மே மாத ஊதியத்துடன் அகவிலைப்படி உயர்வு
அரசு அறிவிப்பு
தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு இம்மாதம் ஊதியத்துடன் 4 மாத அகவிலைப்படி உயர்வு சேர்த்து வழங்கப்படும் என்று அரசு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சட்டப்பேரவையில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்படும் என தெரிவித்தார். இந்நிலையில், மே மாத ஊதியத்துடன், அகவிலைப்படி உயர்வும் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டதால், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
காஷ்மீரிகள் பற்றி பேசாதது ஏன்? உமர் கேள்வி
பாகிஸ்தான் தாக்குதலில் கொல்லப்பட்ட காஷ்மீரிகள் குறித்து தேசிய அளவில் பேசப்படாதது ஏன் என ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். இந்துக்கள், சீக்கியர்கள், முஸ்லிம்கள் மற்றும் அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும், பஹல்காம் தாக்குதல் குறித்தும் பேசியவர்கள் இது பற்றி ஏன் பேசவில்லை எனவும் அவர் வினவியுள்ளார்.
10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
+2 பொதுத்தேர்வு ரிசல்ட் ஏற்கெனவே வெளியாகிய நிலையில், 10, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு 16.5.2025 அன்று வெளியிடப்பட்டது. 10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பள்ளிகள் மூலம் மே 19ஆம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தனித் தேர்வர்கள் www.dge.tn.gov.in இணையதளத்தில் மதிப்பெண் பட்டியலை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட்டி விகிதத்தை திடீரென குறைத்த எஸ்.பி.அய். வங்கி!
எஸ்.பி.அய். வங்கியின் அறிவிப்பு முதலீட்டாளர் களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. அனைத்து தவணைக்கால வைப்புத் தொகைகளுக்கான வட்டி விகிதத்தை 20 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. குறிப்பாக 444 நாள்கள் சிறப்புத் திட்ட வட்டி விகிதம் 7.05 சதவீதத்தில் இருந்து 6.85 சதவீதம் ஆக குறைக்கப்பட்டுள்ளது. 17.5.2025 முதலே அமலுக்கு வந்துள்ள இந்த வட்டி குறைப்பு நிரந்தர வைப்புத்தொகையில் முதலீடு செய்த வாடிக்கையாளர்களுக்கு இழப்பை ஏற்படுத்தும்.
மண் சோறு சாப்பிட்ட ரசிகர்கள் – கொந்தளித்த சூரி!
‘மாமன்’ படம் ஹிட்டாக வேண்டி மண் சோறு சாப்பிட்டவர்கள் தனது ரசிகர்களாக இருப்பதற்கே தகுதியில்லாதவர்கள் என நடிகர் சூரி காட்டமாக தெரிவித்துள்ளார். அவர்களை தம்பிகள் என்று சொல்வதற்கே வெட்கமாக இருப்பதாகவும், அந்த பணத்தை வைத்து 4 பேருக்கு உணவு வாங்கி கொடுத்திருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், கதை நன்றாக இருந்தால் அந்த படம் ஓடும், மண் சோறு சாப்பிட்டால் எப்படி ஓடும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.