தென்காசி, மே 20–- தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் நீலகண்டன் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் நீலகண்டன். இவர் 2023ஆம் ஆண்டு தனது குடும்ப நண்பரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு குடும்ப நண்பரின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பாலியல் தொல்லை கொடுத்த பின், இந்த விஷயம் பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது என்று துப்பாக்கியை வைத்து மிரட்டி இருக்கிறார்.
இருந்தாலும் 15 வயது சிறுமி இந்த விவகாரம் தொடர்பாக தனது தந்தையிடம் கூறி இருக்கிறார். இந்த விஷயத்தை அறிந்து அதிர்ச்சியடைந்த தந்தை, உடனடியாக ஆலங்குளம் காவல் நிலையத்திற்கு சென்று நீலகண்டன் மீது புகார் அளித்துள்ளார்.
ஆனால் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.
வழக்கு
இதையடுத்து அந்த சிறுமியின் தந்தை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், உடனடியாக வழக்குப் பதிவு செய்யக் கோரி உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் பாஜக நிர்வாகி நீலகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டிலேயே புகார் அளித்த போது, காவல்துறையினர் ஏன் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேபோல் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததோடு மட்டு மல்லாமல், யாரிடமும் சொல்லக் கூடாது என்று துப்பாக்கியை வைத்து நீலகண்டன் மிரட்டி இருக்கும் சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காவல் துறையில் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.