ஏப்ரல் 22-ஆம் நாள் பஹல்காம் என்ற புகழ்பெற்ற சுற்றுலாத்தலத்தில் 4 தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் இந்தியர்களும் ஒரு நேபாள நபரும் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல், பாகிஸ்தானில் இருந்து பயிற்சி பெற்ற தீவிரவாதிகளால் நடத்தப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சுமார் இரண்டு வார ஆலோசனைக்குப் பிறகு, திடீரென மே 6-ஆம் தேதி இரவு, இந்திய பாதுகாப்புப்படை துல்லியமாக திட்டமிட்டு பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் நிலைகளை அழித்தது.
அதன் பிறகு இந்தியா-பாகிஸ்தான் மோதல் முற்றும் அளவிற்கு சென்றது. பின்னர் போராக மாறும் சூழல் நிலவியது. இங்கு பாகிஸ்தான், இந்திய பாதுகாப்புப் படையின் தாக்குதலில் முற்றிலும் நிலைகுலைந்தது.
இந்தியா எப்போதும் போரை விரும்பும் நாடு கிடையாது. அதே நேரத்தில், பாகிஸ்தானை மீண்டும் பயங்கரவாதிகளுக்கு துணை போகும் நாடு என்பதை காட்டும் மிக முக்கியமான வாய்ப்பு இந்தியாவிற்கு வந்தது.
ஆனால், திடீரென அமெரிக்காவின் அதிபர் “இந்திய-பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்ய நான் தலையிட்டேன்” என்கிறார். “போரை நிறுத்துங்கள். இல்லையென்றால், இரண்டு நாடுகளுடனும் வியாபாரம் செய்யமாட்டேன்” என்றார்.
9-ஆம் தேதி பாகிஸ்தானின் பெரும்பாலான ராணுவ விமானங்கள் மற்றும் அதன் பாதுகாப்பு அமைப்பும் இந்தியாவின் ஏவுகணைகளால் தகர்க்கப்பட்ட நிலையில், வெற்றியின் கனி இந்தியாவின் கைகளுக்கு அருகில் வந்த நிலையில், போர் நிறுத்தம் என்று எங்கோ இருந்து ஒருவர் அறிவிக்கிறார்.
ஒருமுறை, இருமுறை அல்ல, நான்கு முறை! அமெரிக்காவில் இருந்து இரண்டு முறை, சவுதியில் இருந்து இரண்டு முறை அறிவிக்கப்படுகிறது.
ஆனால் இந்தியா, டிரம்பின் இந்த அறிவிப்பிற்கு எந்த ஒரு நேரடி பதிலையும் கொடுக்காமல், செய்தித் தொடர்பாளர் மூலம் பதில் அளிக்கிறது.
“ஆபரேஷன் சிந்தூர்” இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு ஒரு தோல்வியாக அமைந்தது. ஏனெனில், அமெரிக்கா தலையிட்டுப் போரை நிறுத்தியதாக அறிவிக்கிறது.
இதுநாள் வரை, காஷ்மீர் இந்தியா-பாகிஸ்தானிற் கிடையேயான ஒரு பிரச்சினையாக இருந்தது. இப்போது, முதல் முறையாக அமெரிக்கா தலையிட்டுள்ளது.
இந்தியா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி பாகிஸ்தானைத் தனிமைப்படுத்தத் தவறியது. அதிர்ச்சி அளிக்கும் வகையில், உலக அரங்கில் இந்தியா தனிமைப் படுத்தப்பட்டது. சீனா, துருக்கி, மற்றும் அஜர்பைஜான் போன்ற நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தன. அதே நேரத்தில், இந்தியாவின் நட்பு நாடுகள் ஆதரவு தெரிவிக்கவில்லை.
அறுந்துபோன அழகிய முத்துச்சரம்
இந்தியா கடந்த 75 ஆண்டுகளாக தன்னைச் சுற்றியுள்ள அனைத்து நாடுகளையும் அரவணைத்து, அழகிய சரம் கொண்ட முத்துமாலையாக காட்சித் தந்தது. எல்லை நாடுகளான பாகிஸ்தானைத் தவிர்த்து, நேபாளம், பூடான், பர்மா (மயன்மார்), இலங்கை, மாலத்தீவு, ஈரான் ஆகியவற்றுடனும் நல்லுறவை வளர்த்துவந்துள்ளது.
மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஆபத்தான வகையில் மாற்றம் ஏற்பட்டது. அதன் விளைவாக, தற்போதைய தாக்குதலில் இந்தியாவிற்கு ஆதரவாக எந்த ஒரு நாடும் நிற்கவில்லை. அதை விட, நேற்றுவரை இந்தியாவோடு நல்லுறவை வளர்த்துவந்த துருக்கி, அஜர்பைஜான் போன்ற நாடுகள், வெளிப்படையாகவே பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்தன.
மாலத்தீவு – இந்திய உறவு பாதிப்பு
இந்தியப் பெருங்கடலில் மிகவும் முக்கியமான தீவுநாடான மாலத்தீவு, இந்தியாவின் பாதுகாப்பு அரணாக தென் மேற்கு இந்தியப் பெருங்கடலில் திகழ்ந்தது.
இந்தியா-சீனா போர் முடிந்த பிறகு, அன்றைய இந்திய பிரதமர்கள் சீனா இந்தியப் பெருங்கடலில் எதிர்காலத்தில் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்று தீவிரமாக ஆலோசனையில் இறங்கினர். மாலத்தீவின் முதல்தர நட்புநாடாக இந்தியாவை கொண்டு வந்தனர்.
ஆனால், மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, தனியார் நிறுவனத்திற்கு போடப்பட்ட வணிக ஒப்பந்தம் காரணமாக, பல்வேறு வகையில் வளைந்துகொடுத்துச் செல்ல வேண்டிய அழுத்தம் ஏற்பட்டதால், மாலத்தீவு – இந்தியாவின் பலமான உறவில் விரிசல் ஏற்பட்டது.
இலங்கை – மாலத்தீவு உறவு
வரலாற்று ரீதியாக, இலங்கையின் தென்கிழக்கு ஆசிய மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியங்களுடனான கடல் வழி தொடர்புகள் மாலத்தீவுடனான உறவை இலங்கை வலுப்படுத்திக் கொண்டது.
இரு நாடுகளும் சுற்றுலா மற்றும் வர்த்தகத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்த பல ஒப்பந்தங்களை மேற்கொண்டு இருக்க, மோடி அரசாங்கத்தால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.
அண்மைக் காலங்களில்…
மாலத்தீவு சீனாவுடன் நெருக்கமான உறவை வளர்த்து வருகிறது. இதற்கு, இலங்கை பெரிதும் உதவியாக இருப்பதால், இந்தியா – மாலத்தீவு உறவில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இலங்கை – சீனா உறவு
இலங்கை – சீன உறவு கடந்த பல ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. குறிப்பாக, பொருளாதார, உள்கட்டமைப்பு, மற்றும் அரசியல் துறைகளில், இந்த உறவு, இலங்கையின் புவியியல் முக்கியத்துவம் வாய்ந்தது ஆக அமைந்துள்ளது!
இலங்கை, சீனாவின் BRI திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் கீழ், சீனா இலங்கையில் பல பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியுதவி செய்துள்ளது. சீனாவின் முதலீடுகள், நீண்ட கால உள்நாட்டுப் போரால் சீரழிந்த இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் மீட்டுக் கொண்டுவரும் நிலைக்குச் சென்றுவிட்டது.
சீனா, இலங்கையின் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு அரசியலில் ஆதரவளித்து வருகிறது, குறிப்பாக 2009இல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு (LTTE) எதிரான போரின் இறுதிக் கட்டத்தில். சீனா ஆயுதங்கள் மற்றும் இராஜதந்திர ஆதரவை வழங்கியது, இது இலங்கை அரசாங்கத்திற்கு முக்கியமானதாக இருந்தது. அய்.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கை மீதான மனித உரிமை விசாரணைகளை எதிர்க்க சீனா ஆதரவு தெரிவித்துள்ளது.
இலங்கையின் ராஜபக்சே அரசாங்கங்கள் (2005-2015, 2019-2022) சீனாவுடன் மிகவும் நெருக்கமாக செயல்பட்டன, இது சீனாவின் செல்வாக்கை வலுப்படுத்தியது.
பாதுகாப்பு மற்றும் கடல் வளம்: சீன கப்பல்கள், குறிப்பாக நீர்மூழ்கிகள், இலங்கை துறைமுகங்களுக்கு அவ்வப்போது வருகை தருவது இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது, இந்தியப் பெருங்கடலில் சீனாவின் கடல் ஆதிக்கத்தை பிரதிபலிக்கிறது.
இலங்கை வரலாற்றில், முதல் முறையாக சோசலிச அரசு அங்கு அமைந்துள்ளது. சீனாவின் இடதுசாரிக் கொள்கையை தனது கொள்கையாக கொண்ட இலங்கையின் புதிய அரசாங்கம், 2024 முதல் சீனாவுடனான உறவை பொருளாதார மீட்புக்கு பயன்படுத்துகிறது.
நேபாளத்துடன் பிரச்சினை
2019இல் இந்தியா வெளியிட்ட புதிய அரசியல் வரைபடத்தில் காலாபானி பகுதி சேர்க்கப்பட்டது. இது, நேபாளத்துடனான உறவில் விரிசலை ஏற்படுத்தியது. நேபாளம் இப்பகுதியை தனது எல்லைக்குள் உரிமை கோருகிறது.
சீனாவின் செல்வாக்கு: நேபாளத்தில் சீனாவின் முதலீடுகள் மற்றும் அரசியல் செல்வாக்கு, இந்தியாவின் செல்வாக்கைக் குறைக்கிறது. இது உறவில் மேலும் பதற்றத்தை உருவாக்குகிறது. நேபாளம்-சீன உறவு சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது. இது பொருளாதார, உள்கட்டமைப்பு, அரசியல் மற்றும் புவிசார் மூலோபாய காரணிகளால் உந்தப்பட்டுள்ளது. இந்த உறவு, இந்தியாவுடனான நேபாளத்தின் பாரம்பரிய நெருக்கத்திற்கு மாற்றாகவும், பிராந்திய சக்தி இயக்கவியலில் நேபாளத்தின் சமநிலை முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
18-ஆம் நூற்றாண்டு (சீன-நேபாளப் போர்): 1788-1792 இல், நேபாளத்தின் கோர்க்கா படைகள் திபெத்தை ஆக்கிரமிக்க முயன்றபோது, சீனாவின் சிங் பேரரசு தலையிட்டு, நேபாளத்தை தோற்கடித்தது. இதன் விளைவாக, 1792இல் பெத்திராவதி உடன்படிக்கையின் மூலம், நேபாளம் சீனாவுக்கு ஆண்டுதோறும் திறை செலுத்த ஒப்புக்கொண்டது. இந்த உடன்படிக்கை, நேபாள வணிகர்களுக்கு சீனாவில் வணிக உரிமைகளையும், சீனாவின் திபெத்-நேபாள பிணக்கு தீர்வு மற்றும் பாதுகாப்பு உதவிகளையும் உறுதி செய்தது.
பெல்ட் அண்ட் ரோட் முன்முயற்சி (BRI): நேபாளம் 2017இல் சீனாவின் BRI திட்டத்தில் இணைந்தது, இது உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு முக்கியமானது. சீனா நேபாளத்தில் சாலைகள், ரயில்வே மற்றும் ஆற்றல் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்குகிறது. உதாரணமாக, கேருங்-காட்மாண்டு ரயில்வே திட்டம் நேபாளத்தை திபெத்துடன் இணைக்க முயல்கிறது. சீன முதலீடுகள் நேபாளத்தின் நீர்மின்சாரம், சுற்றுலா மற்றும் தொலைத்தொடர்பு துறைகளிலும் அதிகரித்துள்ளன.
சீன அதிபரின் வருகை: 2019இல் சீன அதிபர் ஜி ஜின்பிங் நேபாளத்திற்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணம் மேற்கொண்டார், இது ஒரு சீன தலைவரின் முதல் நேபாள பயணமாகும். இதில் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்து பேசப்பட்டது. நேபாளத்தின் ஆட்சியாளர்கள், சீனாவுடனான உறவை வலுவாக வைத்து, இந்தியாவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க சீனாவுடன் நெருக்கத்தை அதிகரித்துக்கொண்டே சென்றனர். இதனை மோடி அரசாங்கம் தடுக்க இயலாமல், மவுனமாக வேடிக்கைப் பார்த்த காரணத்தால் இந்திய-நேபாள உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
பூடான்-சீனா எல்லைப் பேச்சு வார்த்தை: பூடான், சீனாவுடன் எல்லைப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்கிறது. மோடியின் முதலாம் அய்ந்து ஆண்டுகால ஆட்சியில் இந்தியாவோடு நெருக்கமாக இருந்த பூடான், சமீபகாலமாக சீனாவோடு அரசியல் மாற்றம் காண முயல்கிறது. நீண்ட ஆண்டுகளாக பூடான் எல்லைப் பிரச்சினையில் இந்தியாவோடு இணைந்து இருந்தது. ஆனால், இந்திய அரசியலில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட வெளிப்படைத்தன்மை இன்மை போன்றவை, பூடானை சீனாவின் பக்கம் சாய வைத்துவிட்டன. சமீபத்தில் பூடான் அரசு பெய்ஜிங் சென்றுவந்ததும், இந்தியாவிற்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது.
பூடான் – இலங்கை உறவு
இருதரப்பு உறவு: பூடான் மற்றும் இலங்கை இடையே முறையான இராஜதந்திர உறவு உள்ளது, ஆனால் இது மிகவும் வரையறுக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளும் தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சங்கத்தின் (SAARC) உறுப்பினர்களாக உள்ளன, இது அவற்றுக்கிடையே ஒத்துழைப்பை எளிதாக்குகிறது.
பொருளாதார மற்றும் கலாச்சார தொடர்பு: இரு நாடுகளும் பவுத்தத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. இலங்கை, சீனாவுடனான உறவை விரிவுபடுத்தியுள்ளதால், பூடானும் இலங்கையோடு ஒத்துழைப்பை வலுவாக்கும் வகையில் தனது அரசியல் கொள்கையை மாற்றியுள்ளது. இது, பூடான்-இந்தியா உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
மியான்மார்-சீனா உறவு பொருளாதார, அரசியல், ராணுவ மற்றும் புவிசார் முக்கியத்துவம் வாய்ந்த உறவாக உள்ளது. சீனா, மியான்மாரின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளிகளில் ஒன்றாகும். சீனா, மியான்மாரில் உள்கட்டமைப்பு திட்டங்களில் பெரும் முதலீடு செய்துள்ளது. குறிப்பாக, சீனா-மியான்மார் பொருளாதார வழித்தடம் (CMEC) இதில் கியாக்பியு ஆழ்கடல் துறைமுகம், எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்கள் முக்கியமானவை. சீனா, மியான்மார் ராணுவத்திற்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் வழங்கி வருகிறது. 2021 ஆட்சிக் கவிழ்ப்பிற்குப் பிறகு, மியான்மார் ராணுவத்திற்கு சீன ஆயுதங்கள் முக்கிய ஆதரவாக இருந்தன. 2021 பிப்ரவரி 1இல், மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, சீனா இந்த மாற்றத்தை மறைமுகமாக ஆதரித்தது. அய்.நா. பாதுகாப்பு கவுன்சிலில், மியான்மார் ராணுவத்திற்கு எதிரான கண்டன அறிக்கையை சீனா தடுத்தது. இது, மியான்மாரின் உள்நாட்டு விவகாரமாகக் கருதப்படுவதாகக் கூறப்பட்டது. 2025 மே 9-ல், மாஸ்கோவில் நடந்த சந்திப்பில், சீன அதிபர் ஜி ஜின்பிங், மியான்மார் ராணுவத் தலைவர் மின் ஆங் ஹ்லைங்குடன், பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதாக உறுதியளித்தார். மியான்மாரில் சீனாவின் செல்வாக்கு, இந்தியாவின் புவிசார் நலன்களுக்கு சவாலாக உள்ளது. இந்தியா, மியான்மாருடன் நெருக்கமான உறவைப் பேணினாலும், சீனாவின் பொருளாதார மற்றும் ராணுவ ஆதிக்கம் மேலோங்கியுள்ளது.
பாகிஸ்தான் பிரச்சினை: இந்தியா-பாகிஸ்தான் உறவு, காஷ்மீர் பிரச்சனை, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (LoC) மீறல்கள் மற்றும் பயங்கரவாத ஆதரவு குற்றச்சாட்டுகளால் நீண்டகாலமாக பதற்றமாக உள்ளது. 2025 மே மாதத்தில், பாகிஸ்தான் ஆயுதப் படைகள், ஜம்மு-காஷ்மீரில் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியதாகவும், எல்லையில் பல முறை அத்துமீறல்கள் நிகழ்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மை நிகழ்வுகள்: எல்லையில் மோதல்கள் தீவிரமடைந்து, 16 பொதுமக்கள் உயிரிழந்ததாகவும், இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகளுக்கு இடையே, மோதல் நிறுத்த ஒப்பந்தங்கள் மீறப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது. சீனாவின் ஆதரவு, பாகிஸ்தானுக்கு மேலும் பதற்றத்தை அதிகரிக்கிறது.
சீனா பிரச்சனை: இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனை, குறிப்பாக லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) தொடர்பான மோதல்கள், இரு நாடுகளுக்கு இடையே முக்கிய பதற்றமாக உள்ளது. 2020 கால்வான் மோதல் முதல் உறவு மேலும் மோசமடைந்துள்ளது.
தற்போதைய நிலை: சீனாவின் இராணுவ உள்கட்டமைப்பு விரிவாக்கம் மற்றும் இந்தியாவின் அண்டை நாடுகளில் (எ.கா., இலங்கை, பாகிஸ்தான்) அதன் செல்வாக்கு, இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இந்தியாவின் மேற்கத்திய நாடுகளுடனான நெருக்கம், சீனாவை எதிர்ப்பதாகக் கருதப்படுகிறது.
வங்கதேசம் பிரச்சினை: வரலாற்று ரீதியாக இந்தியாவுடன் நல்ல உறவு இருந்தாலும், சமீபகாலமாக சீனாவின் பொருளாதார முதலீடுகள் மற்றும் இந்தியாவின் உள்நாட்டு அரசியல் (எ.கா., NRC, CAA) காரணமாக, வங்காளதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான உணர்வுகள் அதிகரித்துள்ளன.
எல்லை மேலாண்மை: ஒருங்கிணைந்த எல்லை மேலாண்மை அமைப்பு (CIBMS) மூலம் இந்தியா – வங்கதேச எல்லையில் கண்காணிப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், எல்லை மீறல்கள் மற்றும் கடத்தல் பிரச்சினைகள் தொடர்கின்றன.
ஆப்கானிஸ்தான் பிரச்சினை: 2021இல் தலிபான் ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியாவின் செல்வாக்கு குறைந்து, பாகிஸ்தான் மற்றும் சீனாவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இந்தியாவின் முதலீடுகள் மற்றும் திட்டங்கள் ஆபத்தில் உள்ளன. ஆப்கானிஸ்தானுடனான உறவு வரையறுக்கப்பட்ட அளவிலேயே உள்ளது. ஆனால், பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இந்தியாவுக்கு கவலையாக உள்ளன.
மோடி பதவியில் அமர்ந்த 2014 ஆம் ஆண்டுமுதல் உலகில் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளுக்கும் சென்று வந்துள்ளார். ஆனால், அதிர்ச்சி தரும் வகையில் அண்மையில் நடந்த பாகிஸ்தான்-இந்தியா மோதலில் இதுநாள் வரை இந்தியாவின் பக்கம் இருந்த அனைத்து நாடுகளும் கைகழுவிய நிலை காணப்பட்டது. ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள், இந்தியாவின் பக்கம் எப்போதும் நிற்கும். ஆனால், இம்முறை அனைத்துமே ஒதுங்கிவிட்டன.
கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் நடந்த ஹிந்துத்துவ வன்முறை காரணமாக, அந்த அரசுகள் இந்தியாவிடம் சில புகார்களை அளித்தும், இந்திய அரசு நடவடிக்கை எடுக்க தயங்கியதன் காரணமாக, இந்தியாவின் உறவுக்கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை அதன் நட்புநாடுகளின் போக்கில் தெளிவாக காண முடிகிறது.
வெளியுறவுக் கொள்கை என்பது விதம்விதமான நாடுகளுக்குச் சுற்றுவது மட்டுமே இல்லை என்று இனியாவது இந்தியப் பிரதமர் உணர்ந்துகொளள் வேண்டும்.