சேலம், மே 19– கருவில் வளரும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிவது சட்டப்படி பெரும் குற்றம் என்ற போதிலும், சேலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்கள் சிலர் சட்ட விரோதமாக ஆந்திர மாநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள ஸ்கேன் மய்யங்களில் பரிசோதனை மேற் கொள்வதாக வெளியாகி வரும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இதுதொடர்பான சட்டவிரோத கும்பல்கள் மீது சுகாதாரத் துறையும் காவல்துறையும் இணைந்து நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன.
சமீபகாலமாக, சேலம் மற்றும் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் போன்ற அண்டை மாவட்டங்களில் சட்டவிரோத கருக்கலைப்பு மற்றும் கருவின் பாலினத்தைக் கண்டறியும் கும்பல்களை சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்டறிந்து வருகின்றனர். இந்த சோதனைகளில் அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சிலரும் இடைத்தரகர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இடைத் தரகர்கள் மூலம்
இந்த சட்டவிரோதச் செயல்களின் தொடர்ச்சியாக, சேலத்தில் இருந்து கர்ப்பிணிப் பெண்கள் சிலர் இடைத்தரகர்கள் மூலம் ஆந்திர மாநிலம் சித்தூர் போன்ற எல்லைப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள சட்டவிரோத ஸ்கேன் மய்யங்களில் அதிக கட்டணம் வாங்கிக்கொண்டு கருவின் பாலினம் கண்டறியப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிரடிச் சோதனையில்
சமீபத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத் துறையினர் ஆந்திர மாநிலம் சித்தூரில் நடத்திய அதிரடிச் சோதனையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்களுடன், சட்டவிரோதமாக ஸ்கேன் பரிசோதனை செய்துகொண்டிருந்த கும்பல் கையும் களவுமாகப் பிடிபட்டது. இதில் சேலத்தைச் சேர்ந்த பெண்களும் அடங்குவர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தடுப்புச் சட்டத்தின் கீழ்
இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் ஸ்கேன் மய்யங்கள் மற்றும் இடைத்தரகர்கள் மீது கருவுறுவதற்கு முன் மற்றும் மகப்பேறுக்கு முந்தைய நோயறிதல் நுட்பங்கள் சட்டத்தின் (PCPNDT Act, 1994) கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும், சேலம் மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து விளிப்புணர்வு ஏற்படுத்தியும், விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கண்காணிப்பு தீவிரம்
சேலம் மற்றும் ஆந்திர எல்லையோரப் பகுதிகளில் சுகாதாரத் துறை மற்றும் காவல்துறையின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர் குறித்த தகவல் தெரிந்தால் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். சட்டவிரோத பாலினக் கண்டறிதல் மற்றும் பெண் சிசுக் கொலைகளைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வந்தாலும், சமூகத்தில் நிலவும் சில தவறான நம்பிக்கைகள் மற்றும் ஆண் குழந்தை மீதான விருப்பம் போன்றவை இத்தகைய குற்றங்கள் தொடரக் காரணமாக அமைந்துள்ளன. இதைத் தடுக்க சட்ட நடவடிக்கைகளுடன், சமூக மனமாற்றமும் அவசியம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.