சென்னை, மே 20– கோவில் களுக்கு சொந்தமான, பயன்பாட்டில் இல்லாத நிலங்களில், பனை, இலுப்பை உள்ளிட்ட நாட்டு மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும்படி, அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சிறீதர், அனைத்து இணை, துணை, உதவி ஆணையர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதம்:
சட்டமன்றத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்ததை நிறைவேற்ற, ஒவ்வொரு இணை ஆணையரும், தங்கள் மண்டலத்தில், தலா ஒரு லட்சம் நாட்டு வகை மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதற்கட்டமாக மரக் கன்றுகள் நடுவதற்கான நிலத்தை தேர்வு செய்ய வேண்டும் தேர்வு செய்யப்படும் இடம், மரங்கள் வளரக்கூடிய, நீர் வசதி உள்ள இடமாக இருக்க வேண்டும்.
தோட்டக்கலை அல்லது மரங்களை நடுவதில் நிபுணத்துவம் பெற்றவர்களை ஆலோசகராக நியமித்து, மரக் கன்று நடும் பணியை செய்யவேண்டும்.
சமூக ஆர்வலர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வழியே, அவற்றை மூன்று ஆண்டுகள் பராமரிக்க வேண்டும்.
பராமரிக்க எந்த நிறுவனமும் முன் வரவில்லை என்றால், மரக்கன்றுகளை நன்கொடையாளர்கள் வழியே பெற்று, கோவில் சார்பில் அவற்றை நட்டு பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.