தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்துவமான புரட்சியை செய்தவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். தந்தை பெரியாரின் சுயமரியாதை கொள்கைகளை கவிதை வடிவில் வடித்து நாடெங்கும் பரப்பி அதன் மூலம் ஒரு புத்துணர்ச்சியை உருவாக்கிய ஒப்பற்ற மறுமலர்ச்சி கவிஞர்.
தமிழும் திராவிடமும் ஒன்றுதான். சொற்கள் வேறே தவிர, நம்முடைய நோக்கம் ஒன்றுதான் என்பதை புரட்சிக் கவிஞர் நமக்கு குறித்து காட்டுவதை அகத்தியன் விட்ட புதுக்கரடி, நல்லமுத்துவின் கதை என்ற சிறிய நூலில் மிக சிறப்பாக அடையாளப்படுத்துவதை பாருங்கள்.
“தமிழகத்தை – திராவிட நாட்டை தம்வழிப் படுத்த முதன் முதல் தமிழகத்தை அடைந்த ஆரியர் கூட்டத்தின் தலைமைப்பாதிரி தான் அகத்தியன்” என்று புரட்சிக்கவிஞர் தமது முன்னுரையில் எழுதி இருக்கிறார்.
“நீ யார் – உன் நிலை என்ன? நீ என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்விகளுக்கு ஏற்ற விடை தெரிதல் வேண்டுமானால் திராவிடர் கழகத்தில் சேர வேண்டும்? தமிழகத்தில் – திராவிடத்தில் பிறந்தோன் மடையனாய் இருப்பதற்கு அவன் திராவிடர் கழகம் சேராமல் இருப்பது தான் காரணம் என்பதை நல்ல முத்துக்கதை முன்னுரையில் புரட்சிக் கவிஞர் பதிவு செய்திருக்கிறார்.
“பழைய திராவிடம் செழுமைமிக்கது, வழுவா அரசியல் வாய்ப்பும் பெற்றது
செந்தமிழ் இலக்கண சிறப்பு இருந்தது வையக வானில் மாற்றி பெற்றிருந்தது
செய்யும் தொழில்கள் சிறப்பிட்டு இருந்தன ஓவியம் தருணரும் பாவியம் புனைவரும்
ஆடல் பாடல் வல்லுநர் அனைவரும் திராவிடர் தமக்கு பெரும் புகழ் சேர்த்தனர்
ஒன்றில்லை திராவிட நாட்டில் இந்த நிலையில் வந்தான் அகத்தியன்.
அகத்தியர் குள்ளன் ஆரியர் கொள்கையை புகுத்தினான்
செந்தமிழ் பொன்னாடதனில்!”
என்று அகத்தியன் வருகையை சிறப்பாக இந்நூலில் பதிவிட்டு இருக்கிறார்.
தமிழ் இயக்கம் தன்மான உணர்ச்சியை வீடு கொள் உணர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய சிறு நூல் அவசியம் இந்நூலை ஒரு முறைக்கு பலமுறை படிக்க வேண்டும் தோழர்களே. ஓர் கூட்டம் கோவிலில் பிற மொழி கூச்சலை தடுக்க ஏன் முயலலாகாது. ஒரு குழுவினர் தெரு தோறும் சென்று பிறமொழி விளம்பரப் பலகையை மாற்றி அமைக்கச் சொல்லி ஏன் வற்புறுத்தல் ஆகாது மற்றும் பல வகையிலும் கிளர்ச்சி செய்யும் தமிழ் விடுபடும் தமிழ் நாடு விடுபடும் எவ்வினையினும் மிகுதன்றோ என்னால் இன்றியமையாத நல்வினை என்று தமிழ் இயக்க நூலில் முன்னுரையில் புரட்சிக் கவிஞர் நமக்கெல்லாம் புரிய வைக்கிறார்.
நூலின் தொடக்கத்தில்
” கரும்புதந்த தீஞ்சாறே, கனிதந்த நறுஞ்சுளையே, கவின்செய் முல்லை
அரும்புதந்த வெண்ணகையே அணிதந்த செந்தமிழே அன்பே, கட்டி
இரும்புதந்த நெஞ்சுடையார் துறைதோறும் நின்னெழிலை ஈட ழித்து
வரும்புதுமை நினைக்கையிலே நெஞ்சுபதைக் கும்சொல்ல வாய்ப தைக்கும்.”
என்றும் எழுதி மகிழ்கிறார்.
எடுத்துமகிழ் இளங்குழந்தாய், இசைத்துமகிழ் நல்யாழே, இங்குள் ளோர்வாய்
மடுத்துமகிழ் நறுந்தேனே, வரைந்துமகிழ் ஓவியமே, அன்பே, வன்பு
தொடுத்துமகிழ் நெஞ்சுடையார் துறைதோறும் நின்னெழிலைத் தோன்றா வண்ணம்
தடுத்துவரல் நினைக்கையிலே நெஞ்சுபதைக் கும்சாற்ற வாய்ப தைக்கும்.
என்றும்,
பண்டுவந்த செழும்பொருளே, பாடர்அடர்ந்த இருட்கடலில் படிந்த மக்கள்
கண்டுவந்த திருவிளக்கே, களிப்பருளும் செந்தமிழே, அன்பே, வாழ்வில்
தொண்டுவந்த நெஞ்சுடையார் துறைதோறும் நின்னெழிலைத் துளிர்க்கா வண்ணம்
உண்டுவரல் நினைக்கையிலே உளம்பதைக்கும் சொல்வதெனில் வாய்ப தைக்கும்.
என்கிறார்.
உடலியக்கும் நல்லுயிரே, உயிரியக்கும் நுண்கலையே, மக்கள் வாழ்வாம்
கடலியக்கும் சுவைப்பாட்டே, கண்ணான செந்தமிழே, அன்பே, நாட்டில்
கெடலியக்கும் நெஞ்சுடையார் துறைதோறும் நின்னெழிலைக் கெடுக்கப் பாடு
படல்தன்னை நினைக்கையிலே நெஞ்சுபதைக் கும்பகர வாய்ப் தைக்கும்.
என்று தமிழை நெஞ்சார வாயார சிறப்பித்து பாடுகிறார்.
குடும்பம் நடத்தக்கூடிய மக்களை அழைக்கிறார் “இல்லறத்தை பேணும் மற்ற யாவருமே உணர்வற்றுப் போனாரோ பெருவாழ்வுக்கோர் ஏணி பெற்றும் ஏறாத தமிழர் உயிர் வாழ்வதில் இரத்தல் நன்றே” என்று தமது உணர்ச்சியால் உந்தப்படுகிறார்.
வணிகர்களை, இல்லறம் பேணுவோரை, அரசியல் சீர் வாய்க்கப் பெற்றோரை, அறத்தலைவரை, அறநிலைய காப்பாளரை, கணக்காயரை, இசை பாடல் ஆக்குபவரை, சொற்பொழிவாளரை, அச்சகத்தாரை, அரும் பொருள் உடையாரை, இளைஞர்களை, மாணவர்களை, எழுத்தாளர்களை, திரைப்படம் தயாரிப்பவர்களை, தங்கள் தங்கள் கடமை என்ன என்பதை மிகச் சிறப்பாக உணர்வுபூர்வமாக தூண்டுகிறார் தமிழ் இயக்கத்தில்!
தொண்டு செய்வாய் தமிழுக்கு துறை தோறும் துறைதோறும் துடித்தெழுந்தே என்று வேண்டுகோள் வைக்கிறார்!
வாணிகர், தம் முகவரியை வரைகின்ற பலகையில், ஆங்கிலமா வேண்டும்?
‘மாணுயர்ந்த செந்தமிழால் வரைக’ என அன்னவர்க்குச் சொல்ல வேண்டும்!
ஆணிவிற்போன் முதலாக அணிவிற்போன் ஈறாக அனைவர் போக்கும்
நாணமற்ற தல்லாமல் நந்தமிழின் நலங்காக்கும் செய்கையாமோ?
உணவுதரு விடுதிதனைக் ‘கிளப்’பெனவேண்டும் போலும்! உயர்ந்த பட்டுத்
துணிக்கடைக்கு ‘சில்குஷாப்’ எனும்பலகை தொங்குவதால் சிறப்புப் போலும்!
மணக்கவரும் தென்றலிலே குளிராஇல்லை? தோப்பில் நிழலா இல்லை?
தணிப்பரிதாம் துன்பமிது! தமிழகத்தின் தமிழ்த் தெருவில் தமிழ்த்தானில்லை!
என்று வருத்தப்படுகிறார் புரட்சி கவிஞர்.
“தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சாய் வருதல் வேண்டும்.
தமிழ்ப் பகைவன் முதலமைச்சாய்த் தமிழ்நாட்டில் வாராது தடுத்தல் வேண்டும்.
நமை வளர்ப்பான் நந்தமிழை வளர்ப்பவனாம்! தமிழ்அல்லால் நம்முன்னேற்றம்
அமையாது. சிறிதும் இதில் அய்யமில்லை, அய்யமில்லை அறிந்து கொண்டோம்.”
என்ற புரட்சி கவிஞரின் ஆசை திராவிட மாடல் ஆட்சியின் முதல்வர் மாட்சிமைக்குரிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மூலம் நிறைவேறி இருப்பது கண் கூடு.
புலவர் பெருமக்களை அழைத்துப் பழைமை போற்றும் இலக்கியங்களை பரப்புவதில் பயனில்லை என்று பேசுகிறார் புரட்சி கவிஞர் இப்படி…..
“முதுமை’பெறு சமயமெனும் களர்நிலத்தில் நட்டதமிழ்ப் பெருநூல் எல்லாம்
இதுவரைக்கும் என்னபயன் தந்ததென எண்ணுகையில் நான்கு கோடிப்
பொதுவான தமிழரிலே பொன்னான தமிழ்வெறுத்தார் பெரும்பா லோராம்!
புதுநூற்கள் புதுக்கருத்தால் பொதுவகையால் தரவேண்டும் புலவ ரெல்லாம்”
என்று கூறி பொருள் மிக்க தமிழ் மொழிக்கு புரிந்திடுவீர் நற்றொண்டு: புரியீராயின் இருள்மிக்கதாகிவிடும் தமிழ்நாடும் தமிழர்களின் இனிய வாழ்வும். என்கிறார்.
உயிர்போன்ற உங்கள்தமிழ் கடவுளுக்கே உவப்பாதல் இல்லை போலும்!
உயிர்போன்ற உங்கள்தமிழ் உரைத்தக்கால் கடவுளதை ஒப்பார் போலும்!
பயிரழிக்கும் விட்டிலெனத் தமிழ்மொழியைப் படுத்தவந்த வடம றைதான்
செயிர்தீர வாழ்த்துதற்கும் தேவையினைச் சொல்லுதற்கும் உதவும் போலும்!
மடிகட்டிக் கோயிலிலே மேலுடையை இடுப்பினிலே வரிந்து கட்டிப்
பொடிகட்டி இல்லாது பூசியிரு கைகட்டிப் பார்ப்பா னுக்குப்
படிகட்டித் தமிழரெனப் படிக்கட்டின் கீழ்நின்று தமிழ்மா னத்தை
வடிகட்டி அவன்வடசொல் மண்ணாங்கட் டிக்குவப்பீர் ‘மந்த்ரம்’ என்றே.
என்று கூறி இது நியாயமா? என்று கேள்வி எழுப்புகிறார் புரட்சிக் கவிஞர்.
தெற்கோதும் தேவாரம் திருவாய்நன் மொழியான தேனி ருக்கச்
செக்காடும் இரைச்சலென வேதபா ராயணமேன் திருக்கோ யில்பால்?
திருப்படியில் நின்றபடி செந்தமிழில் பெரும்படியார் அருளிச் செய்த
உருப்படியை அப்படியே ஊரறியும் படியுரைத்தால் படியும் நெஞ்சில்!
தெருப்படியிற் கழுதையெனச் செல்லுபடி யாகாத வடசொற் கூச்சல்
நெருப்படியை எப்படியோ பொறுத்திடினும் நேர்ந்தபடி பொருள் கண்டீரோ!
என வினா தொடுக்கிறார்.
தீங்குடைய பார்ப்பனரின் ஆயுதங்கள் ‘இந்தி’ ‘வட சொல்’ இரண்டும்.
பார்ப்பான்பால் படியாதீர்; சொற்குக்கீழ்ப் படியாதீர்; உம்மை ஏய்க்கப்
பார்ப்பான்;தீ துறப்பார்ப்பான் கெடுத்துவிடப் பார்ப்பான் எப் போதும் பார்ப்பான்.
ஆர்ப்பான் நம் நன்மையிலே ஆர்வமிக உள்ளவன்போல்! நம்ப வேண்டாம்.
பார்ப்பானின் கையை எதிர் பார்ப்பானை யேபார்ப்பான் தின்னப் பார்ப்பான்.
தமிழின்பேர் சொல்லி மிகு தமிழரிடைத் தமிழ்நாட்டில் வாழ்ந்திட் டாலும்
தமிழழித்துத் தமிழர்தமைத் தலைதூக்கா தழித்துவிட நினைப்பான் பார்ப்பான்.
அமுதாகப் பேசிடுவான் அத்தனையும் நஞ்சென்க நம்ப வேண்டாம்
தமிழர்கடன் பார்ப்பானைத் தரைமட்டம் ஆக்குவதே என்று ணர்வீர்.
தமிழரின்சீர் தனைக்குறைத்துத் தனியொருசொல் சொன்னாலும் பார்ப்பான் தன்னை
உமிழ்ந்திடுக! மானத்தை ஒருசிறிதும் இழக்காதீர். தமிழைக் காக்க
இமையளவும் சோம்பின்றி எவனுக்கும் அஞ்சாது தொண்டு செய்வீர்.
சுமைஉங்கள் தலைமீதில் துயர்போக்கல் உங்கள்கடன். தூய்தின் வாழ்க!
என்று பாடி சுமை உங்கள் தலைமையில் துயர்போக்கல் உங்கள் கடன்”என்று மாணவர் கடமையை உணர்த்துகிறார் புரட்சி கவிஞர். இது மாணவர்களுக்கு மட்டுமல்ல தமிழர்கள் அனைவருக்கும் தான்.
சொற்பொழிவாளர்களை அழைக்கிறார்:
“சமயமெனும் சூளையிலே தமிழ்நட்டால் முளையாதென் றறிந்தி ருந்தும்
சமயநூல் அல்லாது வழியறியாத் தமிழ்ப்புலவர் சமயம் பேசித்
தமிழ்அழிப்பார் எனினும்அவர் தமிழ்வளர்ப்போம் என்றுரைத்துத் தமை வியப்பார்.
தமிழ்வளர்ச்சி தடைப்பட்டால் தம்வளர்ச்சி உண்டென்றும் நினைப்பார் சில்லோர்!
பணமனுப்பி வாரீர்எனில் பயணமுறும் தமிழ்ப்புலவர் ஊரில் வந்து
மொணமொணெனக் கடவுளரின் முச்செயலில், பொய்ப்பேச்சில் முழுக வைப்பார்
கணகணெனத் தமிழ்க்கல்வி கட்டாயம் செயத்தக்க கருத்தும் சொல்லார்
தணியாத சமயமொடு சாதியெனும் தீயில்நெய்யைச் சாய்த்துச் செல்வார்”
என அறிவுறுத்துகிறார்.
பார்ப்பனர்கள் ஏடெழுதும் பாழ்நிலைமை போகுமட்டும் பைந்த மிழ்க்கோ
சீர்ப்பெரிய நாட்டினுக்கோ சிறிதேனும் நன்மையில்லை திருட ரின்பால்
ஊர்ப்பணத்தை ஒப்படைத்தல் சரியாமோ? செய்தித்தாள் உடையா ரன்றோ
ஊர்ப்பெருமை காப்பவர்கள் அuதில்லார் ஏதிருந்தும் ஒன்று மில்லார்!
ஆங்கிலத்தில் புலவரெனில் அரசினரின் அலுவலிலே அமர்ந்தி ருப்பார்!
பாங்குருசெந் தமிழ்ப்புலமை படைத்தாரேல் பள்ளியிலே அமர்ந்தி ருப்பார்!
தீங்குற்ற இசைப்புலமை சிறிதிருந்தால் படத்தொழிலில் சேர்ந்தி ருப்பார்!
ஈங்கிவற்றில் ஏதுமிலார் தமிழினிலே ஏடெழுதிப் பிழைக்க வந்தார்.
ஓவியத்தின் மதிப்புரையும் உயர்கவியின் மதிப்புரையும் இசையின் வல்லார்
நாவிலுறு பாடல்களின் நயம்ப்ற்றி மதிப்புரையும் உரை நடைக்கு
மேவுகின்ற மதிப்புரையும் கூத்தர்களின் மதிப்புரையும் விள்வார். நாங்கள்
யாவும்அறிந் தோம்என்பார். பெரும்பாலோர் பிழையின்றி எழுதல் இல்லார்.
ஊர்திருடும் பார்ப்பானும் உயர்வுடையான் எனக்குறிப்பார். திரவிடர் கொள்
சீர்குறித்துச் சீறிடுவார் சிறுமையுற வரைந்திடுவார் செய்யுந் தொண்டு
பார்திருத்த என்றிடுவார் பழமைக்கு மெருகிடுவார். நாட்டுக் கான
சீர்திருத்தம் என்றாலோ சிறுநரிபோல் சூழ்ச்சியினைச் செய்வார் நாளும்!”
என்று பாடி ஏடு எழுதுவோர் அவளாக இருந்தால் இப்படித்தான் என்பதை பதிவு செய்கிறார். நம்மவர்கள் ஏடு எழுத வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
கடவுள் வெறி சமய வெறி கண்ணல் நிகர் தமிழுக்கு நோய் நோய் நோயே
இடை வந்த சாதியினும் இடர் ஒழிந்தால் ஆள்பவள் நம் தாய் தாய் தாயே
கடல் போலும் எழுக கடல் முழக்கம் போல் கழறிடுக! தமிழ் வாழ்க என்று!
கெடல் எங்கே தமிழின் நலம் அங்கெல்லாம் தலையிட்டு கிளர்ச்சி செய்க!
விழிப்போரே நிலை காண்பார் விதைப்போரே அறுத்திடுவார் கலைக்கண் தோறும்
அழிப்போரே அறம் செய்வார் அறிந்தோரே உயர்ந்திடுவார் ஆதலால் ஆர்வம்
செழிப்போரே இளைஞர்களே தென்னாட்டு சிங்கங்காள் எழுக!
நம் தாய்மொழி ப்போரே! வேண்டுவது தொடக்கம் செய்வீர் வெல்வீர்!
இன்றைக்கும் தேவையான பயன்படுத்தப்பட வேண்டிய கருத்தை அன்றைக்கே சொன்ன தொலைநோக்கு பார்வை கொண்டவர் தான் புரட்சி கவிஞர்.
சமஸ்கிருதம், இந்தியை திணித்து மாநில மொழிகள் இரண்டாம் தர மூன்றாம் தர நிலைக்கு தள்ளப்பட முயலும் இன்றைய ஒன்றிய அரசின் போக்கை ஒத்துப் பார்ப்பீர். தாய் மொழியாம் தமிழைப் பாதுகாக்க எழுவீர் மாணவர்காள். தமிழை, தமிழரை, தமிழ்நாட்டைக் காக்க தயாராவீர் இளைஞர்களே!