கடந்த 2019-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று உறுதி செய்த கோவை மகளிர் நீதிமன்றம், அவர்கள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். (கூடுதலாக 25 லட்ச ரூபாய் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ஆவன செய்துள்ளார்.)
இந்த பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருமே அதிமுக வைச் சார்ந்தவர்களாக இருந்தனர்
இந்த வழக்கில் மொத்தம் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் பெயர்கள் கைதுசெய்யப்பட்ட ஆண்டு.
திருநாவுக்கரசு – 2019
சபரிராஜன் (ரிஸ்வந்த்) – 2019
சதீஷ் – 2019
வசந்தகுமார் – 2019
மணிவண்ணன் (மணி) – 2019
அதிமுகவில் முக்கிய பதவியில் இருந்த காரணத்தால் பெரும் போராட்டத்திற்குப் பிறகு கைது செய்யப்பட்டவர்கள்.
ஹேரோனிமோஸ் பால் (ஹேரோன் பால்) – 2021
பாபு (பைக் பாபு) – 2021
அருளானந்தம் – 2021
அருண்குமார் – 2021
ஹேரோனிமோஸ் பால் (Hieronimus Paul) இவர் அதிமுக சிறுபான்மையினர் அணியில் நிர்வாகி.
அருளானந்தம்: இவர் அதிமுக மாவட்ட மாணவரணி நிர்வாகி.
பொதுமக்கள் மற்றும் மகளிர் அமைப்புகள் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் கடுமையான போராட்டத்திற்குப் பின்பே அதிமுக முக்கிய நிர்வாகிகளான பால் மற்றும் அருளானந்தம் 2021 ஆம் ஆண்டு கைதானார்கள். அதாவது குற்றம் நடந்து 2 ஆண்டுகள் கழித்து என்பது குறிப்பிடத்தக்கது
தீர்ப்பின் முழு விவரம்
தீர்ப்பின் விவரங்கள் குறித்துப் பேசிய அரசு சிபிஅய் வழக்குரைஞர் சுரேந்திரமோகன், “குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 376 D (கூட்டுப் பாலியல் வன்கொடுமை) மற்றும் 376 (2)(N) (தொடர்ந்து பாலியல் குற்றத்தில் ஈடுபடுவது) ஆகிய பிரிவுகளின் கீழ் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது, மற்ற பிரிவுகளின் கீழ் 10 ஆண்டுகள், 7 ஆண்டுகள், மூன்று ஆண்டுகள் என தனித்தனியாகவும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
நியாயமான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது. வழக்கின் தன்மையைப் பொறுத்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக நீதிபதி குறிப்பிட்டார். வாய்மொழி சாட்சிகள், மின்னணு சாட்சிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தோம். விசாரணையில் சேகரிக்கப்பட்ட பெரும்பாலான ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளோம். குற்றவாளிகள் மேல்முறையீடு சென்றாலும் இந்த தண்டனை நிலைநிறுத்தப்படும் என நான் நம்புகிறேன்” என அவர் தெரிவித்தார்.
“இந்த வழக்கில் விசாரிக்கப்பட்ட 48 பேரும் இறுதிவரை பிறழ்சாட்சிகளாக மாறவில்லை. வழக்கில் அழிக்கப்பட்ட ஆதாரங்கள் தொழில்நுட்ப நிபுணர்கள் மூலம் மீட்கப்பட்டன. அறிவியல் பூர்வ அடையாளம் காணுதல் உள்ளிட்ட பலவற்றுக்கு வழக்கில் தொழில்நுட்பம் உறுதுணையாக இருந்தது. வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் 8 பேர் விசாரிக்கப்பட்டனர்” என்றும் அவர் கூறினார்.
முதல் குற்றவாளி சபரி ராஜனுக்கு ரூ.40 ஆயிரம் அபராதம், 4 ஆயுள் தண்டனை.
இரண்டாவது குற்றவாளி திருநாவுக்கரசுக்கு ரூ.30,500 அபராதம், 5 ஆயுள் தண்டனை.
மூன்றாவது குற்றவாளி சதீஷூக்கு ரூ.18,500 அபராதம், 3 ஆயுள் தண்டனை.
நான்காவது குற்றவாளி வசந்தகுமாருக்கு ரூ.13,500 அபராதம், 2 ஆயுள் தண்டனை
அய்ந்தாவது குற்றவாளி மணிவண்ணனுக்கு ரூ.18 ஆயிரம் அபராதம், 5 ஆயுள் தண்டனை
ஆறாவது குற்றவாளி பாபுவுக்கு ரூ.10,500 அபராதம், ஒரு ஆயுள் தண்டனை
ஏழாவது குற்றவாளி ஹேரன்பாலுக்கு ரூ.14 ஆயிரம் அபராதம், 3 ஆயுள் தண்டனை
எட்டாவது குற்றவாளி அருளானந்தத்துக்கு ரூ.5500 அபராதம், ஒரு ஆயுள் தண்டனை
ஒன்பதாவது குற்றவாளி அருண்குமாருக்கு ரூ.5500 அபராதம், ஒரு ஆயுள் தண்டனை
வழக்கு கடந்து வந்த பாதை
பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் கொடுத்த நாள்: 2019 பிப்ரவரி 12
முதல் தகவல் அறிக்கை பதியப்பட்ட நாள்: 2019 பிப்ரவரி 24. அதன் அடிப்படையில் சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
திருநாவுக்கரசு என்பவரைப் போலீசார் தேடி வந்த நிலையில் அவர் தலைமறைவானார். தலைமறைவாக இருந்த அவர், ”தனக்கும் இந்த வழக்குக்கும் தொடர்பு இல்லை” என வீடியோ வெளியிட்டார். 2019 மார்ச் 5 அன்று அவர் கைது செய்யப்பட்டார்.
திருநாவுக்கரசின் அய்போனில் நுாற்றுக்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் பதியப்பட்டிருப்பதைப் போலீசார் கண்டுபிடித்தனர். அதுவே இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாக, திருப்புமுனையாக அமைந்தது.
வழக்கு பதியப்பட்ட ஒரு மாதத்துக்குள் அதாவது 2019 மார்ச் மாதத்தில் சிபிசிஅய்டிக்கு மாற்றப்பட்டது.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபரான சபரிராஜன் வீட்டில் கைப்பற்றப்பட்ட லேப் டாப் இந்த வழக்கின் மிக முக்கியமான மற்றொரு ஆதார ஆவணமானது.
2019 ஏப்ரல் 25 அன்று இந்த வழக்கு சிபிஅய்க்கு மாற்றப்பட்டது. செல்போன்கள், லேப்டாப் போன்றவற்றில் இருந்து கைப்பற்றப்பட்ட வீடியோக்கள் மின்னணு ஆதார ஆவணங்களாக பதிவு செய்யப்பட்டன.
பாதிக்கப்பட்ட 20 பெண்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், முதற்கட்டமாக கைதான சபரிராஜன், சதீஷ்குமார், வசந்தராஜன், திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகியோருக்கு எதிராக 2019 மே 24 அன்று முதல்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
சிபிஅய் வசம் வழக்கு வந்தபின்பு, இந்த வழக்கில் அருளானந்தம், ஹெரன்பால் மற்றும் பாபு ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டு, அரசியல் அரங்கில் பரபரப்பான பேசுபொருளானது.
இந்த 3 குற்றவாளிகள் மீதும் 2021 பிப்ரவரி 22 அன்று இரண்டாவது கூடுதல் குற்றப்பத்திரிகை, கோவை மகளிர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்பதாவது நபராக அருண்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு, அவர் மீதான குற்றப்பத்திரிக்கை, 2021 ஆகஸ்ட் 16 அன்று, கூடுதல் குற்றப்பத்திரிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் 100க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அவர்களில் 48 பேர் மட்டுமே, சிபிஅய் அதிகாரிகளால் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர்படுத்தப்பட்டனர்.
பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவானபோது, காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திர பிரகாஷ் முதல் விசாரணை அதிகாரியாக இருந்தார். சிபிசிஅய்டியிடம் மாற்றப்பட்ட பின்பு, எஸ்பி நிஷா பார்த்திபன் விசாரணை நடத்தினார். அதன்பின் சிபிஅய் அதிகாரிகள் விஜய் வைஷ்ணவி, ஆய்வாளர் பச்சையம்மாள் ஆகியோர் விசாரணை நடத்தியுள்ளனர்.
இவ்வழக்கில் எலக்ட்ரானிக் பொருட்களே முக்கிய ஆதாரங்களாக சேர்க்கப்பட்டுள்ளன. அய்போனில் எடுக்கப்பட்ட வீடியோ, ஒளிப்படங்கள் ஆகியவற்றை வைத்து குற்றம் நடந்த தேதி, நேரம் ஆகியவை எடுக்கப்பட்டுள்ளன.
வாட்ஸ்ஆப் குழுவைத் தொடங்கி அதில் ஆபாச வீடியோக்களை பகிர்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் புகார் கொடுக்க அச்சப்பட்டுள்ளனர். இவர்களை அச்சுறுத்துவதற்காக சில ஆபாச வீடியோக்களைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். விசாரணையின்போது அவை நீக்கப்பட்டன.
இந்த வழக்கின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, வழக்கு பதியப்பட்ட நாளிலிருந்து குற்றம் சாட்டப்பட்ட யாருக்கும் பிணை வழங்கப்படவில்லை.
பாதிக்கப்பட்ட 8 பெண்களில் ஏழு பேர் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகி சாட்சியம் கூறினர். இவர்களிடம் நீதிமன்ற அறையில் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது.
குற்றப்பத்திரிக்கைகளில் இவர்கள் மீது 76 விதமான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. அரசு தரப்பில் 205 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 12 ஆவணங்கள் குறித்துத் தரப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர்த்து நீதிமன்றம் தானாக 11 ஆவணங்களை எடுத்துக் கொண்டுள்ளது. வழக்கு விசாரணையில் கைப்பற்றப்பட்ட செல்போன்கள், லேப்டாப், ஹார்டு டிஸ்க் உள்ளிட்ட முக்கியமான 30 பொருட்கள் ஆதார ஆவணமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் இறுதிவரை பிறழ்சாட்சியாக மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் குற்றப்பத்திரிகை துவங்கி இறுதிவரை மொத்தம் 1500 பக்கங்களில் குற்றப்பத்திரிக்கையை சிபிஅய் தாக்கல் செய்துள்ளது. சாட்சிகளிடம் 236 கேள்விகள் கேட்கப்பட்டு, அவை பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கை கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி, தொடர்ந்து 5 ஆண்டுகளாக விசாரித்து வருகிறார். இடையில் அவருக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டு, உயர் நீதிமன்ற உத்தரவால் அது தடுத்து நிறுத்தப்பட்டது.
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதில் மிகவும் முக்கியமான அதிர்ச்சியானது என்னவென்றால் இந்த வழக்கு தொடர்பாக விசாரித்துகொண்டு இருக்கும்போது கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.பி.பாண்டியராஜன் வழக்கு தொடர்பாக 25.03.2019 அன்று பேசும் போது பாதிக்கப்பட்டப் பெண்களின் பெயரை வெளியிட்டார். பாலியல் துன்புறுத்தலில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிடக் கூடாது என நீதிமன்றம் வலியுறுத்தியிருப்பதைக் அறிந்திருந்தும் அந்த விசாரணை அதிகாரியே பெண்களின் பெயரை வெளியிடுவது இந்த வழக்கில் மேலும் பல பெண்கள் முன்வந்து புகார் கொடுக்கக் கூடாது என்பதற்காகத்தான் இதுவும் ஒருவித மறைமுக மிரட்டல் ஆகும்.
அரசியல் தலையீட்டால் தான் ஒரு காவல்துறை அதிகாரி இப்படி பேசி இருக்கிறார் என்று பாலியல்வன்கொடுமைக்கு எதிரான முறையீட்டுக் குழுவின் தலைவர் வழக்குரைஞர் அஜிதா கூறியிருந்தார்.
பிரிஜ்வல் ரேவண்ணா
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது இந்தியாவை அதிரவைத்த மற்றோரு அதிர்ச்சி நிகழ்வு பிரிஜ்வல் ரேவண்ணா பாலியல் வன்கொடுமை வழக்கு
மண்டியா மக்களவைத் தொகுதியின் மேனாள் உறுப்பினரும், ஜனதா தளம் (மதச்சார்பற்ற) கட்சியின் தலைவருமான ஹெச்.டி. தேவெகவுடாவின் பேரனும், ஹெச்.டி. ரேவண்ணாவின் மகனுமான பிரிஜ்வல் ரேவண்ணா தனது தாயார் வயதுடைய பெண்கள் முதல் தனது பேத்தி வயதுடைய 7 ஆம் வகுப்பு சிறுமிவரை பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்கொடுமை செய்துள்ளார்.
சரியாக நாடாளுமன்ற தேர்தலின் போது இவரது மோசமான பாலியல் வன்கொடுமைகள் அடங்கிய காணொளிகள் ஆயிரக்கணக்கில் பொதுவெளியில் கிடைத்தது.
இதனை அடுத்து பல பெண்கள் பிரிஜ்வல் ரேவண்ணாமீது பாலியல்வன்கொடுமை புகார் அளித்தனர்
பிரிஜ்வல் ரேவண்ணா மீது சுமத்தப்பட்டுள்ள முக்கியக் குற்றச்சாட்டுகள்
பல பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்தது. இந்தச் செயல்களை வீடியோ எடுத்தது. வீடியோக்களைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்டி தொடர்ந்து பாலியல் தேவைகளுக்குப் பயன்படுத்தியது. கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது. போன்றவை ஆகும்
வீடியோக்கள் வெளியானதும் பிரிஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பிச் சென்றார். பாதிக்கப்பட்டவர்களின் புகார்களின் அடிப்படையில் கர்நாடக அரசு ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்தது. அவரைக் கைது செய்யத் தேடிய நிலையில், அவருக்கு எதிராகப் ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. மீண்டும் மோடி தலைமையிலான அரசு வெற்றி பெற்ற பிறகு இந்தியா திரும்பிய பிரிஜ்வல் ரேவண்ணா மே 31, 2024 அன்று பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கைகள் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளன. விரிவான விசாரணையை நடத்தி, அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் மற்றும் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. பிரிஜ்வல் ரேவண்ணா தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளார். அவரது பிணை மனுக்கள் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட மற்றவர்கள்
இந்த வழக்கில் பிரிஜ்வல் ரேவண்ணாவின் தந்தை ஹெச்.டி. ரேவண்ணா மீதும் கடத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அவரும் கைது செய்யப்பட்டு பின்னர் பினையில் விடுவிக்கப்பட்டார்.
விஜய என்ற கன்னட நாளிதழ் செய்தியின் படி இவர் பல ஆண்டுகளாக பெண்களை சீரழித்து வந்ததாகவும் 2018 முதல் 2023 வரை ஆட்சியில் இருந்த பாஜக ஜனதாதளக் கூட்டணி அரசில் இவரது பாலியல் வன்கொடுமை குறித்து புகார் அளித்த போது புகார் அளித்தவர்கள் மிரட்டப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு அங்கு பசவராஜ் தலைமையிலான பாஜக அரசு தோல்வி அடைந்து கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று சித்தராமையா தலைமையில் கர்நாடகாவில் ஆட்சி அமைந்தது.
2024 ஆம் ஆண்டு ஜனவரி முதலே இவர் மீதான புகார்கள் குறித்து அரசுக்கு தெரிவிக்க உத்தரவிட்டது. சாட்சியாக இருந்த சுமார் 2500 க்கும் மேற்பட்ட காணொலிகள் அரசிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பல நூறு பிரதிகளாக எடுக்கப்பட்டு அவற்றை சிலர் பொதுவெளியில் வெளியிடவே பிரிஜ்வல் ரேவண்ணா தப்பி ஓடிவிட்டார்.
அப்படி ஓடிய அவர் மோடி மீண்டும் வெற்றி பெற்று அவரே பிரதமராக பதவியில் தொடர்கிறார் என்ற செய்தி வெளியான பிறகே ஜெர்மனியில் இருந்து இந்தியா வந்தார்.
ஒருவேளை கருநாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்படாமல் இருந்தால் மேலும் பல பெண்களின் வாழ்க்கை சீரழிந்திருக்கும்.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த கட்சிகள் தங்கள் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் தலைவர்கள் பாலியல் வழக்கில் சிக்கினால் அவர்களைக் காப்பாற்ற எந்த விதத்திலும் சட்டத்தை வளைக்க அதிகாரத்தைப் பயன்படுத்த தயாராக இருப்பார்கள் என்பதற்கும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசு அமைந்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை பாயும் என்பதற்கு பொள்ளாச்சி வன்கொடுமை மற்றும் ஹசன் தொகுதி மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ்வல் ரேவண்ணா இருவருமே எடுத்துக்காட்டாக உள்ளனர்.