கி.வீரமணி
‘குடிஅரசு’
தலையங்கமும் – வழக்கும்
அய்ரோப்பிய சுற்றுப் பயணங்களுக்குப்பின் ஈரோடு சமதர்மத் திட்டத்தினை வெளியிட்ட தந்தை பெரியார் அவர்கள், அதனை விளக்கி சுயமரியாதை சமதர்மக் கூட்டங்களை நடத்தினார். அதன் உச்ச நிலையாக எழுதப்பட்டதுதான் ‘இன்றைய ஆட்சி ஒழிய வேண்டும் ஏன்?’ என்னும் தலையங்கமாகும்.
இது ‘குடிஅரசு’ ஏட்டில் 29.10.1933 அன்று எழுதப்பட்டது. அன்றைய ஆங்கில அரசு பாமர மக்களுக்கு விரோதமாகவும், பணக்காரர்களுக்கு ஆதரவாகவும் எவ்வாறு விளங்குகிறது என்பதை ஒரு துறையில் மட்டும் (கல்வி) விளக்கி எழுதப்பட்ட இந்த தலையங்கம் முதலாளித்துவத்தையும் புரோகிதத் தன்மையும் கொண்ட இந்த ஆட்சி ஒழிய வேண்டும் என்று தெளிவாய் விளக்கியது.
“இந்தியாவில் இன்றைய அரசாங்கமானது ஆட்சி முறையில் எவ்வளவு தூரம் பாமர மக்களுக்கு விரோதமாகவும், பணக்காரர்களுக்கு அனுகூலமாகவும் இருக்கின்றது என்கின்ற விஷயம் ஒருபுறமிருந்தாலும், நிர்வாக முறையானது ஏழைக் குடிமக்களுக்கு மிகவும் கொடுமை விளைவிக்கக் கூடியதாகவே இருந்து வருகின்றது.
அரசியல் நிர்வாகத்திற்கென்று குடிகளிடம் இருந்து வசூலிக்கப் படும் தொகைகள் 100க்கு 75 பாகம் அக்கிரமமான வழிகளிலேயே – பெரிதும் செல்வவான்களுக்குப் பயன்படும் மாதிரியிலேயே – சிலரை செல்வவான்களாக்குவதற்குமே நடை பெறுகின்றன. பாமர மக்கள் – ஏழை மக்கள் ஆகியவர்களின் உழைப்பெல்லாம் வரியாகவே சர்க்காருக்கு போய்சேர்ந்து விடுகின்றது. அந்த வரிகள் பெரிதும் சம்பளமாகவே செலவாகி விடுகின்றன. இதன் பயனாய் ஒரு நல்ல ஆட்சியினால் குடிகளுக்கு என்ன விதமான பலன்கள் ஏற்பட வேண்டுமோ அப்பலன்களில் 100க்கு 5 பாகம் கூட ஏற்படாமல் இருந்து வருகின்றன.
பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவுக்கு வந்து சுமார் 175 வருஷகாலமாகிய பிறகும் இன்றும் கல்வித் துறையில் 100க்கு 8 பேர்களேதான் நம்மவர்கள் படிக்கத் தெரிந்தவர்களாக இருக்கி றார்கள் என்றால் அதுவும், பெரிதும் பணக்காரர்களும், மேல்ஜாதிக் காரர் களுமே என்றால் இந்த நிர்வாகமானது ஏழைகளுக்குப் பயன்படும் முறையில் தனது வரிப்பணத்தைச் செலவு செய்து இருக்கின்றது என்று சொல்ல முடியுமா? என்று கேட்கின்றோம். ஆனால் அரசாங்கத்திற்கு வரி வருமானங்கள் மாத்திரம் நாளுக்கு நாள் விஷம் ஏறுவது போல் உயர்ந்து கொண்டே வந்திருக்கிறது.
நமக்குத்தெரியவே இந்திய வருமானம், வருஷம் ஒன்றுக்கு 75 கோடி ரூபாயாக இருந்தது இன்று வருஷம் 1க்கு 175 கோடி ரூபாயாக ஆகியிருக்கின்றது. இராணுவச் செலவு வருஷம் 20 கோடி ரூபாயாக இருந்தது 7 கோடியாகி, இன்று 60 கோடியாக இருந்து வருகின்றது.
மற்ற அநேக துறைகளிலும் உத்தியோகச் செலவுகள் இதுபோலவே உயர்வாகி வருகின்றது. உதாரணமாக கல்வித்துறையை எடுத்துக் கொண்டால் கல்வி இலாகா உத்தியோகச் செலவுகள் இதுபோலவே வளர்ந்திருக்கிறது. ஆனால் கல்விப் பெருக்கத்தில் மாத்திரம் சென்ற 10ஆவது வருஷத்திற்குமுன் 100க்கு 7 பேராயிருந்த கல்விவான்கள் இன்று 100க்கு 8 பேராகத்தான் ஆகி இருக்கிறார்கள் என்றால் இந்த நிர்வாகம் ஏழை மக்களுக்கும், பொது மக்களுக்கும் அனுகூலமானது என்று எப்படிச் சொல்ல முடியும்? ரூபாய் ஒன்றுக்கு பட்டணம்படியால் 6 படி 7 படி சில இடங்களில் 8 படி அரிசி வீதமும் கிடைக்கக்கூடிய இந்தக் காலத்தில் – பி.ஏ.,எம்.ஏ. படித்த மக்கள் மாதம் ரூ.15, ரூ.20 சம்பளம்கூட வெளியில் கிடைக்காமல் திண்டாடுகின்ற இந்தக் காலத்தில் அரசாங்க நிர்வாக உத்தியோகங்களில் ஏராளமான ஆட்களை நியமித்துக்கொண்டு அவர்களுக்கு மாதம் 100, 200, 500, 1000, 5000 வீதம் சம்பளங்களை அள்ளிக் கொடுப்பதென்றால் இப்படிப்பட்ட அரசாங்கமும், அரசாங்க நிர்வாக உத்தியோகங்களும் இந்திய பாமர ஏழை குடிமக்களைச் சுரண்டும் கூட்டுக் கொள்ளை ஸ்தாபனம் என்று சொல்ல வேண்டியதா? அல்லவா? என்று கேட்கின்றோம்.
‘குடிஅரசுவின் வாயிலாகப் பெரியார் ஆற்றிய குமுகாயத் தொண்டின் தாக்கம் பற்றிக் கோவை அய்யாமுத்து அவர்கள் பொருத்தமாகத் தீட்டிய படம் இது:
“கிடைத்ததை உண்டு, சுகத்தைத் துறந்து, போகம் மறந்து. அயர்வறியாது அல்லும் பகலும் காங்கிரசில் உழைத்து வந்தது போலவே, பெரியார் ‘குடிஅரசு தொடங்கிச் சுயமரியாதைப் பிரசாரம் செய்த காலத்தும் அன்பும் அறிவும் ஆவேச உணர்வும் பொங்கிட உழைத்தார். அய்ம்பது ஆண்டுகளில் செயற்கரிய காரியத்தை அவர் அய்ந்தே ஆண்டுகளில் செய்து முடித்தது கண்டு வியப்படையாதோர் இலர்!”
இச்சான்றுரைகள் யாவும் மிகையானவை அன்று; மெய்யானவை!
ஆக ‘குடிஅரசு’ என்பது வெறும் இதழாக இல்லாமல் ஓர் இயக்கமாக விளங்கிற்று. சுயமரியாதை இயக்கந்தான் ‘குடிஅரசு’ இயக்கம்; ‘குடிஅரசு’ இயக்கந்தான் சுயமரியாதை இயக்கம். இரண்டும் ஒன்றுக்கொன்று மாற்றுப் பெயராக இலங்கின.
சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரியாரே ‘குடிஅரசு இயக்கம்’ என்று குறிப்பிட நேர்ந்தது.
“பிராமணரல்லாதார் இயக்கம் உத்தியோகத்திற்கு ஏற்பட்டதென்று எண்ணிக் கொண்டு கவலையில்லாமல் இருந்துவிட்டோம். அது ‘குடிஅரசு’ இயக்கத்தில் சேர்ந்து கொண்டு, உரிமையை ஸ்தாபித்துக் கொள்ளுவதற்கு என்று சொல்லிக் கொண்டு, மத விஷயத்திலும் கோவில் விஷயத்திலும் புகுந்து நம்மை அடியோடு கவிழ்க்க ஆரம்பித்து, ஆயிரக்கணக்கான வருடங்களாய் நாம் அனுபவித்து வந்த உரிமையை இப்போது பலாத்காரமாய்ப் பிடுங்கிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறது. சுயமரியாதைக்காரர்கள் செய்து வரும் பிரச்சாரத்தின் கொடுமை ஊர் ஊராகச் சுற்றிப் பார்ப்பவர்களுத்தான் தெரியும்.”
– ‘குடிஅரசு’ 26.08.1928
ஆச்சாரியாரின் கூற்றில் சுயமரியாதை இயக்கத்தின் பெருந்தாக்கம், அது ‘குடிஅரசு இயக்கம்’ என்று அழைக்கப்பட்டமை ஆகிய இரண்டு உண்மைகளும் அடங்கியிருக்கின்றன. எப்படி தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தினர் நடத்திவந்த ‘Justice’ என்னும் இதழின் அடிப்படையில், ‘Justice Party’, நீதிக்கட்சி என்ற பெயர்கள் புழக்கத்திற்கு வந்தன எனும் உண்மையை நாம் அறிவோம். அதற்கு முன்னோடிதான் சுயமரியாதை இயக்கம் ‘குடி அரசு’ இயக்கம் என்று வழங்கப்பட்டமை,
“என் கருத்துகளை வரும் தலைமுறையினர்க்கு விட்டுச் செல்ல வேண்டியது என்னுடைய கடமை” என்னும் உறுதிப்பாட்டுடன் ‘குடிஅரசு’ ஏட்டை ஈன்ற பெரியார், அதைப் பேணி வளர்ப்பதற்கான முறைகளைச் செம்மையாகக் கையாண்டார்.
‘குடிஅரசு’ முதல் இதழின் முதற்பக்கத்தில், “சிறந்த தமிழ்ப் பத்திரிகை, வருட சந்தா” ரூபாய் மூன்றுதான் என்பதோடு, “தமிழ் மக்கள் எல்லாத்துறைகளிலும் முன்னேற்றமடைய உழைக்கும் பத்திரிகை இது. ஆகையால் இதனை ஆதரிக்க வேண்டுவது உங்கள் முதற்கடன் ஆகும். உடனே சந்தாதாரராய்ச் சேருங்கள்” என்றும் பெரிய எழுத்துகளில் பொறித்து, தமிழ்கூறு நல்லுலகத்திற்கு இதழியல் வரலாற்றில் இணையில்லாப் பெருமை படைத்த ‘குடிஅரசு’ ஏட்டை அறிமுகம் செய்தார் பெரியார்.
ஓய்வு – இல்லை
தாம் ஓய்வெடுத்துக் கொள்ளும் பொருள்பற்றி பெரியார் மிகவும் சுவையாக எழுதியிருக்கிறார்.
“ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டிய சமயம் நமக்குத் தெரியும். அதாவது நமது தொண்டு நாட்டிற்கு உதவாது என்றாவது, நமது தொண்டை நாட்டார் ஏற்பதில்லை என்றாவது நமக்குத் தெரிந்தால் யாரிடமும் சொல்லாமல் நாமே ஓய்வெடுத்துக் கொள்வோம். அதுவரை எடுத்துக்கொள்ளும் ஓய்வு உண்மையான ஓய்வாகாது. அப்படிக் கடுமையாக ஓய்வெடுத்துக் கொண்டுதான் ஆகவேண்டும் என்கிற முறையில் நமது உடலில் கோளாறு ஒன்றும் இது சமயம் இல்லை என்றே நினைக்கிறேன்.”
– ‘குடிஅரசு’ 17.07.1927
இப்படி அவர் எழுதியதற்குப் பிறகு எவரேனும் அவரை ஓய்வெடுக்குமாறு வற்புறுத்த முன்வர முடியுமா? தமது இறுதிப் படுக்கைக்குச் செல்லும்வரை பெரியார் ஓய்வெடுக்காமல் தமிழினத் தொண்டு செய்து கொண்டிருந்தார் என்பதை அனைத்துலகும் அறியும்.
– பெரியார் பேருரையாளர் அ.இறையன்
நூல்: ‘இதழாளர் பெரியார்’
இன்றைய ஆட்சியானது அழிக்கப்படவேண்டியது என்பதற்கு இந்த ஓர் உதாரணம் போதாதா என்றும் கேட்கின்றோம். ஆட்சி நிர்வாகம் என்பது சுத்த விளையாட்டுத் தனமாகவும், யோக்கியப் பொறுப்பற்ற தனமாகவும் இருந்து வருகின்றது என்பதற்கு இதைவிட வேறு என்ன அத்தாட்சி வேண்டும். சென்னை மாகாணமானது சுமார் 20 வருஷங்களுக்கு முன்பு 2 மந்திரிகளாலேயே நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது யாவரும் அறிந்ததாகும்.
ஆனால் இப்பொழுது 7-மந்திரிகளால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றது. இதன் பயனாய் மக்கள் அடைந்த பயன் என்ன என்பதைக் கவனித்தோமானால் மேலே கூறியபடி 2-மந்திரிகள் இருக்கும்போது 100-க்கு 7-பேர் படித்தவர்களாய் இருந்தது. இப்போது கல்விக்காக என்று ஒரு தனி மந்திரி மாதம் ரூ. 5000 சம்பளத்தில் ஏற்படுத்தி அந்த இலாக்காவில் 20-வருஷங்களுக்கு முன் இருந்ததைவிட 100-க்கு 200 பங்கு பணம் அதிகம் செலவழித்தும் இன்றும் 100-க்கு 8-பேர் படித்தவர்களாய் இருக்கிறார்கள் என்கின்ற அளவில்தான் அபிவிருத்தி காட்டப்படுகின்றது.
ஆனால் இந்த மந்திரிப் பதவிகள் இந்தப்படி 100-க்கு 350-பங்கு வளர்ந்ததற்கு காரணம் என்ன என்று பார்ப்போமானால் ஆட்சி முறையை ஒரு திருட்டு தனம்போலவும் மந்திரிப் பதவிக்காரர்கள் அந்தத் திருட்டில் தங்களுக்கு ஒரு பாகம் கூட்டுக் கொடுக்காவிட்டால் அத்திருட்டைக் காட்டிக் கொடுத்துவிடுவோம் என்று மிரட்டி பங்கு பெற்றது போலவும்தான் ஆகி இருக்கின்றதே தவிர வேறு ஒன்றுமே இல்லை.
இப்படி 100-க்கு 8-வீதமான கல்வி என்பதும் செல்வவான் வீட்டுப்பிள்ளைகளுக்கு மாத்திரம் கிடைக்கும்படியாகவேதான் கல்வியின் தத்துவமும், கல்வி இலாகாவும் அமைக்கப் பட்டிருக்கின்றது.
உதாரணமாக ஒரு பையன் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வெளிவர வேண்டுமானால் மாதம் 1-க்கு 5-4-0 ரூ. சம்பளம் கொடுக்க வேண்டும். அவன் புத்தகம் முதலியவைகளுக்கு மாதம் 2-ரூ. வீதம் செல்லும். ஆக மாதம் ரூ.7-4-0 வீதம் ஒரு மாணவனுடைய படிப்புக்கு வேண்டி இருக்கிறது. இந்த தொகையான மாதம் ரூ.7-4-0 கூட 4,5 பேர்களைக்கொண்ட ஒரு குடும்பத்திற்கு வரும்படி இல்லாத மக்கள் நம் நாட்டில் 100-க்கு 60, 70 பேர்கள் இருப்பார்கள் என்றால் இவர்கள் வீட்டுப்பிள்ளைகள் எல்லாம் எப்படி படிக்கமுடியும் என்பதை யோசித்துப் பார்த்தால் கல்வி தத்துவத்தின் புரட்டும், அயோக்கியத் தனமும், சுலபத்தில் விளங்காமல் போகாது. மேற்கண்ட கல்விச் செலவானது மாதம் ரூ.7-4-0 என்பது பட்டணத்துப் பிள்ளைகளுக்குத் தானே ஒழிய, கிராமாந்திர பிள்ளைகளுக்குப் பட்டணங்களுக்குச் சென்று படிக்க மாதம் ரூ.17-4-0 ஆகிவிடுமென்பதை நினைத்துப் பார்த்தால் 100-ல் 1 பிள்ளையாவது குறைந்தபட்ச பட்டப்படிப்பு என்னும் எஸ்.எஸ்.எல்.சி. படிப்பு படிக்க முடியுமா? என்று கேட்கின்றோம்.
‘குடிஅரசு’ இதழ்க் குறிப்புகள்
தலையங்கப் பகுதி
அ) துவக்க இதழ் முதல், 09.02.1930 இதழ் (மாலை 5: மலர் 37) வரை தலையங்கப் பகுதிக்கு மேல் ராட்டை சின்னம் காணப்படுகிறது. அதன்பின் இச்சின்னம் இல்லை.
ஆ) துவக்க இதழ் முதல், 03.08.1930 (மாலை 6: மலர் 16) வரை.
“அனைத்துயிர் ஒன்றென் றெண்ணி
அரும்பசி யெவற்கும் ஆற்றி
மனத்துளே பேதாபேதம்
வஞ்சம் பொய் களவு சூது
சினத்தையும் தவிர்ப்பாயாகில்
செய்தவம் வேறொன் றுண்டோ
உனக்கிது உறுதியான
உபதேசம் ஆகும்தானே”
என்ற பாடல் தலையங்கத்திற்கு மேல் இடம் பெற்றுள்ளது.
எழுத்துச் சீர்திருத்தம்
06.01.1935 ‘பகுத்தறிவு’ இதழிலிருந்து (மாலை 1: மலர் 20) தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் இடம் பெற்றுள்ளது. ‘குடிஅரசு’ இதழில் 13.01.1935 இதழ் முதல் (மாலை 29: மலர் 23) எழுத்துச் சீர்திருத்தம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
பொது
‘குடிஅரசு இதழ் 05.11.1949ல் கடைசியாக வெளிவந்தது. துவக்கம் முதல் இறுதிவரை வந்த இதழ்களின் பதிவு எண்கள் பற்றிய விவரம் வருமாறு:
‘குடிஅரசு’ இதழ் துவக்கம் முதல் 1940 வரை 2041அய் பதிவு எண்ணாகவும், 1943 முதல் 1947 வரை 4593 அய் பதிவு எண்ணாகவும் 15.11.1947 முதல் 1949 வரை 4900-அய் பதிவு எண்ணாகவும் கொண்டிருந்தது. ‘புரட்சி’ இதழின் எண்: 2992 “பகுத்தறிவு” இதழின் பதிவு எண்: 3066.
மக்கள் நிலை இந்தப்படி இருக்கும்போது இந்தப் படிப்புச் சொல்லிக் கொடுக்கும் உபாத்தியாயர்களுக்கு மாதம் ரூ.75 முதல் 350 வரை சம்பளம் கொடுப்பது என்றால் இது எவ்வளவு கொடுங்கோன்மையான நிர்வாகம் என்பதற்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும். மாதம் ஒன்றுக்கு ரூ.30 – ரூ.35 சம்பளத்தில் வேலைக்கு வருவதற்கு 100க்கணக்கான பி.ஏ., எல்.டி.,கள் இன்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தப்படி பலர் அமர்ந்தும் இருக்கிறார்கள்.
அதுமாத்திரமல்லாமல் பி.ஏ., எல்.டி. படிப்பையும் பரீட்சையையும், வஞ்சகமில்லாமல் இன்னும் சிறிது தாராளமாய் விட்டால் மாதம் ஒன்றுக்கு 20 ரூபாயிலும், 25 ரூபாயிலும் கிடைக்கும் படியாக ஆயிரக்கணக்கான பி.ஏ., எல்.டி. உபாத்தியாயர்களைக் காணலாம். அப்படிக்கெல்லாம் இருக்க படிப்புக்காக மக்களிடம் இருந்து வசூலிக்கும் வரியையும் அபாரமாக்கி தனிப்பட்ட முறையில் படிப்புக்காக பெற்றோர்கள் செய்யவேண்டிய செலவையும் அபாரமாக்கி அவ்வளவையும், உபாத்தியாயர்களுக்கும் படிப்பு இலாகா நிர்வாக உத்தியோகஸ்தர்கள் என்பவர் களுக்கும் வீணாய்க் கொட்டிக் கொடுத்து அந்தக் கூட்டத்தைச் செல்வவான்களாகவும் ராஜபோகக் காரராகவும் ஆக்குவதல்லாமல் அந்தப்படிப்பால் மக்களுக்குப் பலனும் இல்லாமல் செய்து மொத்த ஜனத்தொகையில் 100-க்கு 92 பேர்களைக் கையெழுத் துக் கூடப்போடத் தெரியாமல் தற்குறிகளாய் வைக்கப்பட்டிருக்கிறதென்றால் இந்த அக்கிரமங்களை மக்கள் எப்படித்தான் சகித்துக் கொண்டிருப்பது என்பது நமக்கு விளங்கவில்லை.
இப்படிப்பட்ட கொடுமைகளையும் அயோக்கியத்தனங்களையும் மக்கள் என்றென்றும் தெரிந்துகொள்ளாமலும், தெரிந்தாலும் சகித்துக் கொண்டும் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளுக்குக் கடவுள் செயல் பிரசாரத்தையும் ராஜபக்தி பிரசாரத்தையும் கொண்ட புஸ்தகமும் படிப்பும் கற்பிக்கப்படுகின்றது என்று தீர்மானிக்க வேண்டியதாய் இருக்கிறது.
ஆயிரம் சமாதானம் சொன்னபோதிலும் இன்றைய ஆட்சி முறையும் நிர்வாக முறையும் முதலாளித்தன்மை கொண்டது என்பதிலும். இவை ஏழைமக்களுக்கு விஷம் போன்றது என்பதிலும், கண்டிப்பாக இவை அழிக்கப்பட்டே ஆகவேண்டும் என்பதிலும் நமக்குச் சிறிதும் சந்தேகமோ, தயவோ தாட்சண்யமோ தோன்ற வில்லை. ஆனால் இப்படிப்பட்ட சூழ்ச்சி ஆட்சித் தன்மைக்கு இந்தியாவில் இன்று தூண்கள் போல் இருந்து வருபவை முதலாளித் தன்மையும் புரோகிதத் தன்மையுமே பிரதானமாகும். அதற்கேற்ற முறையிலேயே காங்கிரசும் – காந்தியமும் வேலை செய்துகொண்டு வந்திருக்கின்றது என்பதுடன் அதில் இருந்தால் தங்களுக்குப் பதவி கிடைக்காது எனக் கருதி வெளிவந்து அவற்றோடு போட்டி போட்டுக்கொண்டு இருக்கும் மற்ற அரசியல் ஸ்தாபனங்களுமே நடுத்தூண்களாய் இருந்து வருகின்றன.
இந்தக் காரணத்தால்தான் நாம் காங்கிரசை அழித்தாக வேண்டும் என்றும் காந்தியத்தை ஒழித்தாக வேண்டும் என்றும் அதே தத்துவம் கொண்ட மற்ற அரசியல் கிளர்ச்சிகளையும் ஒழிக்க வேண்டும் என்றும் புரோகித சம்பந்தமான எந்த உணர்ச்சியையும் அடியோடு புதைத்தாக வேண்டும் என்றும் கூப்பாடு போடுகின்றோம்.
இக்கூப்பாட்டைக் கண்டு முதலாளிகளும் முதலாளிகளின் கூலிகளும் உத்தியோக வர்க்கங்களும் உறுமுவதில் நமக்கு அதிசயமொன்றுமில்லை. ஆனால் ஏழை மக்கள் தொழிலாளிகள் சரீரத்தால் சதாகாலமும் பாடுபட்டுத் துன்பப்படும் கூலிமக்கள், முதலாளிகளுக்கும் முதலாளிகள் கூலிகளுக்கும், ஆதரவளிப்பதும் அவர்களை அண்டுவதும் நமக்கு அதிசயமாய் இருக்கின்றது. ஆகையால் வரப்போகும் தேர்தல்களில் ஏழை மக்கள், தொழிலாளிகள் ஆகியவர்கள் இவற்றை உணர்ந்து ஏமாந்து போகாமல் நடந்து கொள்வார்களாக.”
– ‘குடிஅரசு’ தலையங்கம், 29.10.1933
(தொடரும்)