கிருட்டினகிரி, மே 19- கிருட்டினகிரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் மற்றும் பணி நிறைவு பெறும் பெரியார் கொள்கை சிந்தனையாளர் மின்வாரிய செயற்பொறியாளர் கு.முத்துசாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளர் கு.முத்துசாமியின் பணி நிறைவுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி 17/05/2025 – சனிக்கிழமை காலை 11.30 மணியளவில் கிருட்டினகிரி பெரியார் மய்யம் அன்னை மணியம்மையார் கூட்டரங்கத்தில் மிகுந்த எழுச்சியுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கோ.திராவிடமணி தலைமை வகித்துப் பாராட்டி பேசினார்.
கழகச் செயலாளர் செ.பொன்முடி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் வ. ஆறுமுகம், மாவட்ட துணைச் செயலாளர் சி.சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர் கி.முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் இல. ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி தலைவர் சீனிமுத்து. இராசேசன் ஆகியோர் முன்னிலை வகித்துப்பேசினர்.
நிறைவாக திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை. ஜெயராமன் பணி நிறைவுப்பெற்ற கு.முத்துசாமிக்கு தலைமைக் கழகம் சார்பில் நினைவுப் பரிசு வழங்கி சால்வை அணிவித்து பாராட்டுரை வழங்கினார். அவர் பேசும் போது பொறியாளர் தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கர் கொள்கை வழியில் அரசுப்பணியில் ஏழை எளிய மக்களுக்கும் மற்றும் அனைத்து தரப்பு மக்களுக்கும் நேர்மையுடன் தன் பணியை சிறப்பாக செய்து பணி நிறைவுப் பெற்றுள்ளார் அவருக்கு மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பாராட்டு விழா ஏற்பாடு செய்த நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்தும் பொறியாளர் முத்துசாமியின் அரசுப் பணிக்குதான் ஓய்வு. தந்தை பெரியாரின் கொள்கை பணிக்கு என்றும் ஓய்வு கிடையாது என்று கூறி நீங்கள் நேரடியாக திராவிடர் கழகப் களப்பணிக்கு வாருங்கள் வாருங்கள் என்று வரவேற்று தலைமைக் கழகம் சார்பில் பாராட்டுகளை தெரிவித்தார். தொடர்ந்து தலைமை செயற்குழுவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வழங்கிய வழிகாட்டுதல் கருத்துரைகளையும் நெறிமுறைகளையும் எடுத்துக் கூறியும் செயற்குழுக் கூட்ட தீர்மானங்களை விளக்கியும் சிறப்பு ரையாற்றினார்.
கூட்டத்தில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா செல்லதுரை, மாவட்டத் துணைத் தலைவர் வ. ஆறுமுகம், மாவட்டத் துணைச் செயலாளர் சி.சீனிவாசன், பழ.வெங்கடாசலம், கா.மாணிக்கம், பெ.மதிமணியன், இரபிக் அகமது, சா.ஜோதிமணி, பகுத்தறிவாளர் கழக டி.கே.இராஜரத்தினம், நகரத் தலைவர் கோ.தங்கராசன், மத்தூர் ஒன்றியத் தலைவர் சா.தனஞ்செயன், காவேரிப்பட்டணம் ஒன்றியத் தலைவர் பெ.செல்வம் ஆகியோர் பணி நிறைவுபெற்ற பெரியார் சிந்தனையாளர் கு.முத்துசாமிக்கு வாழ்த்து களையும் பாராட்டுகளையும் தெரிவித்து கருத்துரை வழங்கினர்.
நினைவுப் பரிசு
கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி, மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி ஆகியோர் சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி பாராட்டுரை வழங்கினர்.
ஏற்புரை
தமிழ்நாடு அரசு மின்சார வாரியத்தில் கடந்த 41-ஆண்டுகள் மிகச்சிறப்பாக நேர்மையாக பணியாற்றிய பெரியார் கொள்கை சிந்தனையாளர் செயற்பொறியாளர் (பணி நிறைவு) கு.முத்துசாமி நான், படிக்கும் போதே தந்தை பெரியார் கொள்கையை உள்வாங்கியதால் நாணயமாக நேர்மையாக பணியாற்றினேன். இதனால் பல்வேறு இடையூறுகளையும் நெருக்கடிகளையும் சந்தித்தேன். இருந்தபோதும் தந்தை பெரியார் கொள்கை வழியை பின்பற்றியதாலேயே அனைத்தையும் எதிர்கொண்டு எதற்கும் அஞ்சாமல் துணிவுடன் பொதுமக்களுக்கும் அரசுக்கும் என் பணியை நிறைவாக செய்துவந்துள்ளேன் என்று தனது ஏற்புரையில் தெரிவித்துள்ளார்.
பாராட்டு விழா நிகழ்வினை ஏற்பாடு செய்த மாவட்ட கழக நிர்வாகிகளுக்கும், தலைமைக் கழக மாநில ஒருங்கிணைப்பாளருக்கும் பொறியாளர் கு. முத்துசாமி பயனாடை அணிவித்து நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
இறுதியில் நகர கழகச் செயலாளர் அ.கோ.இராசா நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
இரங்கல் தீர்மானம் கிருட்டினகிரி நகர கழக மேனாள் தலைவரும்,மேனாள் பொதுக்குழு உறுப்பினருமான கழகக் காப்பாளர் வழக்குரைஞர் என்.எஸ். பிரபாவதி மறைவிற்கும், ஓசூர் மாவட்ட கழகக் காப்பாளர் பேராசிரியர் கு.வணங்காமுடி மறைவிற்கும் இம்மாவட்டக் கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீரவணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் கடந்த 10/05/2025 – அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற கழக தலைமை செயற்க் குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட அனைத்து தீர்மானங்க ளையும் இம்மாவட்ட கூட்டம் ஒரு மனதான ஏற்று செயலாற்றுவது என தீர்மானிக்கப்படுகிறது.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவிப்பின்படி தமிழ்நாடு முழுவதும் வருகின்ற 20/05/2025இல் ஒன்றிய பாஜக அரசின் மும்மொழி திட்டம், புதிய தேசியக் கல்விக் கொள்கை, ஹிந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கும் போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம். கிருட்டினகிரி மாவட்ட கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மகளிரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கிருட்டினகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை எதிரில் நடந்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு “விடுதலை” நாளிதழ் வருகின்ற ஜூன் 01ஆம் தேதி 91 ஆம் ஆண்டில் சிறப்பாக அடிபதித்து வெளிவந்துக்கொண்டுள்ள சமூக புரட்சி நாளேடு “விடுதலைக்கு” அதிக அளவில் மாவட்ட கழகம் சார்பில் சந்தாக்களையும், திருச்சி சிறுகனூர் பெரியார் உலகம் பெரும்பணிக்கு நிதிகளையும் திரட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்குவது என தீர்மானிக்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு மின்சார வாரி யத்தில் 41 – ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி பணிநிறைவு பெற்றுள்ள சீரிய பெரியார் கொள்கை சிந்தனை யாளர் செயற்பொறியாளர் (பணி நிறைவு) கு.முத்துசாமி அவர்களுக்கு மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து. (அரசு பணிக்குதான் ஓய்வு) திராவிடர் கழகக் கொள்கை களப்பணியில் இணைந்து செயலாற்ற பொறியாளர் கு.முத்துசாமி அவர்களை இம்மாவட்ட திராவிடர் கழகம் வருக! வருக!! என வரவேற்று மகிழ்கிறது.
கிருட்டினகிரி மாவட்ட கழக நிர்வாகிகளின் பரிந்துரையின்பேரில் பொறியாளர் கு.முத்துசாமியை மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவராக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை. செயராமன் அறிவித்துள்ளார். மேலும் கிருட்டினகிரி மாவட்ட மகளிரணி, மகளிர் பாசறை புதிய நிர்வாகிகளுக்கும், புதியதாக மாநில மகளிரணி துணைச் செயலாளராக மு. இந்திராகாந்தி அறிவிக்கப்பட்டுள்ளதற்கும் மாவட்ட திராவிடர் கழகம் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறது.