தந்தை பெரியாரின் வானொலி உரை!
அப்போது, முதலமைச்சராக இருந்த ஓமந்தூரார், தந்தை பெரியாரை அழைத்து, வானொலியில் உரையாற்றச் சொன்னார்.
அதன்படி வானொலியில் உரையாற்றும்போது, ‘‘சுட்டவன் யாராக இருந்தாலும், கோட்சே என்ற உயர்ஜாதிக்காரராக இருந்தாலும், யார் மீதும் தனிப்பட்ட முறையில் வெறுப்புக் காட்டக் கூடாது’’ என்று சொன்ன பெருமை பெரியாருக்கு உண்டு.
(தொடரும்)