அமைச்சர் அன்பரசன் தகவல்
சென்னை, மே 16 திமுக ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 53,333 குடியிருப்புகள் மகளிர் பெயரில் ஒதுக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
ஒளிப்பட
கண்காட்சி
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலு வலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், வாரியத்தால் கடந்த 4 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகள் குறித்த ஒளிப்பட கண்காட்சியை நேற்று (15.5.2025) திறந்து வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் அன்பரசன் பேசியதாவது:
திமுக அரசு பொறுப்பேற்று கடந்த 4 ஆண்டில் ரூ.3,490.35 கோடி மதிப்பீட்டில் 65 திட்டப்பகுதிகளில் 22,719 குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. இதில், பல பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. ரூ.5,418.58 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வந்த 47,419 அடுக்குமாடி குடியிருப்புகளின் பணிகள் முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது
மகளிர் பெயரில் 53,333 வீடுகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகள்!
கட்டப்பட்ட புதிய குடியிருப்பு கள் முதலமைச்சர் உத்தரவின் படி மகளிர் பெயரில் 53,333 வீடுகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கி அவர்களை சமூகத்தில் மதிப்புமிக்கவர்களாக மாற்றியுள்ளோம்.
மறுகட்டுமான திட்டத்தின் கீழ் குடியிருப்புதாரர்கள் இடம்பெயர வழங்கப்பட்ட கருணைத் தொகை ரூ.8 ஆயிரத்தை ரூ.24 ஆயிரமாக உயர்த்தி இதுவரை 10,081 குடும்பங்களுக்கு ரூ.23.96 கோடி கருணைத் தொகை வழங்கப் பட்டுள்ளது. இவற்றை எல்லாம் பொது மக்களிடம் கொண்டு செல்ல தமிழ்நாடு முழுவதும் ஒரு மாத காலத்துக்கு வாரிய திட்டப்பகுதிகளில் இந்த கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள்…
அறிவிக்கப்பட்டுள்ள மறுகட்டு மான திட்டப்பகுதிகளில் கருணைத் தொகை வழங்குவது, வீடுகளை காலி செய்வது, குடியிருப்புகளை இடிப்பது ஆகிய பணிகளை அடுத்த மாதத்துக்குள் முடிக்க வேண்டும். பழுது பார்ப்பது மற்றும் சீரமைப்பு திட்டத்தின் கீழ் நடப்பாண்டும் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சீரமைக்கப்பட வேண்டி உள்ளது. எனவே, தலைமை பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள் இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். கட்டடப் பணிகள் முடிக்கப்பட்டுள்ள திட்டப்பகுதிகளில் குடிநீர், மின்சாரம், அடிப்படை வசதிகளை விரைவாக நிறைவேற்றி திறப்பு விழாவுக்கு கொண்டு வரவேண்டும். திறப்புக்கு தயாராக உள்ள திட்டப்பகுதிகளை தலைமைப் பொறியாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும். இந்த ஆண்டு இறுதிக்குள் திறப்பு விழாவுக்கு கொண்டு வர வேண்டிய திட்டப்பணிகளை தாமதம் இன்றி நிறைவேற்ற வேண்டும்.
புதிதாக கட்டப்பட்டு வரும் குடி யிருப்புகளை வல்லுநர்கள் குழுவை கொண்டு ஆய்வு செய்து அறிக்கை பெறப்பட வேண்டும். திறந்து வைக்கப்பட்ட திட்டப்பகுதிகள் முடியும் தருவாயில் உள்ள திட்டப்பகுதிகளுக்கு பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும். எம்யுடிபி, டிஎன்யுடிபி மனைகளுக்கு கிரை யப்பத்திரம் வழங்க அந்தந்த திட்டப்பகுதிகளிலேயே முகாம்கள் நடத்தப்பட வேண்டும். வாரிய குடியிருப்புதாரர்களிடமிருந்து தவணைத் தொகையை காலம் தாழ்த்தாது வசூலிக்கப்பட வேண்டும். பணியாளர்கள் முழு அளவில் நியமிக்கப்பட்டுள்ளதால் தவணைத் தொகை வசூலிப்பதில் காலதாமதம் இனி இருக்கக் கூடாது.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டும் திட்டங்களை காலதாமதம் இன்றி, நிறைவேற்ற வேண்டும். அனைத்து திட்டப் பகுதி களிலும் குடிநீர், மின்சாரம், மின்தூக்கி ஆகியவற்றை முறையாக பராமரிக்க வேண்டும். கழிவுநீர் தேங்காதவாறு தூய்மையாக பராமரிக்க வேண்டும். பொதுமக்களிடம் இருந்து எவ்வித புகார்களும் வராதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.