பெரியார் – மணியம்மையார் திருமணம் நடைபெற்றது ஏன்?
ஒரு செவிலியர் எப்படி பணியாற்றுவாரோ, அதைவிட மிகுந்த அக்கறையோடு மணியம்மையார், பெரியாரைக் கவனித்துக் கொண்டார்!
‘‘மணியம்மையார் இல்லையென்றால், அய்யா அவர்கள் இவ்வளவு நாள்கள் வாழ்ந்திருக்கமாட்டார்!’’
சென்னை, மே 20 ‘‘30 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் அய்யாவோடு இருந்தபோது, அடிக்கடி அய்யாவிற்கு வயிற்று வலி வரும். அதனால், அய்யா அவர்கள் நீண்ட நாள்கள் இருக்கமாட்டாரோ என்கிற பயம் எங்களுக்கு இருந்தது. ஆனால், இந்த அம்மையார் வந்த பிறகுதான், காரம் இல்லாமல் பக்குவமான உணவு கொடுத்து, ஒரு செவிலியர் எப்படி பணியாற்றுவாரோ, அதைவிட மிகுந்த அக்கறையோடு தந்தை பெரியாரைக் கவனித்துக் கொண்டார். மணியம்மையார் இல்லையென்றால், அய்யா அவர்கள் இவ்வளவு நாள்கள் வாழ்ந்திருக்கமாட்டார்’’ என்று முதலமைச்சர் அண்ணா சொன்னதை மேற்கோள் காட்டினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.
‘‘ஹலோ பண்பலைக்குத்’’
தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி!
தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி!
கடந்த 30.4.2025 அன்று ஹலோ பண்பலைக்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பேட்டியளித்தார்.
அவரது பேட்டியின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
உண்மையில் நடந்தது என்ன?
நெறியாளர்: பெரியார் – மணியம்மையார் திரு மணம்பற்றி, பெரியாரை விரும்பாதவர்கள்; அல்லது பெரியாருடைய புகழுக்கு இகழ் சேர்க்கவேண்டும் என்று நினைக்கின்றவர்கள் காலங்காலமாகத் திரும்பத் திரும்பச் சொல்லக்கூடியது விவாதப் பொருளாக இருக்கிறது. ‘‘மகளாக வளர்த்தவரை, பெரியார் திருமணம் செய்துகொண்டார் என்பதற்காகத்தான் அண்ணா பிரிந்து சென்றார்’’ என்பதற்கெல்லாம் விளக்கங்களைக் கொடுத்த பிறகும், மறுபடியும், மறுபடியும் அந்த விஷயமே முன் வைக்கப்படுகிறது.
உங்கள் வாயிலிருந்தே உரிய பதிலைப் பெறுவதற்காக நான் கேட்க விரும்புகிறேன். உண்மையில் நடந்தது என்னங்க அய்யா?
பெரியாருடைய அடிப்படைத் தத்துவம்!
தமிழர் தலைவர்: இதுபோன்ற மோசடித்தனம் வேறு கிடையவே கிடையாது. பேசுகின்றவர்கள் அத்துணைப் பேருக்கும், அது மோசடி என்பது மிகத் தெளிவாகத் தெரியும்.
பல புத்தகங்களும் வந்தாயிற்று. யார், யார் இது போன்ற கேள்வியைக் கேட்டார்களோ, அவர்கள் எல்லாம் சந்தேகத்தோடு பார்த்த நேரத்தில், பெரியாரும் – அண்ணாவும் வேறு ஒரு கருத்தில் மாறுபட்டிருந்தார்கள்.
எந்தக் காலத்திலும், எந்தக் காரணத்தினாலும் பதவிக்கு நாம் போகக்கூடாது; பதவியில் இருக்கின்ற வர்களை வைத்து வேலை வாங்கவேண்டும் என்றுதான், காமராஜர் ஆட்சிக்கு ஆதரவு போன்ற பல முடிவுகளைப் பெரியார் எடுத்தார். இது பெரியாருடைய அடிப்படைத் தத்துவமாகும்.
‘‘அண்ணாதுரை தீர்மானம்!’’
ஏனென்றால், நாம், இந்த அமைப்பு இருக்கின்ற வரையில் தேவையற்றவை உள்ளே நுழைந்துவிட்டால், இந்தக் கொள்கைகள் நீர்த்துப் போக அல்லது திரிபுவாதத்திற்கு ஆளாகக்கூடிய அபாயம் இருக்கின்றது என்பதற்காகத்தான், நீதிக்கட்சியிலிருந்து, திராவிடர் கழகமாக மாறியபோதே, அண்ணா பெயராலேயே ஒரு தீர்மானத்தை, சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றினார்கள். அந்தத் தீர்மானத்திற்குப் பெரியார் கொடுத்த தலைப்பு ‘‘அண்ணாதுரை தீர்மானம்’’ என்பதுதான்.
அத்தீர்மானத்தில், பட்டம், பதவிகளைப் பெறக்கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், கால தேச வர்த்தமானம் மாறுகின்ற நேரத்தில், அண்ணா போன்றவர்களுடைய சிந்தனை என்னவென்றால், அரசியலுக்குப் போய், நாம், நம்முடைய இடத்தைப் பிடித்து, அதிலே மற்றவர்க ளுக்குப் பதில் சொன்னால்தான், வாய்ப்பாக இருக்கும் என்று அவர் கருதினார்.
அண்ணா அவர்களுக்குப் போதுமான அளவிற்கு ஆதரவு கிடைக்கவில்லை!
ஆகவே, அவர் அதற்குரிய வாய்பைத் தேடிக் கொண்டே இருந்தார். அப்படித் தேடிக் கொண்டி ருக்கின்றபோது, ‘‘ஆகஸ்ட் 15 சுதந்திர நாளா?’’ என்ற பிரச்சினையில், தன்னுடைய கருத்தை விட்டு ஆழம் பார்த்தார். ஆனால், அதில் அண்ணா அவர்களுக்குப் போதுமான அளவிற்கு ஆதரவு கிடைக்கவில்லை.
பிறகு, தந்தை பெரியார் அவர்களுடைய தந்தையார் வெங்கட்ட நாயக்கர் தமது காலத்தில், இருந்த சொத்துகளைப் பொது அறக்கட்டளையாக ஆக்கி னார்கள். அதில், ‘‘வெங்கட்ட நாயக்கரின் மூத்த மகன் கிருஷ்ணசாமி; இளையவர் ராமசாமி. இந்த இரண்டு பேருடைய வாரிசுகள் இருக்கின்ற சொத்துகளைப் பிரித்துக் கொள்ளவேண்டும்; அவற்றை விற்க முடியாது; அவற்றை அனுபவித்துக் கொண்டு வரலாம்; உரிமை கொண்டாடலாம். அதனுடைய வருவாயை அவர்கள் பெற்றுக் கொள்ளலாம்’’ என்று 1911 ஆம் ஆண்டிலேயே பெரியார் முன்னிலையில் உயில் எழுதி வைத்துவிட்டார்.
தந்தையாருடைய மறைவிற்குப் பிறகு அந்த சொத்துகள் இவர்களுக்கு வந்தன. பெரியாருடைய அண்ணன் கிருஷ்ணசாமி அவர்களுக்கு,
ஈ.வெ.கி.சம்பத் போன்றவர்கள் மற்றும் பேரப் பிள்ளைகள் இருந்தார்கள்.
1933 இல் நாகம்மையார் இறந்துவிட்டார்!
பெரியாரைப் பொறுத்தவரையில், அன்னை நாகம்மையார் -பெரியார் ஆகியோருக்கு ஒரு குழந்தை பிறந்து இறந்துவிட்டது. அதற்குப் பிறகு அவர்களுக்குக் குழந்தை இல்லை. ‘நல்லதாகப் போயிற்று’ என்று பெரியார் அவர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நாகம்மையார் அவர்கள் 1933 ஆம் ஆண்டில் இறந்து விட்டார். அதற்குப் பிறகு பெரியார் அவர்கள், தனியாக இருந்துதான் பிரச்சாரங்களில் ஈடுபட்டார்.
1940-களில், சுயமரியாதைக் குடும்பத்தைச் சார்ந்த வேலூர் கனகசபை என்பவர் பெரியாருக்கு வேண்டியவர். பிரச்சாரங்களுக்குச் செல்லும்போது, அவருடைய வீட்டில்தான் பெரியார் தங்குவார். அப்போது மாணவியாக இருந்த மணியம்மையார் அவர்களுக்கு, பெரியார்மீது கொள்கை ரீதியாக ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது.
‘‘நான் பெரியார் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றப் போகிறேன்’’ – மணியம்மையார்!
‘‘நான் பெரியார் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றப் போகிறேன்’’ என்று அவருடைய தந்தையிடம் சொன்ன போது, அவரும் தாராளமாக பெரியாருக்குப் பயன்பட லாம் என்றார்.
குலசேகரப்பட்டினத்தில், சி.டி.நாயகம் நடத்திய பள்ளிக்கூடத்தில், மணியம்மையார் புலவர் படிப்பு படிக்கச் சென்றார். அப்போது, தேர்வுக்குப் போகின்ற வழியில், ‘‘யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறியிருக்கின்றார் இந்தப் பெண்’’ என்று நினைத்து, அவரைக் காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். பெரியார்தான் உடனே அங்கே சென்று, மீட்டுக் கொண்டு வந்தவர். அந்த நிகழ்விற்குப் பிறகு பெரியாரிடம், அன்னை மணியம்மையார், ‘‘நான் வீட்டிற்குச் செல்ல விரும்பவில்லை; உங்களிடமே செயலாளராக இருக்கிறேன்‘’’ என்று சொன்னார்.
அய்யா பெரியாரின் செயலாளராக,
ஒரு தொண்டராக…
ஒரு தொண்டராக…
1944 ஆம் ஆண்டிலிருந்து அய்யா பெரியாரின் செயலாளராக, ஒரு தொண்டராக இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்தார் மணியம்மையார் அவர்கள்.
அய்யா அவர்கள் தனி நபராகத்தான் இருந்தார். சரியான உணவு இல்லாததால், வயிற்றுக் கடுப்பு, உடல் கோளாறு தொல்லைகள் இருந்தன.
1944 ஆம் ஆண்டிலிருந்து 1948 ஆம் ஆண்டு வரையில், மணியம்மையார் பெரியாருக்குச் செயலா ளராக இருந்தார். அவர்தான் ‘குடிஅரசு’ப் பதிப்புகளை ஒழுங்குபடுத்தினார். அய்யா பேசுகின்ற பிரச்சாரக் கூட்டங்களில் புத்தகங்கள் விற்றார்.
இந்தத் தகவல்கள் எல்லாம் அண்ணா முதற்கொண்டு எல்லோருக்கும் தெரியும்.
பெரியாருடைய அண்ணனுக்கு வாரிசு இருக்கிறது; பெரியாருக்கு வாரிசு இல்லை. சொத்துகளை இரண்டாகப் பிரிக்கவேண்டும் என்று சொல்லுகின்றபோது, பெரியா ருடைய காலத்தோடு வருவாய் முடிந்து போகிறது.
இதற்கு என்ன வழி என்று அய்யா யோசிக்கின்றபோது, அந்த பணமும் இயக்கத்திற்கு வரவேண்டும். அன்றைய காலகட்டத்தில் இயக்கத்தில் நிதி இல்லை. பெரியார் கொடுத்த நிதிதான். சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி, ‘குடிஅரசு’ என்ற வாரப் பத்திரிகையை நடத்துகிறார். இவற்றையெல்லாம் தன்னுடைய பங்களிப்பிலிருந்து செய்கிறார். 1920 ஆம் ஆண்டிலேயே பெரியார் அவர்கள் தன்னுடைய வியாபாரத்தை, தொழிலை விட்டுவிட்டார். பொதுவாழ்க்கையில் இருக்கக்கூடியவர், நாணயமானவர். இராஜாஜி போன்றவர்களுடைய நட்பு, காங்கிரசிற்குச் சென்றார்; பிறகு வெளியே வந்தார் என்பதெல்லாம் வரலாறு.
ஆகவே, அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், அவர் நீண்ட நாள்களாக சிந்தித்து, ‘தனக்கு வயதாகிறது; இந்த வருவாய் தன்னோடு முடிந்துவிட்டது என்று சொன்னால், மறுபடியும் அந்த வருவாய், அந்தக் குடும்பத்திற்குத்தான் போகும். தனக்குப் பிறகு, அந்த வருவாய் இயக்கப் பணிகளுக்கு வரவேண்டும்’ என்று நினைத்து, சட்ட அறிஞர்களிடம் ஆலோசனை கேட்டார்.அப்போது ‘இந்து லா’ என்ன சொன்னது என்றால், பெண்களை வாரிசாக எடுத்துக்கொள்ள முடியாது என்று சட்டம் இருந்தது. பிற்காலத்தில்தான் அதில் திருத்தம் செய்யப்பட்டது.
அப்படியென்றால், வேறு வழியே இல்லையா? என்று பெரியார் கேட்டார்.
‘ஒரே ஒரு வழி இருக்கிறது; அவரை நீங்கள் பதிவுத் திருமணம் செய்து, மனைவியாக்கிக் கொண்டால், உங்களுக்குப் பிறகு, அந்த உரிமை அவர்களுக்குக் கிடைக்கும்’ என்றனர்.
‘அவ்வளவுதானே! நான் பகுத்தறிவுவாதி. மெட்டிரியலிஸ்ட் – எந்தப் பெயர் சொன்னால் என்ன? அந்த அம்மையார் என்னிடம்தான் செயலாளராக, இவ்வளவு ஆண்டுகளாக இருக்கிறார்’ என்று சொல்லி, ஓர் அறிக்கையைக் கொடுத்தார்.
நான், மாணவப் பருவத்திலிருந்து, 10 வயதிலிருந்து இந்த இயக்கத்தில் இருக்கிறேன். 1949 ஆம் ஆண்டு இந்தப் பிரச்சினை நடைபெற்றது. கிட்டத்தட்ட எஸ்.எஸ்.எல்.சி. படித்துக் கொண்டிருந்தேன்.
அந்தப் பிரச்சினை குறித்து ‘விடுதலை’யில் தெளிவாக அறிக்கை எழுதினார் அய்யா அவர்கள். அந்த அறிக்கைகள் உள்பட எல்லாம் புத்தகமாக வெளி வந்திருக்கிறது ‘திருமணம்’ என்ற தலைப்பில்.
‘அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் தொண்டறம்’ என்ற புத்தகத்திலும் இந்தத் தகவல்கள் எல்லாம் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.
‘‘இந்த ஏற்பாட்டால், இந்த இயக்கமே குலைந்துவிடும் என்பதுபோன்று எதிரிகள் பிரச்சாரம் செய்வார்கள். அதை நம்பி நீங்கள் ஏமாந்துவிடக் கூடாது. இந்தத் திருமணம் என்பது, சட்டப்படிக்கான பெயரே தவிர, மற்றபடி இயக்கத்திற்காக, பாதுகாப்பிற்காக செய்யப்பட்ட ஓர் ஏற்பாடே ஆகும்’’ என்று பெரியார் தெளிவாகச் சொன்னார்.
குலசேகரப்பட்டினம் சி.டி.நாயகம்!
குலசேகரப்பட்டினத்தைச் சேர்ந்த சி.டி.நாயகம் அவர்களுடைய வீட்டில் இதைப் பதிவு செய்தார் தந்தை பெரியார். சி.டி.நாயகம் அவர்கள் மறைந்த பிறகு, அவருடைய துணைவியார் அங்கே இருந்தார்.
அண்ணா மற்றும் அரசியலுக்குப் போகவேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்தவர்களுக்கு, இதுதான் வாய்ப்பு என்று அதனைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.
இதுதான் உள்ளார்ந்த ரகசியம்.
தஞ்சாவூரில் மாநாட்டில்
பேராசிரியர் க.அன்பழகனின் விளக்கம்!
பேராசிரியர் க.அன்பழகனின் விளக்கம்!
இதைப் பின்னாளில், பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள், தஞ்சாவூர் மாநாட்டில் தெளிவாகச் சொல்லி விட்டார்.
‘‘நாங்கள், பெரியார் – மணியம்மையார் திரு மணத்திற்காக இயக்கத்தைவிட்டு வெளியில் வர வில்லை. உண்மையில் அரசியலுக்குப் போகவேண்டும் என்பதற்காகத்தான் அதை ஒரு காரணமாகக் கொண்டு வெளியேறி, தனியே ஓர் இயக்கமாக தி.மு.க.வை உருவாக்கினோம். இப்படி தனி இயக்கம் காண்பதற்குப் பெரியார் அனுமதிக்கமாட்டார் என்பதற்காகத்தான் அந்தத் திருமணத்தை வாய்ப்பாக நாங்கள் பயன்படுத்திக் கொண்டோம்’’ என்று சொன்னார்.
அதனால்தான், அண்ணா அவர்கள், 18 ஆண்டுகள் பிரிந்திருந்தாலும், தேர்தலில் நின்று வெற்றி பெற்ற வுடன், திருச்சியில் உள்ள பெரியாரைத்தான் சந்தித்தார்கள்.
பெரியாரும், அண்ணாவைப் பார்த்ததும் ஓர் ஈர்ப்போடு இருந்தார்.
மணியம்மையார் இல்லையென்றால், அய்யா அவர்கள் இவ்வளவு நாள்கள் வாழ்ந்திருக்கமாட்டார்: அண்ணா
முதலமைச்சராக இருந்த அண்ணா அவர்கள், என்னிடத்தில் ஒருமுறை சொன்னார், ‘‘30 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் அய்யாவோடு இருந்தபோது, அடிக்கடி அய்யாவிற்கு வயிற்று வலி வரும். அதனால், அய்யா அவர்கள் நீண்ட நாள்கள் இருக்கமாட்டாரோ என்கிற பயம் எங்களுக்கு இருந்தது. ஆனால், இந்த அம்மையார் வந்த பிறகுதான், காரம் இல்லாமல் பக்குவமான உணவு கொடுத்து, ஒரு செவிலியர் எப்படி பணியாற்றுவாரோ, அதைவிட மிகுந்த அக்கறையோடு தந்தை பெரியா ரைக் கவனித்துக் கொண்டார். மணியம்மையார் இல்லை யென்றால், அய்யா அவர்கள் இவ்வளவு நாள்கள் வாழ்ந்திருக்கமாட்டார்’’ என்று சொன்னார்.
‘‘பெரியார்’’ திரைப்படத்தில் அந்தக் காட்சி, மிக அழகாக அமைக்கப்பட்டு இருக்கும். அந்தக் காட்சி உண்மையாக நடைபெற்ற நிகழ்வு. அது ஒன்றும் கற்பனை கிடையாது.
அதனால்தான், பெரியாரும் – அண்ணாவும் 18 ஆண்டுகளுக்குப் பிறகு எளிதாக ஒன்று சேர முடிந்தது.
இன்றைக்கு, ஓர் இயக்கத்திலிருந்து பிரிந்தால், இருந்த இயக்கத்தை அழிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். அதுபோன்று கிடையாது அண்ணா அவர்கள்.
தி.க.வும், தி.மு.க.வும்
‘‘இரட்டைக் குழல் துப்பாக்கி!’’
‘‘இரட்டைக் குழல் துப்பாக்கி!’’
தி.க.வும், தி.மு.க.வும் ‘‘இரட்டைக் குழல் துப்பாக்கி’’ என்று சொன்னார் அண்ணா அவர்கள். ‘‘இன்னமும் பெரியார்தான் தலைவர் எங்களுக்கு. அந்த நாற்காலி காலியாகத்தான் இருக்கிறது’’ என்றார்.
ஆகவே, இதுதான் அந்த ரகசியம்.
பேராசிரியர் அவர்களுக்கு முன்பாக, அண்ணா அவர்களே ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.
‘அன்னை’ என்று கூறாமல், வேறு என்னவென்று கூறுவது? – புரட்சிக்கவிஞர்!
முதலில், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களும் எதிர்த்தார். பின்னாளில், அன்னை மணியம்மையாரின் தொண்டைப் பார்த்து, இந்த அம்மையார் இல்லை என்றால், அய்யா அவர்கள் இவ்வளவு நாள்கள் வாழ்ந்தி ருக்க மாட்டார். அதனால்தான் அவர், ‘‘அந்தப் பொடிப் பெண்ணை ‘அன்னை’ என்று கூறாமல், வேறு என்னவென்று கூறுவது?’’ என்று எழுதினார்.
அதனால்தான் ஒரு சுமூகமான சூழல் ஏற்பட்டது. ‘‘தன்னுடைய தலைமையிலான தி.மு.க.வின் ஆட்சியை பெரியாருக்குக் காணிக்கை’’ என்று அண்ணா அவர்கள் சட்டப்பேரவையில் பிரகடனப்படுத்தினார். பெரியாரிடம் இருந்த காலம்தான் எனக்கு ‘‘வசந்த காலம்’’ என்றும் எழுதினார்.
அன்று தொடங்கியது, அண்ணாவினால் அறிமுகப்படுத்தப்பட்டது; இன்றைக்குப் பொற்காலமாக இருக்கக்கூடிய மு.க.ஸ்டாலின் அவர்களுடைய ஆட்சிக் காலம் உள்பட தொடர்கிறது.
பெரியார் – மணியம்மையார் திருமணம் என்பது இடையில் ஏற்பட்ட ஒரு சம்பவம். பல நேரங்களில், சில அதிர்ச்சிகள் வரலாற்றில் உண்டு. ஆனால், அதனால் நன்மைகள் உண்டு என்பதற்கு அடையாளம்தான், இன்றைக்குத் தெளிவாக இரண்டு பிரிவாக தி.க. – தி.மு.க. என்று இருக்கின்றன.
தாய்க்கழகம் சமூகப் பிரச்சினைகளையே பார்த்துக் கொண்டு, கொள்கையிலிருந்து வீழாமல் நிமிர்ந்து நின்று கொண்டிருக்கின்றது.
தாய்க்கழகம் பாசறை போன்று தனியாக இருந்துகொண்டு, வழிகாட்டிக் கொண்டிருக்கின்றது!
ஆனால், அரசியலுக்குச் சென்றவர்கள், கொள்கையை அப்படியே பின்பற்ற முடியாது. அதில் கொஞ்சம் சமரசம் செய்துகொண்டுதான் இயக்கத்தை நடத்தவேண்டும்.
ஆகவே, தாய்க்கழகம் பாசறை போன்று தனியாக இருந்துகொண்டு, வழிகாட்டிக் கொண்டிருக்கின்றது.
அரசியல் அமைப்பான தி.மு.க., தாய்க்கழகத்தின் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு, தாய்க் கழகத்தை வழிகாட்டியாகக் கொண்டு நடத்தப்படக்கூடிய இயக்கமாக இருக்கிறது.
இதுதான் உண்மை!
(தொடரும்)