வரும் 20ஆம் தேதி தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிர் பாசறை, மகளிரணியினர் இணைந்து எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!!
கடந்த 11ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் கழகத் தலைவர் தலைமையில் கூடிய கலந்துரையாடல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு இது!
எதற்காக இந்த ஆர்ப்பாட்டம்?
‘நீட்’, தேசிய கல்விக் கொள்கை, விஸ்வ கர்ம யோஜனா எனத் தொடர்ந்து சமூகநீதியை அழிக்கும் ஒன்றிய பிஜேபி அரசின் கொடுஞ் செயலை கண்டிக்கும் வகையிலும் பாதிப்புக்குள்ளான பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஒன்றிய பிஜேபி அரசின் திட்டங்களில் உள்ள சூழ்ச்சிகளையும், ஆபத்துகளையும் எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்துவதும்தான் இந்த ஆர்ப்பாட்டத்தின் விழுமிய நோக்கமாகும்.
(1) ‘நீட்’ தேர்வால் ஏற்பட்டுள்ள ஆபத்து என்ன?
இந்தியா முழுவதும் பல்வேறு கல்வித் திட்டங்க்ள் உள்ளன. இந்த நிலையில் சி.பி.எஸ்.இ. பாடத் திட்ட அடிப்படையில் ‘நீட்’ தேர்வு என்றால், இதனால் பலன் அடைபவர்கள் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படிப்பவர்கள் தானே?
எடுத்துக்காட்டுக்கு ஒன்றே ஒன்று – ‘நீட்’ இல்லாதபோது 2016இல் சி.பி.எஸ்.சி. பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் கிடைத்த இடங்கள் வெறும் 52 மட்டுமே! ‘நீட்’ வந்த பிறகு சி.பி.எஸ்.சி. பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்குக் கிடைத்த இடங்கள் 1220. எத்தனை மடங்கு பார்த்தீர்களா?
பல லட்சம் ரூபாய் செலவு செய்து கோச்சிங் சென்டருக்குச் சென்று படித்தவர்கள் (அதுவும் இரண்டு மூன்று தடவை முயற்சி) தான் ‘நீட்’டில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவக் கல்லூரியில் நுழைய முடிகிறது.
பணக்கொழுப்பு அதிகம் இருப்பவர்கள் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெறா விட்டாலும் தனியார் மருத்துவக் கல்லூரியில் லட்சக்கணக்கான ரூபாய்களைக் கொட்டிக் கொடுத்து டாக்டராகி விடலாம்; தகுதி – திறமைக்குக் காயடிக்கப்படுவது குறித்து இந்த ‘நீட்’ விசுவாசிகளின் வாய்கள் அப்பொழுது மட்டும் பிளாஸ்திரி போட்டு அடைக்கப்பட்டு விடும்.
(2) தேசிய கல்விக் கொள்கையாம்! மாநிலங்களின் கருத்துக் கேட்கப்பட்டதா? இந்தக் கொள்கைப்படி ஹிந்தி, சமஸ்கிருதம் திணிக்கப்படும்.
தமிழ் நாட்டிலே தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கை என்பது சட்டப்படியானது என்பது நினைவிருக்கட்டும்!
அய்ந்தாம் வகுப்பிலும் தேர்வு – 8ஆம் வகுப்பிலும் தேர்வாம்; இதில் வெற்றி பெறாவிட்டால் வீட்டுக்குப் போக வேண்டியதுதான். அப்பன் தொழிலைச் செய்ய வேண்டியதுதான். இடைநிற்றல் அதிகமாகும்.
எல்லோரும் படிக்கக் கூடாது என்பதுதானே பார்ப்பனர்களின் கொள்கை – அதுதானே – ஆர்.எஸ்.எஸின் கொள்கை.
விஸ்வகர்மா யோஜனாவாம், 10ஆம் வகுப்பில் தேர்ச்சி அடையாவிட்டால் 18 பாரம்பரிய தொழில்களுக்கான பயிற்சி அளிக்க நிதி உதவியாம்.
சுற்றி வளைத்துச் சொல்லப் போனால் ராஜகோபாலாச்சாரியார் – சென்னை மாநில முதலமைச்சராக 1952இல் கொல்லைப்புறம் வழியாக வந்தபோது – கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்திற்கு ‘ஜிகினா’ அடித்துக் கொண்டு வரும் மறுபதிப்பாகும்.
(3) பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் ஜாதி பார்ப்பனர்களுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு (EWS)
சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்னுக்குத் தள்ளப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு என்று கொண்டு வரப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின் ஆணி வேரில் ‘ஆசிட்’ ஊற்றுவதாகும்.
மீண்டும் பார்ப்பனர்களைக் கொல்லைப்புறம் வழியாக கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் கொடி கட்டி ஆள வைக்கும் சூழ்ச்சிப் பொறியாகும்.
எடுத்துக்காட்டாக 2020ஆம் ஆண்டில் ஸ்டேட் வங்கியில் எழுத்தர் தேர்வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் விவரம்:
பழங்குடி மக்களுக்கு (ST) கட் ஆஃப் மார்க் 53.75 – எஸ்.சி.க்குக் கட் ஆஃப் மார்க் 61.25 – உயர்ஜாதி பார்ப்பன ஏழைகள் என்று சொல்லப்பட்டவர்களுக்கோ கட்ஆஃப் (EWS) மார்க் வெறும் 28.5 – சூட்சமம் புரிகிறதா?
சமூகநீதியின் சல்லி வேர், ஆணி வேரை அறுத்துத் தள்ளும் ஆரியத்தின் ஆர்.எஸ்.எஸின் கொடு அரிவாள், கத்தியின் சுரணை எத்தகையது என்பது விளங்குகிறதா?
அருமைத் தோழர்களே நாம் எடுத்த காரியம் எதிலும் தோற்றதில்லை; எம்.ஜி.ஆர். கொண்டு வந்த நுழைவுத் தேர்வாகட்டும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கான ஆண்டு வருவாய் ரூ.9000 என்ற வருமான வரம்பு ஆணையாகட்டும், 50 விழுக்காட்டுக்கு மேல் இடஒதுக்கீடு தாண்டக் கூடாது என்ற உச்ச வரம்பை நிர்ணயித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நின்று 69 விழுக்காட்டைப் பாதுகாத்ததாக இருந்தாலும் – மண்டல் குழுப் பரிந்துரை அவ்வளவுதான் – ஆயிரம் அடியின்கீழ் புதைத்தாகி விட்டது என்று எக்காளம் போட்ட எதிரிகளின் ஆணவத்தை அடி சறுக்க வைத்து – இந்தியா முழுமையும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்ததும் சரி (சும்மா வரவில்லை தமிழர் தலைவர் தலைமையில் – திராவிடர் கழகத்தின் முழு முயற்சியில் 42 மாநாடுகள் 16 போராட்டங்கள்) எதிலும் நாம் தோற்றுப்பின் வாங்கியதில்லை.
இப்பொழுதும் வெற்றி பெறுவோம்! போராடுவோம்! வெற்றி கிட்டும் வரை போராடுவோம்!
இது உறுதி! உறுதி!! உறுதி!!! உயிரின்மீது ஆணை! ஆணை!!
தயாராகி விட்டீர்களா தோழர்களே!
20ஆம் தேதி கிடுகிடுக்கட்டும்! வெற்றி முழக்கத்தின் முதல் ஓசையாக ஒலிக்கட்டும்! ஒலிக்கட்டும்!!