மாநில முதலமைச்சர்களை ஒருங்கிணைக்கும் நமது முதலமைச்சரின் அணுகுமுறை ஞாலம் பாராட்டி வாழ்த்தவேண்டிய நிலைப்பாடு!

viduthalai
5 Min Read

* மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மசோதாக்களை முடக்கும் ஆளுநர்களுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றார் நமது முதலமைச்சர்!
* இதனை முறியடிக்க குடியரசுத் தலைவரை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவதா? w ஒன்றிய அரசின் ஜனநாயக விரோதப் போக்கை முறியடிக்க எதிர்க்கட்சிகள் ஆளும்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு நிறைவேற்றும் மசோதாக்களை கால வரையறையின்றி முடக்கும் மாநில ஆளுநர்களின் போக்கிற்குச் சட்டப் போராட்டம் நடத்தி, வெற்றி கண்டவர் நமது முதலமைச்சர்! இது முதற்கட்ட வெற்றி! இரண்டாவதாக இந்த மாநில உரிமை வெற்றியை முறியடிக்க குடியரசுத் தலைவரை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தும் போக்கையும் முறியடிக்க எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதலமைச்சர்களோடு தொடர்பு கொண்டு ஒருங்கிணைக்க மேற்கொள்ளும் தமிழ்நாடு முதலமைச்சரின் அணுகுமுறை ஞாலமே பாராட்டி வாழ்த்திட வேண்டிய சரியான நிலைப்பாடு என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

17.5.2025 அன்று சென்னையில் மிகச் சிறப்போடு நடைபெற்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களால் எழுதப்பட்டுள்ள ‘‘தேசியக் கல்விக் கொள்கை – 2020 எனும் மத யானை’’ என்ற நூல் வெளியீட்டு விழாவில், அந்நூலை வெளியிட்டு ஆற்றிய பேருரையில் நமது ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் இரண்டு முக்கியக் கருத்துரைகளை வெளியிட்டு, தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல்’ ஆட்சி, தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய ஜனநாயகத்தினையும், அரசமைப்புச் சட்டத்தின் மாண்பையும், மதிப்பையும் காப்பாற்றிட முனைப்புடன் உரிமைக் குரல் எழுப்பும் ஓர் அரசு என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

பாராட்டி வரவேற்கத்தக்க முக்கிய அறிவிப்புகள் அவை இரண்டும்!

நிதியைவிட கொள்கையும், உரிமையும்தான் முக்கியம் என்று கூறும் நமது முதலமைச்சர்!

சமூகநீதிக்குரிய முக்கிய இடத்தைப்பற்றியோ, மகளிர் படிப்பு, வளர்ச்சி பற்றியோ கவலைப்படாத, பழைய குருகுல முறைத் திணிப்பையும், சமஸ்கிருதம், ஹிந்தியை வலுக்கட்டாயமாக மறைமுகமாகவும், நேரிடையாகவும் திணிக்கும் வகையில், தமிழ்நாடு கடந்த 50 ஆண்டுகளுக்குமேல் ஏற்காத மும்மொழித் திட்டத்தை ஏற்று, இரு மொழிக் கொள்கையைக் கைவிட்டால்தான், உங்களுக்குக் கல்வி நிதியை அளிக்க முடியும் என்று மக்கள் வழங்கிய வரிப் பணத்தி லிருந்து, மாநிலங்களுக்குத் தரவேண்டிய நிதியை, அரசியல் கருவியாக்கி – நிர்ப்பந்தப்படுத்திட முயற்சி செய்ததையும் எதிர்த்துக், குரல் கொடுத்ததோடு, முதுகெலும்புள்ள முதலமைச்சர் என்று துணிவுடன் காட்டி, ‘‘3 ஆயிரம் கோடி ரூபாய் என்ன? இதற்கு மேலும் 10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுப்பதாக இருந்தாலும், எமது கொள்கையை மாற்றிக் கொள்ளமாட்டோம்’’ என்று அறிவித்ததோடு, ‘‘இந்த உரிமை, மாநில அரசுக்கு உள்ள உரிமை – கூட்டாட்சித் தத்துவத்தில் உள்ள ஒன்று; சலுகையோ, விருப்பத்திற்கேற்ப வழங்கும் மானியமோ அல்ல’’ என்பதையும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இதை நிலை நாட்ட உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டு, இந்த மாநில உரிமையை நிலைநாட்ட ஆயத்த மாக உள்ளோம் என்று முதலமைச்சர் அறிவித்தார்.

‘‘உறவுக்குக் கை கொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம்!’’ இதுதான் தி.மு.க.வின் அணுகுமுறை!

‘‘உறவுக்குக் கைகொடுப்போம்’’ என்பதற்கொப்ப அண்மையில் நடைபெற்ற பாகிஸ்தான் தீவிரவா தத்தினைக் கண்டித்து, ஒன்றிய அரசின் அனைத்து முயற்சிகளுக்குத் தமிழ்நாடு முழு ஆதரவு தந்தது.

‘‘உரிமைக்குக் குரல் கொடுக்கும் அதே நேரத்தில், உறவுக்குக் கை கொடுக்கத் தவறமாட்டோம்’’ என்பதை இந்த ஆதரவு தெளிவாக்குகிறது!

மும்மொழித் திட்டத்தைக் கட்டாயப்படுத்தி, எந்த மாநிலத்தின்மீதும் திணிக்க இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடமில்லை என்பதை உச்சநீதிமன்றமே அண்மை வழக்கொன்றில் உறுதியாகத் தீர்ப்பளித்து விட்டது.

அந்தப்படி பார்த்தால், நம் மாநில பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கிய தொகையை (மூவாயிரம் கோடி ரூபாய்) அந்த நிபந்தனையின்  அடிப்படையில் முடக்க முடியாது என்று கருத்துக்குப் பெரும் இடம் ஏற்பட்டுள்ளது.

எனவே, மீண்டும் ஒரு சட்டப் போராட்டம் இதற்குத் தேவை என்று நமது முதலமைச்சர் கூறியதும் முக்கிய மானதாகும்.

ஓர் அதிகார விடிவைக் கண்ட உச்சநீதிமன்றம்!

அதுபோலவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் அரசு – மாநில அரசு நிறைவேற்றி (இரண்டாம் முறையும் நிறைவேற்றி,) ஆளுநர் ஒப்புதலுக்கு (கூறு 200, 201) அனுப்பி வைத்த பிறகும், மசோதாக்க ளுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இது சட்டப்படி தவறானது. ஒரு மசோதா நான்கு ஆண்டுகள்; மற்றவை இரண்டாண்டுகள் கிடப்பில் போடப்பட்டு, ஜனநாயகத்தின் மாண்பையும், உரிமைகளையும் பாழாக்கிவிடக் கூடாது என்பதற்காக – ஏற்கெனவே பல வழக்குகளில் பயன்படுத்தப்பட்ட அரசமைப்புச் சட்ட சிறப்பதிகாரத்தின் கூறு 142–இன்படி, ஆளுநரும், குடியரசுத் தலைவரும் மசோதாக்களைக் காலவரையின்றி கிடப்பில் போட முடியாதபடி ஆளுநர் ஒரு மாதக் காலக் கெடுவுக்குள்ளும், குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட மசோதாவின்மீது மூன்று மாத காலக் கெடுவுக்குள்ளும் அவற்றிற்கு ஒப்புதல் அளிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து, 10 மசோதாக்களுக்கு ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்டதாக நடைமுறைக்குக் கொண்டு வருகிற ஒரு சிறப்பு அதிகார விடிவைக் கண்டுள்ளனர்.

குடியரசுத் தலைவரை
அரசியல் ஆயுதமாக்கலாமா?

இதை ஒன்றிய அரசு ஏற்க மறுத்தால், அரசமைப்புச் சட்டப்படி வழக்கு சீராய்வு மனு (Review Petition) தாக்கல் செய்வதை விடுத்து, மற்றொரு குறுக்கு வழியாக, குடியரசுத் தலைவரை இதில் ஓர் ‘‘அரசியல் ஆயுதமாக்கி’’ சட்டக் கருத்தை அறிவிக்க, உச்சநீதி மன்றத்திடம் 14 கேள்விகளைக் கேட்டுள்ளது ஏற்கத்தக்கதல்ல. இது மாநில உரிமைகளைப் பறிப்ப தாகும்.

மசோதாக்கள், செயல்படுத்துவதற்காக மக்கள்  பிரதிநிதிகளால் நிறைவேற்றப்படுகின்றதேயொழிய, ‘ஊறுகாய் ஜாடி’யில் ஊற வைத்து, அரசியல் ஒத்துழையாமையைக் காட்டுவதற்காக அல்ல!

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு முட்டுக்கட்டை போடலாமா?

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், எந்த வித்தை களைக் கையாண்டாலும் தேர்தலில் வெற்றி பெற முடியாத அவர்கள்,  அங்கு அமைந்த ஆட்சிகளுக்கு ஆளுநர்கள்மூலம் முட்டுக்கட்டை, ‘குறுக்குசால்‘ ஓட்டுவது மிகப்பெரிய ஜனநாயகக் கேடு அல்லவா? அரசமைப்புச் சட்டத் தகர்ப்பு அல்லவா?

எனவேதான், எதிர்க்கட்சிகள் ஆளும் எட்டு மாநில முதலமைச்சர்களுக்கும் நமது முதலமைச்சர் கருத்துகளைக் கடிதம் வாயிலாக எடுத்துக் கூறி, ஒத்திசைவு பெற்ற சட்டக் களம் காண முடிவு செய்திருப்பது மிக முறையான அரசமைப்புச் சட்டப் (அறவழி) போராட்ட முறையாகும்.

நமது முதலமைச்சசரின் பொறுமையும், நிதானமும் என்றும் தோல்வி அடையாது; வெற்றி பெறும்! காரணம், அவை நீதியின்பாற்பட்ட, நியாயத்தின்பாற்பட்ட உரிமை முழக்கங்களாகும்!

இந்த இரண்டு முடிவுகளும் காலத்தின் கட்டாயம்; ஞாலம் பாராட்டி வாழ்த்திடவேண்டிய சரியான நிலைப்பாடு!

‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்றம்’ – நாட்டை உணர வைக்க இதுவே நல்ல முடிவு.

வாய்மையே வெல்லும் என்பது உறுதி!

 

 

 

தலைவர்,

19.5.2025             திராவிடர் கழகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *