சென்னை, மே 16– பிளஸ்-2 தேர்வில், சென்னை நுங்கம்பாக்கம் மாநகராட்சி பள்ளியில் படித்து வந்த மாணவி ஜெய்சிறீ சென்னை மாநகராட்சி பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார். அவரது பெற்றோர் கூலி வேலை செய்து வரும் நிலையில், மேற்கொண்டு அவரை கல்லூரியில் படிக்க வைக்க முடியாத நிலை இருந்து வந்தது. இதனை அறிந்த எத்திராஜ் கல்லூரி நிர்வாகம் அந்த மாணவிக்கு 3 ஆண்டுகள் கட்டணம் எதுவும் செலுத்தாமல் படிப்பதற்கான ஆணையை வழங்கி கவுரவித்துள்ளது. ஜெய சிறீக்கு சேர்க்கைக்கான ஆணையை கல்லூரியின் நிர்வாக குழு தலைவர் வி.எம்.முரளிதரன் வழங்கினார். அப்போது, கல்லூரியின் முதல்வர் உமா கவுரி, துணை முதல்வர்கள் விஜயா மற்றும் ஜெயந்தி ஆகியோருடன் மாணவியின் பெற்றோரும் உடன் இருந்தனர்.
இது குறித்து முரளிதரன் கூறும்போது, “கல்வி என்பது ஒரு சேவை அதனை இது போன்ற இல்லாத மாணவர்களுக்கு கொடுக்கும்போது அவர்களுடைய வாழ்க்கைத் தரம் மட்டுமல்லாமல், அந்த குடும்பத்தின் வாழ்க்கைதரமும் மாறிவிடும். இதுபோன்று நல்ல மதிப்பெண் பெற்று மிகமிக பின்தங்கிய நிலையில் இருக்கும் பிள்ளைகளை கண்டறிந்து உதவித் தொகை வழங்கி, கல்வி கொடுத்து அவர்களை வாழ்வில் முன்னேற்ற எங்களுடைய கல்வி நிறுவனம் உதவி செய்துவருகிறது” என்றார். மாணவி ஜெயசிறீ கூறுகையில், “நல்ல மதிப்பெண் பெற்றிருந் தும் தன்னால் உயர்கல்வியைத் தொடரமுடியுமா? என சந்தேகத்தில் இருந்தநிலையில் எத்திராஜ் கல்லூரி நிர்வாகம் கொடுத்துள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்தி படித்து அரசுப் பணிக்கு செல்வதுதான் எனது லட்சியம்” என்றார்.