துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
சென்னை, மே 15 சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டுதலுக்கான கல்லூரி கனவு-2025 நிகழ்ச்சி நேற்று (14.5.2025) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தமிழ்நாடு முழுவதும் காணொலிக் காட்சி வாயிலாக திட்டத்தை தொடங்கி வைத்து, உயர்கல்வி வழிகாட்டி புத்தகத்தையும் வெளியிட்டார். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உண்டு உறைவிட பயிற்சி பெற்று, ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வு வாரியம் (எஸ்எஸ்சி), ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (ஆர்ஆர்பி) மற்றும் வங்கிப் பணி தேர்வுகளில் வெற்றி பெற்ற 58 மாணவ-மாணவிகளை பாராட்டி கேடயங்களையும் வழங்கினார்.
மாணவர்கள் எண்ணிக்கை உயர்வு
விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: உயர்கல்விக்காக அயல் நாடுகளுக்கு செல்லும் மாணவர் களுக்கு ஒரு சரியான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்கவே ‘கல்லூரிக் கனவு’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. உயர் கல்வியில் படிக்கும் நம் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.தற்போது தமிழ்நாட்டில் பள்ளிகளில் இருந்து உயர்கல்வியில் சேருகின்ற மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் இது இன்றைக்கு 52 சதவீதம். ஒட்டுமொத்த இந்தியாவின் சதவீதத்தை எடுத்துப் பார்த்தீர்கள் என்றால், வெறும் 29 சதவீதம்தான். தமிழ்நாடு அடைந்துள்ள இந்த வளர்ச்சியை பிற மாநிலங்கள் அடைய வேண்டுமென்றால் இன்னும் 10, 15 ஆண்டுகள் பிடிக்கலாம்.
உயர்கல்வி சேர்க்கையை பொறுத்த வரை நுழைவுத் தேர்வே இருக்கக் கூடாது என்பதுதான் திமுக அரசின் கொள்கை. அதனால்தான், புதிய கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்க்கிறோம். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ், சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் சந்திரமோகன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் கிராந்தி குமார் பாடி, நான் முதல்வன் போட்டி தேர்வு சிறப்பு திட்ட இயக்குநர் சுதாகரன், தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் உறுப்பினர் செயலாளர் சுதன் (ஓய்வு), பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் கலந்து கொண்டனர்.