காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம் இன்று (17.05.2025) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்காக கடந்த ஒரு மாத காலமாக காஞ்சிபுரம் நகர சாலைகளை தயார் படுத்தும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இதில் காவல்துறை , வருவாய் துறை, அறநிலையத் துறை, மற்றும் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக பல லட்சங்கள் செலவிடப்படுகிறது இந்த செலவுகள் யாரால் எப்படி செலவிடப்படுகிறது? இதனால் யாருக்கு எத்தகைய இலாபம் என யாருக்கும் தெரியாது. இத்தகைய செலவுகளும் மனிதவள வீணடிப்பும் ஆண்டுதோறும் நடந்துக் கொண்டிருக்கிறது. தேரோட்டத்திற்காக காந்தி சாலை, காமராஜர் சாலை, நெல்லுக்காரத்தெரு, செங்கழுநீரோடை வீதி, கீழ ராஜவீதி மற்றும் மேல ராஜவீதி என சுமார் ஆறு கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையின் நடுவே பொதுமக்களை விபத்திலிருந்து தடுக்கும் பொருட்டு அமைக்கப்படும் சாலைத் தடுப்புகள் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா காலத்தில் நீக்கப்படுவதும் ஒரு மாதத்திற்கு மேலாக தடுப்புகள் இன்றி வாகன ஓட்டிகள் அவரவர் விருப்பப்படி வாகனங்கள் இயக்க அனுமதித்து விட்டு பிறகு மீண்டும் சாலை நடுவே தடுப்புகள் அமைக்கப் படுவதும் வாடிக்கையாக உள்ளது இதற்கான தேவையற்ற செலவுகளாக ஆண்டுதோறும் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறதே!
காவல்துறை – காஞ்சிபுரம் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து நடைமுறைப்படுத்துவதின் காரணமாக அரசியல் கட்சிகள் மற்றும் சமுக அமைப்புக்கள் நடத்துகின்ற சிறுகூட்டங்களுக்கும் மற்றும் ஊர்வலங்களுக்கும் அனுமதி தருவதில்லை – சில நேரங்களில் நகருக்கு ஒதுக்குப் புறமாக நடத்திக் கொள்ள வற்புறுத்தப்படுகிறது. ஆனால் இத்தகைய திருவிழாக்களுக்கு அனைத்து விதமான போக்குவரத்து கட்டுப்பாடுகளும் காற்றில் பறக்கவிடப்பட்டு போக்குவரத்து விதிமீறலுக்கு காவல்துறையே உடந்தையாக இருக்கிறதே!
பத்து நாட்களுக்கு மேலாக நாள்தோறும் காலை மாலை என இரு வேளையும் சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்திற்கு சாமி ஊர்வலம் நடப்பதும் நூற்றுக்கணக்கான மனிதர்கள் இந்த நவீன கணினி யுகத்தில் தாங்கொண்ணா பாரத்தை தோளில் சுமந்து வருவதும் சப்பரத்தின் மேல் சில பார்ப்பனர்கள் ஒய்யாரமாக அமர்ந்து கொண்டு வருவதும் மனிதனை மனிதனே சுமப்பதும் வேதனையானதல்லவா? இந்த ஊர்வலத்திற்கு அனைத்து வகையான சட்டம் ஒழுங்கு வேலையையும் விட்டு விட்டு காவல் காக்கும் என சொல்லப்படுகிற கடவுளை காவல் காக்கும் பணிக்கு செல்வதால் பல லட்சங்கள் வரிப்பணத்தை வாரியிறைப்பதோடு விலைமதிப்பற்ற மனித வளம் வீணாகிறதே – யாரும் இதை கவனிக்கவில்லையே?
காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி காஞ்சிபுரம் மய்யத்தில் இருக்கும் நிரந்தர பேருந்து நிலையத்திற்கு பதிலாக அய்ந்து இடங்களில் தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வேலூரிலிருந்து வரும் பேருந்துகள் ஒலி முகமதுபேட்டை வரையிலும், சென்னையிலிருந்தும் தாம்பரத்திலிருந்தும் வரும் பேருந்துகள் பழைய ரயில் நிலையம் வரையிலும் உத்திரமேரூர் பேருந்துகள் மிலிட்டரி ரோடு வரை யிலும், வந்தவாசி வழியாக வரும் பேருந்துகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரையிலும் மட்டுமே இயக்கப் படவேண்டும் என்றும் இருசக்கர வாகனங்கள் தேர் இருப்புக்கு தகுந்தாற்போல் பாதையை திருப்பிக்கொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
வெளியூரிலிருந்து காஞ்சிபுரம் வரும் பயணிகள் நகருக்குள் பேருந்துகள் இயக்கப் படாத சூழலில் எப்படி நகரின் மற்றபகுதிகளுக்கு செல்வார்கள்? காஞ்சிபுரத்தில் உள்ள தலைமை மருத்துவமனக்கு பல்லாயிரம் மக்கள் நோயாளிகளாக வருகை தருகிறார்களே அவர்களுக்கு எப்படி காவல்துறை வழிகொடுக்கப் போகிறது? மருத்துமனைகளுக் செல்லும் பலநூறு அவசரகால (AMBULANCE) ஊர்திகள் எப்படி தலைமை மருத்துவமனைக்கும் மற்ற தனியார் மருத்துவமனைகளுக்கும் செல்லும் – காவல்துறை விளக்குமா?
இத்தனை இன்னல்களை ஏற்படுத்தும் இத்தகைய தேர்த்திருவிழாவை நடத்துவதினால் ஏற்படப்போகும் நன்மையென்ன? நடத்தாமல் இருந்தால் ஏற்படும் தீமையென்ன? கரோனா காலத்தில் தேரோட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டதே, அதனால் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் ஏதாகிலும் இருந்தால் ஆவணமாக அரசோ அல்லது காவல்துறையோ வெளியிடுமா? மக்களைத் துன்புறுத்தி இப்படியான தேரோட்டங்கள் தேவையா?
நாம் கடவுளை வணங்குவதை கேள்வி கேட்கவில்லை; மாறாக காலமாற்றத்திற்கு ஏற்ப வாகனங்கள் மற்றும் மக்கள் வாழ்க்கைத் தர மேம்பாட்டிற்கு ஏற்ப சில மாறுதல்களை கடவுள், பக்தி மற்றும் வழிபடுதல் முறைகளை மாற்றி அமைத்து பலதரப்பட்ட மக்களும் பாதித்திடாத வண்ணம் கோவில்களுக்குள்ளேயே பக்தர்களை அனுமதித்து வழிபட வைப்பது எல்லா வகையிலும் ஏற்புடையதாக இருக்கும்!
மக்கள் நலன் கருதி எழுதியுள்ளோம்.
– அ.வெ. முரளி
காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகம்