சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! குடிஅரசு ஏட்டின் நூற்றாண்டு நிறைவு (2.5.1925 – 2.5.2025) ‘குடிஅரசு’ போட்ட எதிர் நீச்சல்கள் (15)

viduthalai
6 Min Read

வெல்ஸ் ICS அளித்த தீர்ப்பு

தோழர்கள் ஈ.வெ.இராமசாமி, எஸ்.ஆர்.கண்ணம்மாள்

வழக்கு தீர்ப்பு முழு விபரம்

தந்தை பெரியார் மற்றும் அவரது தங்கை, எஸ்.ஆர்.கண்ணம்மாள் ஆகிய இருவர் மீதும் தொடரப்பட்ட ராஜநிந்தனை வழக்கில் கோயமுத்தூர் டிஸ்டிரிக்ட் மாஜிஸ்ரேட் தோழர் ஜி.டபிள்யு வெல்ஸ் 1934 ஜனவரி மாதம் 24ஆம் தேதி தீர்ப்புக் கூறினார். அந்த தீர்ப்பின் முழு விபரம் பின்வருமாறு:-

சிறப்புக் கட்டுரை

தீர்ப்பு:

  1. இந்த வழக்கில் குற்றவாளிகள் யாரெனில்:-

(1)   தோழர் ஈ.வெ.இராமசாமி நாயக்கர் கோயம்புத்தூர் ஜில்லாவில் ஈரோட்டில் பிரசுரமாகிற “குடிஅரசு” என்ற பெயருள்ள தமிழ் வாரப் பத்திரிகையின் ஆசிரியர்.

(2)  மிஸஸ் எஸ்.ஆர்.கண்ணம்மாள், அவருடைய சகோதரியும், “குடிஅரசு” பத்திரிகையின் பிரசுரகர்த்தாவும், பதிப்பாளருமானவர்.

முதல் எதிரி “குடிஅரசு” பத்திரிகையின் ஆசிரியராகவும், இரண்டாவது எதிரி அந்தப் பத்திரிகையின் பதிப்பாளரும், பிரசுரகர்த்தாவுமாயிருந்து அந்தப் பத்திரிகையின் 1933ஆம் வருடம் அக்டோபர் மாதம் 29ஆம் தேதி இதழிலே “இன்றைய ஆட்சி ஏன் ஒழியவேண்டும்?” என்ற தலைப்புள்ள ஒரு தலையங்கத்தைப் பிரசுரித்ததாக கோயம்புத்தூர் ஜில்லாவில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டராயிருக்கும் தோழர் வி.ரங்கசாமி அய்யரால் அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. மன்னர் பிரானுக்கு, அல்லது பிரிட்டிஷ் இந்தியாவில் சட்டபூர்வமாக ஸ்தாபிக்கப்பெற்றிருக்கிற கவர்ன் மெண்டுக்கு விரோதமாக பகைமையை, அல்லது இகழ்ச்சியை உண்டாக்குகிற அல்லது உண்டாக்க முயற்சிக்கிற அல்லது அவர்கள் மீது துவேஷத்தைத் தூண்டிவிடுகிற, அல்லது தூண்டிவிட முயற்சிக்கிற வார்த்தைகளும், வசனத்தொடர்களும் மேற்குறிப்பிட்ட வியாசத்தில் அடங்கியிருப்பதாகவும், அதனால் குற்றம் சாட்டப்பெற்ற இருவரும் இந்தியன் பீனல் கோடு 124-ஏ செக்ஷன்படி தண்டிக்கப்படக்கூடிய ஒரு குற்றத்தைச் செய்திருப்பதாகவும் பிராதில் கூறப்பட்டிருக்கிறது.

  1. பிராசிக்கியூஷன் தரப்பில் ஆறுசாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். முதலாவது பிராசிகியூஷன் சாட்சி வழக்குத் தொடர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர். அவர் குற்றச்சாட்டை ஆரம்பிக்கவும், வழக்குத் தொடரவும் கவர்ன்மெண்டார் பிறப்பித்த உத்திரவுகளையும் குற்றச்சாட்டு செய்யப்பெற்ற கட்டுரை அடங்கிய “குடிஅரசு” இதழ் ஒன்றையும், முதலாவது எதிரியும், இரண்டாவது எதிரியும் முறையே குடிஅரசின் ஆசிரியராகவும், பிரசுரகர்த்தாவும் பதிப்பாளராகவும் இருந்ததை நிரூபிக்கிற பத்திரங்களையும் தாக்கல் செய்திருக்கிறார்.
  2. பிராசிக்கியூஷன் இரண்டாவது சாட்சி, சென்னை சர்க்காரின் சீனியர் தமிழ் மொழிபெயர்ப்பாளர். அவர் இந்த வழக்குக்கு ஆதாரமான கட்டுரையை மொழிபெயர்த்திருக்கிறார். அவர் தாம் செய்த மொழிபெயர்ப்பைத் தாக்கல் செய்து அது சரியான மொழிபெயர்ப்புதான் என்று சாட்சியம் கூறியிருக்கிறார். குறுக்கு விசாரணையில், அவர் தாம் மேற்படி கட்டுரையின் சுருக்கம் ஒன்றை 1933 நவம்பர் 9ஆம் தேதி சர்க்காருக்கு அனுப்பியதாகவும், அவர் ஆஜராகிற வழக்குகளில் பூரண மொழிபெயர்ப்பையும் கொண்டு வருவது வழக்கமாதலால் இந்த வழக்கிலும் 1934 ஜனவரி 10ஆம் தேதி உண்மையான மொழிபெயர்ப்பைத் தயார் செய்ததாகவும் கூறுகிறார். “உண்மையான மொழிபெயர்ப்பு” என்பதற்கு அவர் கொண்டுள்ள அர்த்தம் என்னவென்று குறுக்கு விசாரணையில் கேட்டதற்கு, முதல் கட்டுரையின் அடிப்படையான பொருளை வெளிப்படுத்துவதாக மொழிபெயர்ப்பாளர் கருதுகிற மொழிபெயர்ப்பே “உண்மையான மொழிபெயர்ப்பு” என்றும் தமது மொழிபெயர்ப்பில் இயன்ற அளவு வார்த்தை வார்த்தையாக சொற்பொருளுக்கு சரியாகவும், மற்ற இடங்களில் முதல்கட்டுரையின் அடிப்படையான பொருளை வெளிப்படுத்தும் முறையிலும் மொழிபெயர்த்ததாகக் கூறினார்.
  3. வாதி தரப்பு 3ஆவது சாட்சி. கோயமுத்தூர் ஜில்லா மாஜிஸ்டிரேட் ஆபீசிலுள்ள ஒரு குமாஸ்தா. மேற்படி ஆபீசிலுள்ள பத்திரிகைகளில் ரெஜிஸ்டர் புத்தகத்தில் கண்ட 11வது நெம்பர் குறிப்பு “குடிஅரசு” பத்திரிகையைப்பற்றியதென்று அவர் கூறுகிறார்.
  4. வாதி தரப்பு 4ஆவது சாட்சி. மேற்படி ஆபீசைச் சேர்ந்த மாஜிஸ்டிரேட் கிளார்க். இரண்டாவது எதிரி ஈரோட்டிலுள்ள உண்மை விளக்கம் அச்சுக்கூடத்தின் சொந்தக்காரர் என்றும், அவர் அந்த அச்சுக்கூடத்தில் “குடிஅரசு” பத்திரிகையை அச்சிட்டு வெளியிடுவ தாகவும் காட்டுகிற தஸ்தாவேஜுகளை நிரூபித்து சாட்சியம் கூறியிருக்கிறார்.
  5. வாதி தரப்பு 5ஆவது சாட்சி. ஈரோட்டிலுள்ள மெசர்ஸ் ஹிக்கின்பாதம் புத்தகசாலை குமாஸ்தா. அவர் தமக்கு “குடிஅரசு” பத்திரிகைகள் விற்பனைக்காக வருவதுண்டென்றும், 1933 அக்டோபர் 29ஆம் தேதி பத்திரிகையில் தமக்கு 10 பிரதிகள் வந்ததாகவும் அதில் 4 விற்பனை ஆயிற்றென்றும் கூறுகிறார்.
  6. வாதி தரப்பு 6ஆவது சாட்சி. ஈரோடு போலீஸ் இன்ஸ்பெக்டர். அவர் அவ்விடத்திலுள்ள “குடிஅரசு” காரியாலயத்திலிருந்து சில கடிதங்களைக் கைப்பற்றினதாகக் கூறுகிறார்.

“எக்சிபிட் சி” என்ற பத்திரத்திலுள்ள கையெழுத்து முதலாவது எதிரியின் கையெழுத்து என்றும், “குடிஅரசு”க்கு அதிக சந்தாதாரர்கள் இருப்பதாகவும் அவர் நிரூபிக்கிறார்.

ஆதிதிராவிடர் இல்லையா?
அடுத்த மார்ச்சு, ஏப்ரல் மாதத்தில் நிர்வாக சபையில் ஓர் இடம் காலியாகும் என்று ஏஷ்யம் கூறப்படுகிறது. இக்காலியாகும் இடத்தில் யார்? உட்காருவது என்பதுபற்றி எல்லாப் பத்திரிகைகளும் ஏஷ்யம் கூறி, சிலர் பெயரை சிபார்சும் செய்கிறது. வகுப்புத் துவேஷத்தை வெறுக்கும் சகவர்த்தமானியான “சுதேசமித்திரன்” ஒரு அய்யங்கார், அல்லது அய்யர் கனவான் பெயரைச் சிபார்சு செய்வதுடன், முன்பு பனகால் காலத்தில் காபினெட்டில் ஒரு பிராமணர் இருக்கவேண்டு மென்பதற்காகவே மந்திரியாக ஒரு பிராமணரை நியமித்ததாகவும் அந்நியாயப்படி இன்று ஒரு பிராமணர் அவசியம் என்று கூறுகிறது.
இதுவரை பெரிய உத்தியோகங்களில் அய்யர், அய்யங்கார், ஆச்சாரியார் எல்லாம் நீண்ட நாள் இருந்து பார்த்துவிட்டார்கள். அதைப்போன்றே முஸ்லிம், கிருஸ்துவர், முதலியார், நாயுடு, தமிழர், தெலுங்கர், கேரளர் முதலிய யாவரும் இருந்து பார்த்து விட்டார்கள் என்று நமது சகவர்த்தமானிக்கு இவைகளைக் கூறுகிறோம். ஆனால், இதுவரை இந்நாட்டில் ஜனசங்கையில் நாலில் ஒரு பாகத்தினரான ஆதிதிராவிடர் என்பவர்களில் ஒருவர்கூட இதுவரையில் அங்கு இருந்து பார்த்ததில்லை. இன்று ஆதிதிராவிட முற்போக்கைக் குறித்து எங்கும் பலத்த கிளர்ச்சி இருக்கிறது. ஆதலால் சகலரும் ஒன்றுசேர்ந்து ஆதிதிராவிட கனவான் ஒருவர் அங்கு வர முயற் சிக்கக் கூடாதா? என்பதே!
நமது மாகாண ஆதிதிராவிட சமுகத் தலைவர்கள் தங்களுக்குள்ள அற்ப அபிப்பிராய பேதங்களை விட்டொழித்து ஒரு ஆதிதிராவிட கனவான் அங்குவர முயற்சிப்பார்களா? அல்லது இன்றுள்ளதுபோன்ற உயர்தர ராஜதந்திரிகளின் முன்னோடும் பிள்ளையாக மட்டும் இருந்தும் தங்கள் காலத்தைக் கடத்த ஆசைப்படுகிறார்களா? ஆதிதிராவிடர்கள் ஒன்றுபட்டால் இது கிட்டாது போகுமென்று நாம் நினைக்கவில்லை.
– புரட்சி – செய்தித்துணுக்கு – 04.02.1934

8    முதலாவது எதிரி தாம் ஒரு பத்திராதிபர் என்றும், பிரசாரகர் என்றும் விவரித்து தமிழில் ஒரு ஸ்டேட்மெண்ட் எழுதித் தாக்கல் செய்திருக்கிறார். அவர் தாம் அந்த வியாசத்தை எழுதினதாக ஒப்புக்கொள்ளுகிறார். ஆனால் அதில் எழுதப்பட்ட விஷயங்களுக் காவது, வாக்கியங்களுக்காவது ராஜநிந்தனைக் குற்றம் சாட்டப்படு மானால் அரசாங்கமுறை, நிர்வாகமுறை முதலியவைகளை ஆராய்ச்சி செய்யவும், அதிலுள்ள குறைகளால் ஜனங்களுக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்களை எடுத்துக் கூறி அவற்றுக்குப் பரிகாரம் தேட ஏற்பாடு செய்யவும் யாருக்கும் சுதந்திரம் கிடையாது என்று முடிவு செய்யவேண்டி இருப்பதால், தம்மீது கொண்டுவரப்பட்டுள்ள வழக்குக்கு ஆதாரமில்லை என்று வற்புறுத்துகிறார்.

9.அவர் தமது வியாசம் முழுவதையும் இங்கிலீஷில் மொழிபெயர்த்துக் கொடாமலே தம்மீது வழக்குத் தொடரஅனுமதி வாங்கப்பட்டிருக்கிறது என்றும் அப்படித் தொடரப்பெற்ற வழக்குச் சட்டப்படி செல்லாதென்றும் அந்த வியாசத்தின் பொருளும், வாக்கியங்களும், நோக்கங்களும், அறவே குற்றமற்றவைகளா யிருப்பதால் இந்த வழக்கு தொடரப்பட்டிருப்பதானது தமது சமதர்மப் பிரசாரத்தை நிறுத்துவதற்காக முதலாளிச் சர்க்காரோ, அல்லது மத சம்பிரதாயக்காரர்களோ செய்த சூழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்குத் தான் வரவேண்டி இருக்கிறது என்றும் கூறுகிறார்.

கல்வி இலாகாவில் சம்பளங்கள் அதிகம் என்றும், படிப்புச் செலவு அதிகம் என்றும் அதற்கேற்ற பயன் விளைவதில்லை என்றும், ஏழைகளுக்கு கல்வி கற்பிக்க வசதிகள் இல்லையென்றும் அந்த வியாசம் குறிப்பிடுவதாக அவர் எடுத்துக்காட்டுகிறார். அப்படிப்பட்ட முறையில் பயன்பெறும் பணக்காரரும், அதிகாரவர்க்கத்தாரும், உத்தியோகஸ்தரும் சொல்வதைக்கேட்டு ஏமாந்து போகாமல் வருகிற எலக்ஷன்களில் ஜாக்கிரதையாக நடந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த விஷயங்கள் மேற்படி வியாசத்தில் ஏழை ஜனங்களுக்கு எடுத்துக்காட்டப் பெற்றதென்று அவர் வற்புறுத்துகிறார். மேலும், பலாத்காரம், இம்சை, துவேஷம் ஆகியன தமது பிரசாரத்தில் இல்லை என்றும், அவை தமது பிரசாரத்துக்கு முற்றும் மாறானவை என்றும், ஆனால் அரசாங்கமானது முதலாளித்தன்மை கொண்டதாய் இருப்பதாலும், மதம், ஜாதி, படிப்பு  என்ற வேஷத்தில்  முதலாளிகளைப்போல் வாழ்க்கை நடத்துகிறவர்கள் அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டியிருப்பதாலும், தம்மை அடக்கும்படி சர்க்கார் ஏற்பாடு செய்திருப்பது ஆச்சரியபடக்தக்கதல்ல என்றும் அவர் கூறுகிறார்.

– தொடரும்

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *