‘காவல்துறையில் பெண்கள்’ 11 ஆவது தேசிய மாநாட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!

viduthalai
7 Min Read

பெண்கள் பற்றிய பழைமைவாத பார்வைகளுக்கெதிராக களம் கண்டவர் தந்தை பெரியார்!
‘‘பெண்களுக்கு அதிகாரமளிப்பதுதான் நல்லாட்சியின் அடிப்படை விதி’’ என்ற நமது முதலமைச்சரின் கூற்றுப்படி
உங்கள் பயணம் வரும் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கட்டும்!

சென்னை, மே16–  தந்தை பெரியார், பெண்கள் பற்றிய பழைமைவாத பார்வைகளுக்கெதிராக களம் கண்டவர். ‘‘பெண்களுக்கு அதிகாரமளிப்பதுதான் நல்லாட்சியின் அடிப்படை விதி’’ என்ற நமது முதலமைச்சரின் கூற்றுப்படி உங்கள் பயணம் வரும் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கட்டும் என்றார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

சென்னை, வண்டலூர் ‘போலீஸ் அகாடமி’யில், இரண்டு நாள்கள் நடைபெற்ற `காவல் துறையில் பெண்கள்’ – 11 ஆவது தேசிய மாநாட்டு நிறைவு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு விழா சிறப்புரையாற்றினார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:

1998 ஆம் ஆண்டு டாக்டர் கலைஞர் அவர்கள் தாமே தேர்ந்தெடுத்த நிலப்பகுதியில், 2008 ஆம் ஆண்டு அவர் திறந்து வைத்து, காவல்துறைக்கு அர்ப்பணித்த தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியக வளாகத்தில் உங்களுடன் உரையாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

பெருமையான தருணம்

தமிழ்நாட்டில் முதன்முறையாக காவல்துறையில் பெண்கள் தேசிய மாநாட்டை நடத்துவது எங்களுக்கு மிகவும் பெருமையான தருணம். இம்மாநாடு நாடு முழுவதும் காவல் துறையில் பணியாற்றும் பெண்களிடையே உரையாடல், கொள்கைசார் விவாதங்கள், அதிகாரமளித்தல் மற்றும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துகின்ற தளமாக விளங்கு கின்றது. இது காவல்துறை தலைமைக்கும் ஏனையோருக்கும் இடையேயான நேரடித் தொடர்புக்கான வழியாக செயல்படு கிறது.

ஆண்டாண்டு காலமாக மரபார்ந்த குடும்பப் பொறுப்பு களில் மட்டுமே சிறை வைக்கப்பட்டிருந்த பெண்கள், தற்போது காவல்துறை அதிகாரிகளாக உருவாவது, நமது சமூகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகும். கடந்த காலத்திற்கும் தற்காலத்திற்குமான பெண்களின் இப்பயணம், கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், சமூக உரிமைகள் மற்றும் தலைமைத்துவத்திலும் நிகழ்ந்த சக்திவாய்ந்த புரட்சியைப் பிரதிபலிக்கிறது. மவுனத்திலிருந்து வலிமைக்கும், பிறரை சார்ந்திருக்கும் நிலையிலிருந்து முடிவெடுக்கும் பதவிகளுக்கும், பிறருக்கு அடங்கிப் போய் செயல்பட்ட பொறுப்புகளிலிருந்து தன்னிச்சையான முன்னெ டுப்புகளுக்கான இந்த மாற்றம் பெண்களை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், நமது ஒட்டுமொத்த சமூகத்தையும் முற்போக்குப்பாதையில் முன்னேறிச் செல்ல வைக்கிறது.

கலைஞரின் செயற்கரிய செயல்

பெண்களின் முன்னேற்றம், சமூக வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பது, நமது திராவிட இயக்கத்தின் உறுதி யான நம்பிக்கை. தொலைநோக்குப் பார்வை கொண்டிருந்த நமது தலைவர் தந்தை பெரியார், பெண்கள் பற்றிய பழைமைவாத பார்வைகளுக்கெதிராக களம் கண்டவர். மேனாள் முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனருமான பேரறிஞர் அண்ணா அந்தக் தொலை நோக்குப் பார்வையை, அரசாங்கக் கொள்கைகளாக மாற்றினார்.

டாக்டர் கலைஞர் தனது வாழ்நாள் முழுவதும் இந்தக் கொள்கைகள், பெண்களுக்கு ஆதரவளிக்கும் அரசுத் திட்டங்களாக நிலைபெறுவதை உறுதி செய்தார். தான் முதலமைச்சராக இருந்த 1971 ஆம் ஆண்டு முதல் 1976 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பெண்களை காவல்துறையில் அறிமுகப்படுத்தியது முத்தமிழறிஞர் கலைஞரின் செயற்கரிய செயல். தமிழ்நாடு காவல்துறையில் முதன்முதலில் பெண்களை முறையாக பணியமர்த்தியது, 1973 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், 22  உறுப்பினர்களைக் கொண்ட அனைத்து மகளிர் காவல் பிரிவு நிறுவப்பட்டபோதுதான்.

முடிவெடுக்கும் நிலைகளில் பெண்கள்

50 ஆண்டுகளுக்கு முன்பு 22 பெண்களுடன் தொடங்கிய இம்முன்னெடுப்பு, தற்போது சுமார் 27 ஆயிரம் பெண்களைக் கொண்ட பெரிய காவல்படையாக வளர்ந்துள்ளது. இது நாட்டின் மிகப்பெரிய படைகளில் ஒன்றாகும். 1989 ஆம் ஆண்டு, கலைஞர்தான் அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு வழங்குவதன் மூலம், அரசாங்கத்தின் முடிவெடுக்கும் நிலைகளில் பெண்கள் இடம்பெறுவதை உறுதிசெய்தார்.

இதன் விளைவாக, நேரடியாகப் பணியமர்த்தப்பட்ட பெண் துணை காவல் கண்காணிப்பாளர்கள் முதன்முறை யாக காவல்துறையில் நுழைந்தனர். அவர்கள் படிப்படியாக காவல்துறை கூடுதல் இயக்குநர்களாகவும், காவல்துறை தலைவர்களாகவும் உயர்ந்து, எண்ணிக்கையிலும், பங்களிப்பிலும் தொடர்ந்து வளர்ந்து வருகின்றனர். முத்தமி ழறிஞர் கலைஞர் அவர்களின் இத்தகைய பங்களிப்புகளை நினைவுகூர்ந்து கவுரவிக்கும்விதமாக, தமிழ்நாடு அரசு சமீபத்தில் சிறந்த பெண் காவல்துறையினருக்கான `கலைஞர் விருது மற்றும் கோப்பையை’ நிறுவியுள்ளது.

நல்லாட்சியின் அடிப்படை விதி

இன்று, பெண்களை பொது நீரோட்டத்தில் கொண்டு வருவதில், தமிழ்நாடு காவல்துறை சிறந்த எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது. நமது மாநிலத்தில் 43% சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களுக்கு பெண்களே தலைமை அதிகாரிகளாகப் பணிபுரிகிறார்கள் என்பது பெருமைக்குரிய புள்ளிவிவரமாகும். குற்ற விசாரணைகள், போக்குவரத்து மேலாண்மை, உளவுத்துறை, ரயில்வே காவல்துறை, சைபர் குற்றம் கையாளுதல், கமாண்டோக்கள் அல்லது முதல மைச்சரின் பாதுகாப்பு எதுவாக இருந்தாலும், தமிழ்நாட்டின் காவல்துறை மகளிர் அதை மிகுந்த தன்னம்பிக்கையுடனும் திறமையுடனும் கையாண்டு வருகின்றனர். இவை எல்லாவற்றையும் ரத்தினச் சுருக்கமாக்கிதான், `பெண்களுக்கு அதிகாரமளிப்பதுதான் நல்லாட்சியின் அடிப்படை விதி’ என்று நமது முதலமைச்சர் கூறியுள்ளார்.

2023 ஆம் ஆண்டில், தமிழ்நாடு காவல்துறையில் பெண்களின் 50 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக, பணியில் உள்ளவர்களை கவுரவிப்பதற்கும், இத்துறையில் மேலும் பலரை வரவேற்பதற்கும் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தொடர் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த நிகழ்வில், தமிழ்நாடு முதலமைச்சர் காவல்துறை மகளிருக்கான நவரத்தின நலத்திட்டங்களை அறிவித்தார்:

நவரத்தின நலத்திட்டங்கள்

  1. பெண் காவலர்களுக்கான காலை வருகைப் பதிவு (ரோல் கால்) அவர்களின் தனிப்பட்ட மற்றும் குடும்பப் பொறுப்புகளைப் பூர்த்தி செய்வதற்காக, காலை 7 மணியிலிருந்து காலை 8 மணியாக மாற்றப்பட்டது.
  2. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலை யங்களிலும் பெண் காவலர்களுக்கு தனித்தனி கழிப்பறைகள் மற்றும் ஓய்வு அறை வசதிகள் ஏற்படுத்தப்படும்.
  3. நீதிமன்றப் பணிகள் மற்றும் பிற அலுவல்சார் பணிகளுக்காக சென்னை மற்றும் மதுரை பெண் காவலர்களின் வசதிக்காக தங்கும் விடுதிகள் கட்டப்படும்.
  4. இளம்குழந்தைகளைக் கொண்ட பெண் பணியா ளர்களின் பணி–வாழ்க்கை சமநிலையை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் பகல்நேர குழந்தைப் பராமரிப்பு மய்யங்கள் அமைக்கப்படும்.
  5. சிறப்பாகச் சேவை செய்துவரும் பெண் காவலர்களை அங்கீகரித்து, வெகுமதி அளிக்க முத்தமிழறிஞர் கலைஞர் நினைவாக புதிய விருது.
  6. பெண் காவலர்களுக்கு அவர்களின் குடும்பப் பொறுப்புகள் மற்றும் பராமரிப்புப் பணிகளைக் கருத்தில் கொண்டு விடுப்பு மற்றும் இடமாற்றக் கோரிக்கைகளைப் பரிசீலிப்பதற்கான புதிய விதிமுறைகள்.
  7. பெண் காவலர்களுக்கும் ஏனைய மகளிருக்கும் தற்காப்புக்கலையில் பயிற்சியளிக்க, ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் `அவள்’ திட்டம்.
  8. உயர் பதவிகளுக்குத் தயாராவதற்கு ஏதுவாக பணித்திறன் மேம்பாட்டு மன்றங்கள் மற்றும் வழிகாட்டு அமைப்புகளை நிறுவுதல்.
  9. தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள், வருடாந்திர பெண்கள் துப்பாக்கிச் சூடு போட்டி மற்றும் திறன் மேம்பாட்டிற்கான கருத்தரங்குகளை நடத்துதல்.

இந்த ஒன்பது திட்டங்களும் பெண் காவல்துறையினரின் வாழ்க்கையிலும் பணிச்சூழலிலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆண்களும், பெண்களும் ஒருங்கிணைந்த சமூகமாக அடைய வேண்டிய புதிய சிகரங்களை, நாம் தொடர்ந்து அடை யாளம் கண்டு, அனைவரையும் உள்ளடக்கிய, சமநீதி மற்றும் முற்போக்குச் சிந்தனைகள் கொண்ட சமூகத்தை நோக்கி முன்னேறுவோம். அதற்கான உத்வேகத்தை அதிகரித்து, காவல்துறையில் மகளிருக்கான புதிய வரையறைகளை இந்த தேசிய மாநாடு உருவாக்கட்டும்.

இந்த இரண்டு நாள்களும் பல ஆக்கப்பூர்வமான விவா தங்களை, நீங்கள் நடத்தியிருப்பீர்கள் என நான் நம்புகிறேன். இவை தகுந்த விதத்தில் ஆவணப்படுத்தப்பட்டு, செய லாக்கம் பெறக்கூடிய பரிந்துரைகள் அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

தொலைநோக்குப் பார்வை

காவல்துறையில் பெண்களுக்கான தேசிய மாநாட்டைச் சிறப்பாக ஏற்பாடு செய்வதில், அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணியகத்திற்கும், தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஆதரவளித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மிக முக்கியமாக, இந்த மாநாட்டை சாத்தியமாக்கிய நமது முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்குப் பார்வை, வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நிறைவாக, இந்த மாநாட்டில் பங்கேற்ற அனைத்து மாநிலங்களின் அனைத்து காவல்துறை பெண் அதிகாரிகள், மத்திய ஆயுதப்படைகளின் பெண் பிரதிநிதிகள் மற்றும் தமிழ்நாடு காவல்துறையின் பெண் காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் பயணம் வரும் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கட்டும். இந்நாட்டிற்கு ஆற்றிவரும் சேவைக்காகவும், சமூக பங்களிப்பிற்காகவும் அனைத்து காவல்துறை மகளிருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி கூறுகிறேன். மாற்றத்திற்கான உண்மையான முகம் நீங்கள்தான். இவ்வாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.

பங்கேற்றவர்கள்

தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் சங்கர் ஜிவால் அய்.பி.எஸ்., தீயணைப்புத்துறை தலைமை இயக்குநர் சீமா அகர்வால் அய்.பி.எஸ்., காவல் பயிற்சித்துறை தலைமை இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோர் அய்.பி.எஸ்., காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணியக கூடுதல் தலைமை இயக்குநர் ரவிஜோசப் லோகு, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் அய்.ஏ.எஸ்., காவல்துறை மேனாள் தலைமை இயக்குநர் லத்திகா சரண் அய்.பி.எஸ்., மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த காவல்துறை பெண் அதிகாரிகள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *