சென்னை, மே 17 தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக, நீதிமன்றத்திற்கு குடியரசுத் தலைவர் கேள்விகளை எழுப்பியிருந்தார். இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி சந்துரு கூறியுள்ளார்.
கடந்த ஏப்.8 ஆம் தேதி உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. ஆளுநர்களின் அதிகார வரம்பு, சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்கான ஆளுநர்/குடியரசுத் தலைவருக்கான கால நிர்ணயம் உள்ளிட்டவை குறித்து தமிழ்நாடு அரசு தொடுத்திருந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியிருந்தது.
இந்த தீர்ப்பு மாநில அரசால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பாஜகவினர் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தனர். இந்நிலையில்தான் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 14 கேள்விகளை உச்சநீதிமன்றத்திற்கு எழுப்பியிருந்தார். ஏப்.8 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்கில் வாதங்களின்போது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜராகி இருந்த வழக்குரைஞர்கள் என்ன வாதங்களை, கேள்விகளை முன் வைத்திருந்தார்களோ, அதையேத்தான் குடியரசுத் தலைவர் முன்வைத்திருக்கிறார் என்று விமர்ச னங்கள் எழுந்தன.
ஆளுநர்கள், குடியரசுத் தலைவர் உள்ளிட்டோருக்கான அதிகாரங்கள் என்ன என்பது குறித்து இந்திய அரசமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதன் மீதான விளக்கமாகத்தான் இந்தத் தீர்ப்பை பார்ப்பதாக, தீர்ப்பை வர வேற்பவர்கள் கூறியிருக்கிறார்கள். அதே நேரம், அரசமைப்புச் சட்டத்தில் ஆளுநர்கள்/குடியரசுத் தலைவருக்கு, ஒரு மசோதாவின் மீது முடிவெடுக்கும் கால வரம்பை ஏற்கெனவே குறிப்பிடாமல் இருந்திருக்கிறது எனில், இனி அதனை குறிப்பிடவே கூடாது என்று அர்த்தம் கிடையாது. அந்த வகையில் தீர்ப்பை வரவேற்பதாக அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஆனால், குடியரசுத் தலைவரின் கேள்விக்கு நீதிமன்றம் பதிலளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலதுசாரிகள் வலியுறுத்தி வருகின்ற னர். இப்படி இருக்கையில், இந்த கேள்விகளுக்கு நீதிமன்றம் பதில ளிக்க வேண்டியதில்லை என்று மேனாள் நீதிபதி சந்துரு கூறியுள்ளார்.
‘‘தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக குடியரசுத் தலைவர் கேட்டிருக்கும் கேள்விகளைப் போல கடந்த காலங்களிலும் பல சந்தர்ப்பங்களில் இதுபோன்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. அரசமைப்புச் சட்டத்தின் 143 ஆவது பிரிவின் பிரிவு 1-இன் கீழ் உச்சநீதிமன்றத்தின் கருத்தைப் பெற குடியரசுத் தலைவர் தனது அதிகாரங்களைப் பயன்படுத்தியிருக்கிறார். அதே பிரிவில் உச்சநீதிமன்றமும் தனது கருத்தை குடியரசுத் தலைவரிடம் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்பதும் இருக்கிறது. எனவே, நீதிமன்றம் பதிலளிக்க தேவையில்லை’’ என்று கூறியுள்ளார்.