உலகின் பல நாடுகளில் பயணம் செய்து தந்தை பெரியார் கொள்கையை பரப்பும் பணியில்…
வழக்குரைஞர்
அ. அருள்மொழி
பிரச்சாரச் செயலாளர்,
திராவிடர் கழகம்
பாடம் 5
கொள்கை உறவுகளுக்கு எல்லைகள் இல்லை
5.3.2025 அன்று ஆசிரியர் அவர்கள் தனது உரையை ,ஆஸ்திரேலிய அரசின் விதிமுறையின் படி ஆஸ்திரேலிய தொல்குடி மக்களின் உரிமைகளை அங்கீகரிக்கும் உறுதிமொழியுடன் தொடங்கினார்.
மார்ச் 8 உலக உழைக்கும் மகளிர் நாள் என்பதால், அதனை ஒட்டியே ஆஸ்திரேலியா பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் கூட்டங்களை அமைத்திருந்தது. எனவே ஆசிரியரின் உரையும் இந்தியாவில் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது என்பதையும் மனுதர்ம அநீதியை எதிர்த்து தந்தை பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கம் பெண்களின் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்களையும்,பெண்கள் சமுதாயம் அடைந்துள்ள வளர்ச்சியையும் மய்யப்படுத்தியே அமைந்திருந்தது.
எழுச்சியோடு கூடியிருந்த தமிழர்களிடையே உணர்வுப் பெருக்குடன் ‘‘நான் இங்கே விருந்தினராக வரவில்லை. உறவினராக வந்திருக்கிறேன் என்று ஆசிரியர் கூறியவுடன் மகிழ்ச்சி ஆரவாரம் எழுந்தது.’’ நீண்டநாள் விருப்பம் நிறைவேறி, உறவுகளை சந்திக்க இங்கே வந்திருக்கிறோம் என்ற உணர்ச்சிதான் எனக்கு ஏற்படுகிறது. நாட்டின் எல்லைகளும் கண்டங்களும் நம்மைப் பிரித்திருக்கலாம். நமது உணர்வுகளும் இலக்குகளும் பண்பாடும் எப்போதும் நம்மை இணைத்திருக்கின்றன. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதே நமது பண்பாடு. தந்தை பெரியார் என்ற மாமனிதரால் உயர்வு பெற்றோம் என்ற நன்றி உணர்வோடு கூடியிருக்கிறீர்கள். அந்த நன்றி உணர்ச்சியும், மனித நேயப் பண்பாடும்தான் நமது அடையாளம்’’ என்று வந்திருந்த தமிழர்களைப் பாராட்டி ஆசிரியர் உரையைத் தொடங்க அவை உணர்வால் ஒன்றுபட்டது.
அந்நிகழ்ச்சியில் உரையாற்றிய வழக்குரைஞர் துர்கா ஓவன் மற்றும் மேனாள் செனட்டர் லியோ ரியோன்னன் அவர்களது உரைகளைக் குறிப்பிட்டு அவர்களது கருத்துகளைப் பாராட்டி தன் உரையைத் தொடர்ந்தார்.
மேற்குலக நாடுகளில் இருந்த பெண்ணடிமைத் தனத்திற்கும் இந்தியாவில் பெண்ணின் பிறப்பே பாவம் என்றும் தீட்டு என்றும் இழிவுபடுத்தப் பட்டதற்கும் உள்ள வேறுபாடுகளை எடுத்துக் கூறினார். கருவிலேயே அழிப்பது, கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்வது போன்ற கொடுமைகளையும் இராமாயணம், பகவத்கீதை ஆகியவை பெண்களுக்கெதிராக முன்வைத்த கருத்துகளையும் விளக்கினார்.
பெரியார் என்ன சாதித்தார் என்று கேட்பவர்களுக்கு இன்று பெண்கள் பெற்றிருக்கும் உரிமைகளே சாட்சி என்பதையும், இன்னும் பெண்ணின் காதல் திருமண உரிமையை மறுத்து ஆணவக்கொலை செய்யும் கொடுமையையும், ஜாதிஎன்ற நோய்க் கிருமி பரப்பும் அவலங்களை சுட்டிக்காட்டினார். பெண்ணுரிமை என்பது மனித உரிமைதான் என்பதை வலியுறுத்தினார். வரிசையாக ஆசிரியர் எடுத்துக் காட்டிய ஆதார நூல்களும் மேடையில் இருந்த லியோ ரியோன்னன் அவர்களுக்காக இடையிடையே ஆங்கிலத்தில் அவரே விளக்கிய முறையும் கேட்பவர்களுக்கு வியப்பூட்டியது.
ஆசிரியர் உரையின் நடுவில், 75 ஆண்டுகளுக்கு முன்பு, தான் இன்டர்மீடியட் படிக்கும்பொழுது (அப் போதைய பள்ளி மேல்நிலை வகுப்பு ) ‘ சோம லெட்சுமணன்’ என்பவர் எழுதிய ஆஸ்தி ரேலியாவைப் பார்!’ என்ற நூல் துணைப்பாடமாக இருந் ததையும் அதை நேரில் பார்ப்பதற்கு 50 ஆண்டுகள் ஆகி விட்டன என்பதையும் நகைச்சுவையோடு குறிப்பிட்ட போது அவையில் சிரிப்பலை எழுந்தது.
ஆசிரியரின் உரை முடிந்தபோது அரங்கில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள்.இதனைத்தான் ஆங்கிலத்தில் Stanning Ovation என்கிறார்கள்.
சிட்னி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கிருஷ்ணா மிகச் சிறந்த முறையில் இணைப் புரை ஆற்றியதுடன் நிகழ்ச்சிக்கு வருகைதந்த அரசியல் கட்சிகளின் ஆளுமைகளையும் குறிப்பிட்டு அறிமுகம் செய்தார். ஆஸ்திரேலிய பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் துணைத் தலைவர் டாக்டர் ஆரூன் அவர்கள் வழக்குரைஞர் துர்கா ஓவன் மற்றும் மேனாள் செனட்டர் லியோ ரியோன்னன் ஆகியோரின் மனித உரிமை சார்ந்த அரசியல் செயல்பாடுகளை விளக்கி அவர்களை அறிமுகப்படுத்தினார்.
பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் செயற்குழு உறுப் பினர் பொன்ராஜ் நன்றியுரையாற்றும் போது ஆசிரியருடன் தான் உடனிருந்த சில நாட்களின் அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொண்டார். விழாவின் நிறைவாக நிகழ்ச்சியின் வெற் றிக்கு காரண மாக இருந்த டாக்டர் ஆரூண் அவர் களுக்கும் , செயற்குழு உறுப்பினர்கள் தோழர் பொன்ராஜ், தோழர் தேவிபாலா, டாக்டர்சசிகுமார், மற்றும் பல்வேறு கட்சிகளில் இருந்து வந்திருந்த கவுன் சிலராகப் பணியாற்றும் சூசை பெஞ்சமின், சுஜன் செல்வன், மக்கள் பணியாளர் இமானுவேல் செல்வராஜ் , உழைப்பாளர் கட்சியின் வேட்பாளரான இல்வான்பெர்க், ஆகியோருக்கு சிந்தனை வட்டம் அமைப்பின் சார்பாக ஆசிரியர் அவர்கள் சால்வை அணிவித்தார் . இறுதியாக ஆசிரியர் அவர்கள்,’ இந்த அமைப்பை உருவாக்கி, நிகழ்வுகளை ஒருங்கிணைத்து அடிநாதமாக செயல்படும் அண்ணாமலை மகிழ்நன் அவர்களையும் அவரது செயல்பாடுகளுக்கு மிகப்பெரும் துணையாக இருக்கிற இராணி மகிழ்நன் அவர்களையும் பாராட்டுகிறேன் என்று கூறி இருவருக்கும் சால்வை அணிவித்தார். அந்த நேரத்திலும்கூட, இராணி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்ற செய்தியையும் மகிழ்நன் இராணி திருமணம் நடந்த பின்னணியையும் குறிப்பிட்டார்.
தோழர் பொன்ராஜ் அவர்களின் நன்றி உரைக்குப் பின் நாங்கள்மேடையில் இருந்து இறங்கினோம். அப்போது திடீரென்று தோழர் தேவிபாலா எழுந்து பார்வையாளர்களை நோக்கி பேசத் தொடங்கினார்.
(தொடரும்)