கும்பமேளாவிற்கு கொடுத்த முக்கியத்துவத்தை உத்தரப் பிரதேச அரசு கல்விக்குக் கொடுக்கவில்லை என்ற பரிதாப நிலையை என்ன சொல்வது!
12 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம் மற்றும் சிபிஎஸ்இ தேர்ச்சி விகிதத்திலும் மிகவும் மோசமான நிலை – 100பேரில் 7 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்ற அவலம் அங்கு நிகழ்ந்துள்ளது.
அலகாபாத் என்ற பெயர் கொண்ட இந்த நகரை பிரயாக்ராஜ் என்று சாமியார் முதலமைச்சர் ஆதித்யநாத் மாற்றம்செய்ததுதான் பெரிய சா(வே)தனை!
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலே – 2025 ஆம் ஆண்டு ஜனவரி துவங்கி பிப்ரவரி 26 ஆம் தேதி வரையிலான கும்பமேளாவிற்கான ஏற்பாடுகள் நாடாளுமன்றத்திலும் உத்தரப்பிரதேச சட்டமன்றத்திலும் அமர்க்களப்பட்டன.
ரூ.1700 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பரபரப்பாக வேலைகள் நடந்தது.
ஒட்டுமொத்த நிர்வாகமும் கும்பமேளா தயாரிப்பில் இறங்கியது. அங்குள்ள பள்ளிக்கல்வித்துறையும் சேர்ந்து ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக் கல்லூரி அலுவல் பணியாளர்களுக்கும் கும்பமேளா ஸ்லோகன்(வசனம்) எழுதும் வேலை தரப்பட்டது. நல்ல வசனம் எழுதினால் அதற்கு ஏற்ப பரிசுகளாம்!
விளைவு – இந்த ஆண்டு உயர்கல்வி தேர்ச்சி விகிதம் மிக மிக மோசமாக தலைக்குப்புறக் கவிழ்ந்தது.
பிரயாக்ராஜ் மண்டலத்தில் (Prayagraj Region) சிபிஎஸ்இ (CBSE) தேர்ச்சி விகிதம் நாட்டிலேயே மிகவும் பின் தங்கி உள்ளது.
பிரயாக்ராஜ் மண்டலம் கடந்த நான்கு ஆண்டுகளாக (2022-2025) 12-ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் இந்தியாவில் உள்ள 17 மண்டலங்களில் கடைசி இடத்தைப் பிடித்திருக்கிறது.
தேசிய சராசரியான 88.39 விழுக்காட்டை விட மிக மிகக் குறைவு. 10-ஆம் வகுப்பு தேர்ச்சி குறைந்து 15-ஆவது இடத்திற்குச் சென்று விட்டது
பிரயாக்ராஜ் மண்டலத்தில் உள்ள பல அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் (நூலகங்கள், ஆய்வகங்கள், தொழில்நுட்ப உபகரணங்கள்) எதுவுமே இல்லை.
2020-ஆம் ஆண்டு தரவுகளின்படி, இம்மண்டலத்தில் அரசு பள்ளிகளின் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 63.73 விழுக்காடு ஆக இருந்தது, இது தனியார் பள்ளிகளின் 88.90 விழுக்காட்டை விட மிகவும் குறைவு.
தகுதியான ஆசிரியர்கள் மற்றும் பயிற்சி பெற்ற கல்வியாளர்களின் பற்றாக்குறை இம்மண்டலத்தில் கல்வியின் தரத்தைப் பாதிக்கிறது. இது மாணவர்களின் கற்றல் திறனைக் குறைக்கிறது.
பிரயாக்ராஜ் மண்டலத்தில் உள்ள பல மாவட்டங்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கியவை. இதனால், மாணவர்கள் தனியார் பயிற்சி மய்யங்களையோ அல்லது கூடுதல் கல்வி ஆதாரங்களையோ பயன்படுத்த முடிவதில்லை.
இம்மண்டலத்தில் பல மாணவர்கள் முதல் தலைமுறையாக பள்ளிக்குச் செல்பவர்களாக உள்ளனர்.
2023-2024 கல்வியாண்டு முதல், புதிய கல்வித்திட்டத்தின் கீழ் சிபிஎஸ்இ தேர்வுகளில் 40-50 விழுக்காடு கேள்விகள் திறன் அடிப்படையிலானவைகளாக மாற்றப்பட்டுள்ளன. இந்த மாற்றத்திற்கு ஏற்ப மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் போதுமான பயிற்சி இல்லை.
புதிய தேசிய கல்விக் கொள்கை (NEP 2020) அறிமுகப்படுத்திய மாற்றங்களுக்கு இம்மண்டலத்தின் பள்ளிகள் முழுமையாகத் தயாராகவில்லை. இது மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை பாதித்துள்ளது.
குறிப்பாக கும்பமேளா காலத்தில் பிரயாக்ராஜ் மண்டலத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. ஆசிரியர்கள் கும்பமேளா பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்,
குறிப்பாக ஜனவரி முதல் வாரம் முதல் வட இந்தியாவில் பள்ளி இறுதித்தேர்வுகளுக்கான தயாரிப்பு துவங்குவதால் கும்பமேளா மாணவர்களின் கற்றல்திறனைப் பெரிதும் பாதித்தது.
பிரயாக்ராஜ் மண்டலத்தில் உள்ள பெரும்பாலான மாணவர்கள் ஆங்கிலத்தில் திறன் பெறுவதற்கு வாய்ப்பே இல்லை. சிபிஎஸ்இ தேர்வுகள் ஆங்கிலத்தில் நடைபெறுவதால், மொழி ஒரு தடையாக உள்ளது.
உத்தரப் பிரதேச பிஜேபி அரசால் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதி, மாநிலத்தின் பரந்த மக்கள் தொகை மற்றும் பரப்பளவிற்கு ஏற்ப போதுமானதாக இல்லை. இது கல்வி மேம்பாட்டைத் தடுக்கிறது.
பல மாநிலங்களில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மாநிலக் கல்வித்துறையை அப்படியே சிபிஎஸ்இ பாடத்திட்டத்தோடு சேர்த்துவிட்டதால் பீகார், உத்தரப் பிரதேசம் போன்ற மிகவும் பின் தங்கிய மாநிலங்களில் மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ராமர் கோயில் கட்டுவதும், கும்பமேளா நடத்துவதும்தான் பிஜேபிக்கு முக்கியமே தவிர, கல்வி என்பது எல்லாம் அவர்கள் கண்ணோட்டத்தில் வெறும் கழிசடைதானே!