செஞ்சி பகுதியில் உள்ள 9 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் +2 பொதுத் தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். அந்த மாணவர்கள் மற்றும் பள்ளிகளுக்குப் பாராட்டுக்கள் குவிந்தன. ஆனால், “செஞ்சி அரசுப் பெண்கள் பள்ளியில் வேதியியல் தேர்வெழுதிய 167 மாணவர்கள் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளதும், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளதும் வியப்போடு அதிர்ச்சியை அளிக்கிறது” என அறிக்கை வெளியிட்டுள்ளார் பா.ஜ.க.-வின் மாநிலத் துணைத் தலைவரான நாராயணன் திருப்பதி.
“தேர்வுக்கு முன்னரே கேள்வித்தாள்களை மாணவர்களிடம் அளித்திருந்தால்கூட 167 மாணவர்கள் நூறு மதிப்பெண்கள் பெறுவதற்கான வாய்ப்பே இல்லை. விடைகளை முன்னரே தயார் செய்து மாணவர்களிடத்தில் கொடுத்து விட்டனரா? அல்லது விடைத்தாள்களே மாற்றி வைக்கப்பட்டனவா?” என்று வாய்க்கு வந்தபடி வசை பாடியிருக்கிறார்.
பிற்படுத்தப்பட்ட-தாழ்த்தப்பட்ட மாணவர் களின் தகுதி- திறமை குறித்து காலம்காலமாக வைக்கப்படும் பார்ப்பனிய மனநிலை விமர் சனங்கள்தான் இவை. நாராயணன் திருப்பதி குற்றச் சாட்டில் கடுகளவும் உண்மை இல்லை என்பதை கல்வி அதிகாரிகள் விளக்கிவிட்டனர்.
ஒன்றிய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஓ.பி.சி. 27 விழுக்காடு. எஸ்.சி. பிரிவினருக்கு 15 விழுக்காடு, எஸ்.டி. பிரிவினருக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற விதிகளைப் புறந்தள்ளி, அய்.அய்.டி மற்றும் அய்.அய்.எம்.மில் 80 விழுக்காடு ஆசிரியப் பணியிடங்கள் முன்னேறிய சமூகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என ஆர்.டி.அய். தகவல்கள் அம்பலப்படுத்தின. இது எப்படி சாத்தியம் என்று நாராயணன் திருப்பதி கேட்கவில்லை.
மருத்துவ உயர் படிப்புக்குக் கல்விக் கட்டணமாக ரூ.25 லட்சம் முதல் ரூ.90 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ள சில தனியார் கல்லூரிகளில், இ.டபிள்யூ.எஸ். (EWS) ஒதுக்கீட்டில், கடந்த ஆண்டு 143 பேர் சேர்ந்துள்ளனர். போலிச் சான்றிதழ் பெற்று, 10 விழுக்காடு இடஒதுக்கீட்டை மோசடியாக இவர்கள் பெற்றார்களா என்று நாராயணன் திருப்பதி அப்போதும் கேட்கவில்லை. ஆனால், இப்போது ஏழை மாணவர்களின் மதிப்பெண்களை ஆரிய ஆராய்ச்சி செய்கிறார். அரசுப்பள்ளி மாணவர்களைப் பற்றிய பாஜக-வின் மோசமான மனநிலைதான் இது என்று கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
நன்றி: ‘முரசொலி’ 16.05.2025