பெரியாரைப் பின்பற்றுகின்றவர்கள் என்று சொன்னால், அதற்கு ஒரு தனித்தன்மை உண்டு!
பெரியாரை விரும்புகின்றவர்கள் வேறு; பின்பற்றுகின்றவர்கள் வேறு; இரண்டிற்கும் வேறுபாடு இருக்கிறது!
பெரியாரைப் படமாகப் பார்க்கின்றவர்களுக்கும், பெரியாரைப் பாடமாகப் பார்க்கின்றவர்களுக்கும் மலையளவு வேறுபாடு உண்டு!
சென்னை, மே 19 பெரியாரைப் பின்பற்றுகின்றவர்கள் என்று சொன்னால், அதற்கு ஒரு தனித்தன்மை உண்டு. பெரியாரை விரும்புகின்றவர்கள் வேறு; பின்பற்றுகின்றவர்கள் வேறு. இரண்டிற்கும் வேறுபாடு இருக்கிறது. அது மட்டுமல்ல, பெரியார் இன்றைக்கு மிகச் செல்வாக்கு மிகுந்த தலைவர். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அரசியலையோ அல்லது பொதுவாழ்க்கையில் இருக்கின்ற வேறு எந்த அம்சங்களையோ, பெரியாரை விட்டுவிட்டு செய்ய முடியாது. ஆகவேதான், யார் வந்தாலும் ‘‘பெரியார், பெரியார், பெரியார்’’ என்று சொல்லக்கூடிய அளவிற்கு இருக்கிறார்கள். பெரியாரைப் படமாகப் பார்க்கின்றவர்களுக்கும், பெரியாரைப் பாடமாகப் பார்க்கின்றவர்களுக்கும் மலையளவு வேறுபாடு உண்டு என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.
‘‘ஹலோ பண்பலைக்குத்’’
தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி!
தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி!
கடந்த 30.4.2025 அன்று ஹலோ பண்பலைக்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பேட்டியளித்தார்.
அவரது பேட்டியின் விவரம் வருமாறு:
பெரியாரின் கருத்துகள் இன்றைய காலத்திற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயங்களாக இருக்கின்றனவா?
நெறியாளர்: தமிழ்நாடு பெரியார் மண் என்று சொல்கிறோம். பெரியாருடைய சிந்தனைகளும், பேச்சுகளும் இன்றைக்கு மட்டுமல்ல, இன்னும் நூறாண்டுகளைத் தாண்டியும் தேவைப்படக் கூடிய விஷயங்களாகத்தான் பார்க்கப்படுகின்றன.
இதே தருணத்தில், பெரியாருடைய அத்துணை விஷயங்களும் இன்றைய காலத்திற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷ யங்களாக இருக்கின்றனவா? அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
பெரியாரே
அப்படிச் சொல்லவில்லை!
அப்படிச் சொல்லவில்லை!
தமிழர் தலைவர்: முதலில், இந்தக் கேள்வியே முரண்பாடான கேள்வியாகும். எப்படியென்றால், பெரியார் மண் என்று தமிழ்நாட்டை அங்கீகரித்ததற்கு, சொல்லுவதற்கு, மக்கள் மத்தியில் இந்தக் கருத்து ஏற்படுவதற்குக் காரணமே, பெரியாருடைய கருத்துகள் எல்லா காலத்திற்கும் பொருந்தும் என்ப தால் மட்டுமே என்று யாரும் சொல்ல முடியாது.
ஏனென்றால், பெரியாரே அதை அப்படிச் சொல்ல வில்லை. அதுதான் மிகவும் முக்கியமானது.
இதுபோன்ற கருத்துச் சுதந்திரத்தோடும், அறிவு நாணயத்தோடும் பேசிய தலைவர் உலக வரலாற்றிலேயே தந்தை பெரியார் அவர்களைப் போன்று வேறு யாரையும் அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது.
‘‘யார் சொல்வதையும் நம்பாதீர்கள்’’ என்று சொல்வார் பெரியார்!
அவர் சொன்னார், ‘‘இன்றைக்கு என்னை புரட்சிகரமான தலைவர் என்றெல்லாம் நீங்கள் பாராட்டுகிறீர்கள். 200 ஆண்டுகளுக்குப் பின் வருகின்றவர்கள், இது மிகவும் பிற்போக்கான ஒரு கருத்து என்று அன்றைய வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, அன்றைய வேகத்தைக் கருத்தில் கொண்டு சொன்னால், அது அதிசயமில்லை. எனக்கு சரியென்று பட்டதை நான் உங்கள் மத்தியில் சொல்கிறேன். என்னுடைய பகுத்தறிவுக்கு, என்னுடைய அனுபவத்திற்கு இது கட்டாயமில்லை. இதை அப்படியே எடுத்துக் கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை. உங்களுக்கும் பகுத்தறிவு இருக்கின்றது; நீங்கள் சிந்திக்கவேண்டும் – ஆகவே, யார் சொல்வதையும் நம்பாதீர்கள்’’ என்று அவர் பேசுகின்ற கூட்டத்தில், முதலில் ஒரு முறை சொல்வார்; உரையை முடிக்கும்போதும்
மீண்டும் சொல்வார்.
அப்படி ஒருமுறை குடியாத்தம் கல்லூரியில் பெரியார் அவர்கள் உரையாற்றும்போது, ஒரு மாண வர் எழுந்து, ‘‘அப்படியென்றால், நீங்கள் சொல்வதை நம்புவதா? வேண்டாமா?’’ என்று கேட்டார்.
நான் சொல்வதையும் நம்பாதீர்கள்;
உங்கள் பகுத்தறிவு என்ன சொல்கிறதோ, அதை நம்புங்கள்!
உங்கள் பகுத்தறிவு என்ன சொல்கிறதோ, அதை நம்புங்கள்!
‘‘நான் சொல்வதையும் நம்பாதீர்கள்; உங்கள் பகுத்தறிவு என்ன சொல்கிறதோ, அதை நம்புங்கள். உங்களுடைய சிந்தனை எதைச் சொல்லுகிறதோ அதை நம்புங்கள்’’ என்று அறிவுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், அறிவு நாணயம் இவற்றை முன்வைத்தவர் தந்தை பெரியார்.
ஆனால், இந்தக் காலத்தில், இன்னும் 200 ஆண்டுகளுக்குப் பெரியார் தேவைப்படுகிறார். அவருடைய கருத்து தேவைப்படுகிறது. அவர் சொன்னதெல்லாம் இன்றைக்கு நடந்துகொண்டு இருக்கிறது.
‘‘இனிவரும் உலகம்!’’
ஒரு சிறிய உதாரணம், ‘‘இனி வரும் உலகம்’’ என்ற ஒரு நூல் இருக்கிறது. அந்த நூலில் உள்ளவை – பெரியார் அவர்கள் 60 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு திருமண நிகழ்வில் பேசியவை. அந்தப் பேச்சை அண்ணா அவர்கள் அப்படியே எழுதி, அய்யா அவர்களிடம் திருத்தங்கள் செய்து, ‘‘இனிவரும் உலகம்’’ என்ற தலைப்பில் ‘‘திராவிட நாடு’’ பத்திரி கையில் வெளியிட்டார்கள்.
தொலைநோக்கோடு பல கருத்துகளைச் சொல்லியிருக்கிறார்!
அந்தப் பேச்சில், ‘‘உலகெங்கும் இனி கம்பி தந்தி சாதனங்கள் வரும். மின்சாரத்தில் ரயில்கள் ஓடும். ஒரே ஓர் ஆசிரியர், எல்லா இடங்களில் உள்ள மாணவர்களுக்கும் அவர் பாடம் எடுப்பார். ஒருவரை ஒருவர் ஆள்காட்டிப் பேசிக் கொள்ளக்கூடிய நிலை வரும். குழந்தைகள் பிறப்பு என்பது பரிசோதனைக் குழாய்கள் மூலம் வரும். மின்சாரத்தில் கார் ஓடும் – மனிதன் தானாகவே பறக்கக்கூடிய அளவிற்கும் அறிவியல் வளர்ந்திருக்கும்’’ என்று பெரியார் அவர்கள் தொலைநோக்கோடு பல கருத்துகளைச் சொல்லியிருக்கிறார்.
அதுமட்டுமல்ல, சமுதாய வளர்ச்சியைப் பொறுத்தவரையில், அவர் ஒரு சுதந்திரச் சிந்தனை யாளர்.
அவர் தாராளமான சிந்தனையாளர் (Liberal Thinkers) என்று சொல்லக்கூடிய அளவிற்கும், சுயசிந்தனையாளர் (Original Thinkers) என்று சொல்லக்கூடிய அளவிற்கும், சுதந்திரமாகச் சிந்திக்கக் கூடியவர்.
‘‘அந்தப் புத்தகத்தில் சொல்லியிருக்கிறது; இந்தப் புத்தகத்தில் சொல்லியிருக்கிறது என்பதற்காக அதனை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். என்னு டைய கருத்து அது. நான், யாரையும் மேற்கோள் காட்டுவதில்லை. அதற்குப் பதிலாக நான் என்ன சொல்வேன் என்றால், என்னுடைய கருத்து இதிலேயும் இருக்கிறது; ஆகவே, இந்த நூலை நான் வரவேற்கிறேன் என்று சொல்லக் கூடிய அளவில் இருப்பேன்’’ என்றார்.
ஜஸ்டிஸ் ஏ.எஸ்.பி.அய்யர் அய்.சி.எஸ்.
உயர்நீதிமன்ற வழக்கு ஒன்றில், பெரியாரை தண்டித்த இரு நீதிபதிகளில் ஒருவர், ஜஸ்டிஸ் ஏ.எஸ்.பி.அய்யர் அய்.சி.எஸ். அவர்கள்.
‘‘பெரியார் வருவதால், நானே தலைமை தாங்குகிறேன்’’ என்றார்!
நாங்கள் எல்லாம் சட்டக்கல்லூரியில் மாணவராக இருந்தபோது, சட்டக் கல்லூரியின் தலைவராக அவர் பொறுப்பிற்கு வந்தார். அப்போது அந்தக் கல்லூரியின் தமிழ் மன்றத்தின் சார்பாக நடைபெற்ற விழாவிற்குப் பெரியாரை வரவழைத்தோம். அதுபோன்ற நிகழ்விற்கு மாணவர் ஒருவர்தான் தலைமை தாங்குவார். ஆனால், அந்த விழாவிற்குப் ‘‘பெரியார் வருவதால், நானே தலைமை தாங்குகிறேன்’’, என்று சொன்னார்.
மேற்கே பெட்ரண்ட் ரசல்;
கிழக்கே தந்தை பெரியார்!
கிழக்கே தந்தை பெரியார்!
அவ்விழாவில், அறிமுக உரையாற்றிய ஜஸ்டிஸ் ஏ.எஸ்.பி.அய்யர், ‘‘உலகத்திலேயே அதிசய மனிதர்களாக நான் பல பேரைப் பார்த்தி ருக்கிறேன். அவர்களும் பல கருத்துகளை எழுதியிருக்கிறார்கள். சிந்தனையாளர்களில், பகுத்தறிவாளர்களில், இன்னொரு நூலை மேற்கோள் காட்டாமல் பேசக்கூடிய தலை வர்கள் இரண்டே இரண்டு பேர்தான். மேற்கே பெட்ரண்ட் ரசல்; கிழக்கே தந்தை பெரியார்’’ என்றார்.
ஆகவே, பெரியாருடைய சிந்தனை என்பது தனித்தன்மை வாய்ந்த சுதந்திர சிந்தனை.
அவர், கருத்துச் சுதந்திரத்தைக் கொடுத்தி ருக்கின்றார். ஆகவே, இனிவரும் காலங்களிலும் நிச்சயமாகப் பொருந்தும்.
என்றைக்கும்
பெரியார் தேவைப்படுகிறார்!
பெரியார் தேவைப்படுகிறார்!
இன்றைக்கு இவ்வளவு வேகமாக பகுத்தறிவு வந்தும்கூட, வேகமாக பின்னாலே செல்லக்கூடிய அளவுக்கு மூடநம்பிக்கைகள், ஜோதிடம் என்ற தவறான கருத்துகள் பெயரால் இன்னும் பல வகையான குருட்டு நம்பிக்கைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. திடீரென்று நகைகளை வெகு வாக விற்கவேண்டுமானால், அதற்கு புதிய தந்திரங்கள் (அட்சய திருதியை). இப்படியெல்லாம் வித்தைகள் காட்டிக்கொண்டு, ஓரடி வளர்ந்தால், நூறடி பின்னாலே இழுக்கக்கூடிய நேரத்தில், என்றைக்கும் பெரியார் தேவைப்படுகிறார்.
தவறானவை என்னும்போது, எந்தக் கருத்தாக இருந்தாலும், போர்க் குணத்தோடு அவற்றை எதிர்க்கவேண்டும் என்ற உணர்வு இருக்கிறதே, அந்த உணர்வு சாகாமல் இருந்தால்தான், மனிதனுடைய வாழ்வு சிறப்பான வாழ்வாக என்றைக்கும் இருக்கும்.
த.வெ.க. தலைவர் விஜய்,
‘‘பெரியாரே எங்கள் கொள்கை வழிகாட்டி’’ என்று சொல்கிறாரே?
‘‘பெரியாரே எங்கள் கொள்கை வழிகாட்டி’’ என்று சொல்கிறாரே?
நெறியாளர்: இன்றைக்குப் பெரியாரை பின்பற்றக் கூடியவர்கள்; பெரியார் வழியில்தான் நாங்கள் நடந்துகொண்டிருக்கின்றோம் என்று சொல்லக்கூடியவர்கள், பெரியாரே எங்கள் கொள்கை வழிகாட்டி என்று சொல்லக்கூடியவர்களிடையே; த.வெ.க. தலைவர் விஜய், ‘‘பெரியாரே எங்கள் கொள்கை வழிகாட்டி’’ என்று சொல்கிறார். ஆனால், இறைநம்பிக்கை என்ற விஷயத்தில், நாங்கள் கடவுளைக் கும்பிடுவோம் என்று சொல்கிறார். அ.தி.மு.க.வும் அந்தப் பாதைக்கு வந்து நீண்ட நாள்களாயிற்று. ‘‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’’ என்று அண்ணா சொன்னதைத்தான் அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். இன்றைக்கு நீங்கள் குறிப்பிட்ட அந்த ஜோதிட ரீதியிலான விஷயங்களுக்குள் அவர்கள் மூழ்கியும் நீண்ட காலமாயிற்று. அதை நீங்கள் எப்படி
பார்க்கிறீர்கள்?
பெரியாரை விரும்புகின்றவர்கள் வேறு; பின்பற்றுகின்றவர்கள் வேறு!
தமிழர் தலைவர்: பெரியார் கொள்கையைப் பின்பற்றுகின்றவர்கள் என்று சொன்னால், அதற்கு ஒரு தனித்தன்மை உண்டு.
பெரியாரை விரும்புகின்றவர்கள் வேறு; பின்பற்றுகின்றவர்கள் வேறு. இரண்டிற்கும் வேறுபாடு இருக்கிறது.
அதுமட்டுமல்ல, பெரியார் இன்றைக்கு மிகச் செல்வாக்கு மிகுந்த தலைவர்.
யார் வந்தாலும் ‘‘பெரியார், பெரியார், பெரியார்’’ என்று சொல்லக்கூடிய அளவிற்கு இருக்கிறார்கள்!
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அரசியலையோ அல்லது பொதுவாழ்க்கையில் இருக்கின்ற வேறு எந்த அம்சங்களையோ, பெரியாரை விட்டுவிட்டு செய்ய முடியாது. ஆகவேதான், யார் வந்தாலும் ‘‘பெரியார், பெரியார், பெரியார்’’ என்று சொல்லக்கூடிய அளவிற்கு இருக்கிறார்கள்.
இதில், அவர்கள் எந்த அளவிற்குப் பெரியாரைப் புரிந்துகொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் மிக முக்கியமான கேள்வியாகும்.
பெரியாரைப் புரிந்துகொள்ளாமல், பெரியாரைப் படமாகப் பார்க்கின்றவர்களுக்கும், பெரியாரைப் பாடமாகப் பார்க்கின்றவர்களுக்கும் மலையளவு வேறுபாடு உண்டு.
பெரியாரை படமாகப் பார்க்கிறாரா?
பாடமாகப் பார்க்கிறாரா?
பாடமாகப் பார்க்கிறாரா?
ஆகவே, பெரியாரை படமாகப் பார்க்கிறாரா? பாடமாகப் பார்க்கிறாரா? என்பதை அவருடைய நடத்தைதான் பின்னாளில் காட்டும்.
(தொடரும்)