சென்னை, மே 16 ‘2026 சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக கூட்டணியில்தான் இருப்போம்’ என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் தெரிவித்தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் கூட்டம் சென்னையில் நேற்று (15.5.2025) நடைபெற்றது. கூட்டத்துக்கு தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் தலைமை வகித்தார். தேசிய அரசியல் ஆலோசனைக் குழு தலைவர் இமாமே ஹிந்த் செய்யது சாதிக் அலி சிஹாப் முன்னிலை வகித்தார். தேசிய பொதுச்செயலாளரும் கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவருமான பி.கே.குஞ்ஞாலிக்குட்டி வரவேற்றார்.
கூட்டத்தில், ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக 2 நிமிடம் அமைதியாக இரங்கல் செலுத்தப்பட்டது. இந்த தாக்குதல் தொடர்பாக ஏற்பட்ட விரோதப் போக்குகள் மற்றும் அப்பாவி பொதுமக்களின் துயர இழப்பு குறித்து ஆழ்ந்த கவலை தெரிவிக்கப்பட்டது. மேலும், அனைத்து பயங்கரவாதச் செயல்களுக்கும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதுதவிர பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் தேசியத் தலைவராக கே.எம்.காதர் மொய்தீன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில், இன்று முதல் 4 ஆண்டுகளுக்கு தேசிய நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது. தலைவர், பொதுச்செயலாளர் உள்பட 28 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இந்திய – பாகிஸ்தான் போரை நிறுத்திய அதேவேகத்தில், இஸ்ரேல் போரை நிறுத்தும் முயற்சியை உலக அளவில் செய்ய வேண்டும். 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டில் மட்டுமின்றி, கேரளத்திலும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை முஸ்லிம் சமூகம் ஒட்டுமொத்தமாக ஆதரிக்கிறது. நேற்று இன்று நாளை என எப்போதும் திமுக கூட்டணியில் இருப்போம்.
கேரளாவில் காங்கிரஸ் கூட்டணியில் இந்திய முஸ்லிம் லீக் தொடர்ந்து பயணித்து வருகின்றது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று, கேரளாவில் ஆட்சி அமைய இருப்பதாக பல தரப்பு மக்களும் தெரிவிக்கின்றனர். கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி அமைவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பஹல்காம் பகுதியில் நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் கூறினார். அதனை செயலில் காட்டியதற்கு எங்களது வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு அரசு 3,873 நூலகங்களுக்கு
ரூ.40 கோடியில் புத்தகங்கள் கொள்முதல்
சென்னை, மே 16 தமிழ்நாட்டில்உள்ள 3,873 பொது நூலகங்களுக்கு ரூ.40 கோடியில் புத்தகங்களை கொள்முதல் செய்வதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது. வெளிப்படையான முறையில் நூல்கள் கொள்முதல் செய்யப்படுவது நூலகர்கள், வாசகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில்பொது நூலகத் துறையின்கீழ் மாநில நூலகம், மாவட்ட மய்ய நூலகங்கள், கிளை நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள் என 4,500-க்கும் மேற்பட்ட நூலகங்கள் இயங்கி வருகின்றன. கடந்த காலங்களில் நூலகங்களுக்கான புத்தகங்கள் கொள்முதல் செய்வதில் முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து பொது நூலகங்களுக்கு நூல்கள் கொள்முதல் செய்வதில் வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதற்கான அறிவிப்பை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சட்டப் பேரவையில் கடந்தாண்டு வெளியிட்டார்.
அதைத்தொடர்ந்து வெளிப்படைத் தன்மையான நூல் கொள்முதல் கொள்கை – 2024 உருவாக்கப்பட்டது. அதன்படி நூலகங்களுக்கு தேவைப்படும் புத்தகங்கள், பருவ இதழ்கள் மற்றும் நாளிதழ்களை வெளிப்படைத் தன்மையுடன் கொள்முதல் செய்யும் வகையில் பிரத்யேக இணையதளம் (https://bookprocurement.tamilnadupubliclibraries.org/) ஏற்படுத்தப்பட்டது. இந்த தளத்தின் வழியாக விண்ணப்பித்த 414 பதிப்பாளர்களின் புத்தகங்கள், நூல் தேர்வுக் குழுவின் மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
அவற்றில் தகுதியான நூல்கள் தேர்வு செய்யப்பட்டு பதிப்பாளர்களிடம் நூல் விலைக் குறைப்பு பேச்சுவார்த்தை இணையவழியில் நடத்தப்பட்டது. இறுதியாக தேர்வு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டன. அதிலிருந்து நூலகங்களுக்கு தேவையான புத்தகங்களை அந்தந்த வாசகர் வட்ட உறுப்பினர்கள் மற்றும் நூலகர்களே தேர்வு செய்தனர். இதன்மூலம் தரமற்ற புத்தகங்கள் நூலகங்களுக்கு கொள்முதல் செய்வது தடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், தற்போது ரூ.40 கோடியில் 6,416 தலைப்பிலான புத்தகங்களின் 22 லட்சத்து 17,379 பிரதிகளுக்கு கொள்முதல் ஆணைகள் சமீபத்தில் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த 2 மாதங்களுக்குள் பதிப்பாளர்களிடம் இருந்து அனைத்து புத்தகங்களும் கொள்முதல் செய்யப்பட்டு சென்னையில் உள்ள கிடங்குகளில் இருப்பு வைக்கப்படும். அங்கிருந்து மாவட்ட வாரியாக உள்ள பொது நூலகங்களுக்கு அவை அனுப்பி வைக்கப்படும்.
இதன்மூலம் அனைத்து வாசகர்களும் தங்களது இல்லங் களுக்கு அருகில் உள்ள அரசு நூலகங் களில் விரைவில் புதிய புத்தகங்களை வாசித்து பயனடைய லாம் என்று நூலகத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.