புதுச்சேரி, மே 15- புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சார்பாக, புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் “பெரியார் பெருந்தொண்டர் விசாகரத்தினம் நினைவு மேடையில் பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் துணைச் செயலாளர் வி.இளவரசி சங்கர் எழுதிய “உவகையும் அழுகையும்”, “நான் படித்த முதல் புத்தகம்”, “Praised Be Thiruma The Mighty Clouds” (திருமா மழை போற்றுதும் – மொழி பெயர்ப்பு) ஆகிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா 10.5.2025 சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழகப் புதுச்சேரி மகளிரணித் தோழியர்கள் அ.எழிலரசி, சி.சிவகாமி, உமாமகேசுவரி, மோகன்தாசு, பொறியாளர் அனிதா பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தாளர் மற்றும் கல்வியாளருமான சாலை செல்வம் தலைமையில் தோழர் வாசுகி வரவேற்புரை ஆற்றினார். உலகச் சாதனையாளர் எலிசபெத் ராணியும், பேராசிரியர் திவ்யாவும் இணைந்து நெறியாள்கை செய்ய, நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வில், ‘பெண்’ அமைப்பின் நிறுவுநர் தோழர் நர்மதா மூன்று நூல்களையும் வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றினார்.
தோழர்கள் தேன்மொழி கண்ணையன், தேன்மொழி கோபாலன், ஜெ.வாசுகி பாலமுருகன் ஆகியோர் நூல்களின் முதல் படிகளைப் பெற்றுக் கொண்டனர்.
திராவிடர் கழக மகளிரணி மாநில துணைச் செயலாளர் ந.தேன்மொழி ‘நான் படித்த முதல் புத்தகம்’ என்ற நூலைத் திறனாய்வு செய்தார். தொடர்ந்து “Praised Be Thiruma The Mighty Clouds” (திருமா மழை போற்றுதும்) என்ற மொழிபெயர்ப்பு நூலை தி.மு.க. மகளிர் பிரிவு மாநில ஊடகத்துறைப் பொறுப்பாளர் மருத்துவர் ப.மீ.யாழினி அறிமுகம் செய்து உரையாற்றினார். ‘உவகையும் அழுகையும்’ என்ற நூலைப் புதுச்சேரியைச் சேர்ந்த ஆசிரியர் கு.பச்சையம்மாள் திறனாய்வு செய்தார்.
நிலா முற்றம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் நிறுவநர் & இயக்குநர் முனைவர். க.செல்வராணி, திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் இரா. விலாசினி, மதுரை ஆசிரியர் தி.லதா, புதுவை மாநில தி.மு.க. மகளிரணி அமைப்பாளர் ந.காயத்ரி சிறீகாந்த் ஆகியோர் வாழ்த்துரை நல்கினர்.
உலகச் சாதனையாளர் தெ.எலிசபெத் ராணியின் தன்னம்பிக்கைக் கலைக்குழு இசைக்கலைஞர் பெ.பிரசாந்த்தின் எதிரொலி பறையாட்டக் கலைக்குழு, புதுச்சேரி லச்சி & மச்சி கலைக்குழு, ஆகியோரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
நிகழ்வின் நிறைவாக பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் துணைச் செயலாளரும் நூல்களின் ஆசிரியருமான தோழர் வி.இளவரசி சங்கர் அவர்களின் ஏற்புரை – நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.
இவ்வினிய நிகழ்ச்சியில் பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில செயலாளர்கள் சுப.முருகானந்தம், செல்வ.மீனாட்சி சுந்தரம், அரும் பாக்கம் சா.தாமோதரன் மற்றும் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தைச் சேர்ந்த தோழர்கள் அரங்கம் நிறைந்த அளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
புதுச்சேரி, முதுநிலைக் கணக்கு அதிகாரி தி.சங்கர் மற்றும் செல்வி.சாதனா சங்கர் ஆகியோர் விழா ஏற்பாட்டினைச் சிறப்பாக செய்திருந்தார்கள். விழா மேடையில் வரவேற்புரை தொடங்கி நிகழ்ச்சி முழுமையும் மகளிர் மட்டுமே பங்கேற்றுச் சிறப்பித்தது ஒரு குறிப்பிடத்தக்க புதுமையான முயற்சி.