‘திராவிட மாடல்’ ஆட்சி ராக்கெட் வேகத்தில் செயல்படுகிறது என்பதற்கு இதோ மற்றொரு சான்று!
‘‘டாக்டர் தர்மாம்பாள் அரசினர் மகளிர்
பாலிடெக்னிக் கல்லூரி’’யாக மீள் உயிர்பெற்றது!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
‘‘டாக்டர் தர்மாம்பாள் அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி’’யின் பெயர் சில ஆண்டுகளாக தர்மாம்பாள் பெயரின்றியே அறிவிப்புப் பலகை இருந்தது. சில வாரங்களுக்கு முன்பு, அதைப் பார்த்து வேதனையடைந்து, உயர்கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு கோவி.செழியன் அவர்களது கவனத்திற்குக் கொண்டு சென்றோம்; ஒரு சில மணிநேரங்களில், மீண்டும் ‘‘டாக்டர் தர்மாம்பாள் அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி’’யாக மீள் உயிர்பெற்றது! நமது முதலமைச்சரின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ ஆட்சி செயல்படுகிறது என்பதற்கு இதுவும் மற்றொரு சான்று! மாண்புமிகு முதலமைச்சருக்கும், உயர்கல்வித் துறை அமைச்சருக்கும் நமது பாராட்டும், நன்றிகளும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
1937 இல் பிரிக்கப்படாத சென்னை மாகாணத்தில், ஆட்சிக்கு வந்த காங்கிரசின் முதலமைச்சர் இராஜாஜி, ஹிந்தி – சமஸ்கிருத மொழிகளைக் கட்டாயப் பாடமாகத் திணித்தபோது, அந்தப் பண்பாட்டுப் படையெடுப்பிற்கு எதிராக தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் களம் கண்டது.
தமிழ்க்கடல் மறைமலை அடிகளார், தமிழ் உணர்ச்சி எரிமலையான நாவலர் டாக்டர் சோமசுந்தர பாரதியார், சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், அஞ்சாநெஞ்சன் அழகிரி ஆகியோரையெல்லாம் ஒருங்கிணைத்தார் அறிவு ஆசான். அறிஞர் அண்ணா வசந்த வாலிப வயதில் தன்னை இணைத்துக் கொண்ட இளைஞர் குழாமின் இணைப்பாளர்.
களப்போராளியாகப் பங்கெடுத்த
கொள்கை வீராங்கனை!
மகளிர் பலரும் மூவாலூர் இராமாமிர்தம் அம்மையார் தலைமையில் திரண்டனர்! அவர்கள் பட்டியல் நீளமானது என்றாலும், கரந்தையைச் சார்ந்த டாக்டர் எஸ்.தருமாம்பாள் அம்மையார், களப்போராளியாகப் பங்கெடுத்த கொள்கை வீராங்கனைகளில் முதன் வரிசையர் ஆவார்!
அவரது நினைவு நாள் நேற்று (மே 20).
மொழிப் போரில் தங்களையே தந்து களமாடிய காலம் அது! மறக்க முடியாத கட்டுப்பாடு மிக்க தொண்டர்கள் நடராசனும், தாளமுத்துவும் தங்களது இன்னுயிர் தந்து, என்றும் வரலாற்றில் வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள். வீரர்கள் மட்டுமல்ல, வீராங்கனைகள் தொடர் மொழிப் போரில், தங்களை ஈந்த கொள்கை மெழுகுவத்திகளாயினர். அத்தகைய நமது தோழர்களின் நினைவைப் போற்றுகிறோம்.
வரும் தலைமுறைக்கு நினைவூட்டும் வகையில்…
அப்படிப்பட்டோரைப் பெருமைப்படுத்த திராவிடர் ஆட்சி மறக்கவில்லை என்பதை நிலைநாட்ட, முதலமைச்சர் கலைஞர் அவர்கள் 1969–1970–களி லும், அதற்குப் பிறகும் மொழிப் போர் ஈகியரின் பெயர்களை வரும் தலைமுறைக்கு நினைவூட்டும் வகையில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமப் பன்மாடிக் கட்டடத்திற்குத் ‘தாளமுத்து– நடராசன் நினைவு மாளிகை’ என்று பெயரிட்டு சிறப்புச் செய்தார், தமிழ்நாடு அரசின் சார்பாக! அதுபோல, பலப்பல. சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் (தற்போது ராஜீவ் காந்தி சாலை), தரமணியில் அமைந்துள்ள அரசின் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் (பாலிடெக்னிக்) நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேருரையாற்றியபோது, உரையின் நிறைவில் இப்பாலிடெக்னிக் கல்லூரி, இனி ‘‘டாக்டர் தர்மாம்பாள் அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி’’ என்று பெயர் சூட்டப்பட்டு இயங்கும் என்று கூறி, பின் அதற்குரிய அரசு ஆணையையும் பிறப்பித்தார். வடசென்னை முக்கிய சாலைக்கு டாக்டர் தருமாம்பாள் சாலை என்று பெயர் சூட்டப்பட்டது.
நெருக்கடி நிலையிலும், அதற்குப் பின்னும் அப்பெயரை திட்டமிட்டே மறைத்து, ‘‘அரசினர் மகளிர் பாலிடெக்னிக்’’ என்று அழைத்தனர்; மீண்டும் தி.மு.க. ஆட்சியில் அது மாற்றப்பட்டது. இப்போது திடீரென அப்பகுதியில் சில ஆண்டுகளாக தர்மாம்பாள் பெயரின்றியே அறிவிப்புப் பலகை தொங்கியது.
‘‘டாக்டர் தர்மாம்பாள் அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி’’யாக மீள் உயிர்பெற்றது!
சில வாரங்களுக்கு முன்பு, அதைப் பார்த்து வேதனையடைந்து, உயர்கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு கோவி.செழியன் அவர்களது கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு சென்றோம்.
அதனைக் கண்ணுற்ற உயர்கல்வித் துறை அமைச்சர், சம்பந்தப்பட்ட பல்தொழில்நுட்பக் கல்லூரி அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பேசியதன் விளைவாக, ஒரு சில மணிநேரங்களில், மீண்டும் ‘‘டாக்டர் தர்மாம்பாள் அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி’’யாக மீள் உயிர்பெற்றது!
நமது பாராட்டும், நன்றிகளும்!
முதலமைச்சருக்கும், உயர்கல்வித் துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவிக்கின்றோம்!
உடனுக்குடன் ராக்கெட் வேகத்தில் நமது முதலமைச்சரின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ ஆட்சி செயல்படுகிறது என்பதற்கு இதுவும் மற்றொரு சான்று!
மாண்புமிகு முதலமைச்சருக்கும், உயர்கல்வித் துறை அமைச்சருக்கும் நமது பாராட்டும், நன்றிகளும்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
21.5.2025