அரசுப் பள்ளிகளில் கல்வி, இலக்கியம், விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கி, 11ஆம் வகுப்பை நிறைவு செய்துள்ள 1,500 மாணவர்கள் கோடை சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர். மாணவிகள் நீலகிரி மாவட்டத்திற்கும், மாணவர்கள் ஏற்காட்டிற்கும் அழைத்து செல்லப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மாத கடைசி வாரத்தில் கோடை சுற்றுலா சிறப்புப் பயிற்சி முகாம்கள் நடைபெற உள்ளதாகவும் கூறுகின்றனர்.
நீட் தேர்வு முடிவுகள்:
உயர்நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவு
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மே 4ஆம் தேதி நடைபெற்ற இளங்கலை நீட் தேர்வின்போது, ஆவடியில் உள்ள ஒரு பள்ளியில் கனமழை காரணமாக 1.15 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. இதனால் தங்களால் சரியாக தேர்வு எழுத முடியவில்லை எனக் கூறி 13 மாணவர்கள் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இதேபோல் மத்திய பிரதேசத்திலும் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சூரிக்கு புகழாரம் சூட்டிய வைரமுத்து
‘மாமன்’ திரைப்படம் வெற்றிபெற வேண்டும் என மண்சோறு தின்ற ரசிகர்களை பகிரங்கமாக சாடிய தம்பி சூரியை மனதார பாராட்டுகிறேன் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். கதாநாயகர்கள் ஒவ்வொருவரும் தங்கள் ரசிகர் கூட்டத்தை இப்படி நெறிப்படுத்தி வைத்திருந்தால், கலையும், கலாச்சாரமும் மேலும் மேலும் மேம்பட்டிருக்கும். பகுத்தறிவு காத்திருக்கும் சூரியை ‘பலே பாண்டியா’ என பாராட்டுகிறேன் என புகழாரம் சூடியுள்ளார்.